Published:Updated:

`டேங்கர் லாரி... படகுப் பயணம்... தலைக்கு ரூ.500 முதல் 1,000’ - ஆந்திர போலீஸார் வேதனை

ஊரடங்கு
ஊரடங்கு

ஆந்திரா, தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணா நதி மூலம் மாநில எல்லையைக் கடப்பது இருமாநில போலீஸாருக்கும் தலைவலியைக் கொடுத்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் மாணவர்களும் பல்வேறு வழிகளில் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணமாகத் தொடங்கியுள்ளனர். உணவு, உறக்கம் தொலைத்து இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். ``காசு இல்லன்னா கூட சொந்த ஊர்ல வாழ்ந்துடுவோம். இந்த நகரத்துல எங்கள் நாள்களை எப்படிக் கழிப்பது. வேலை இல்லைன்னா கூலி இல்லை, கூலி கிடைக்கலைன்னா சாப்பிட உணவு இல்லை எப்படி இங்கே இருப்பது” என்ற கேள்வியை நம்மிடம் முன் வைக்கின்றனர்.

இந்தியாவில்  ஊரடங்கு
இந்தியாவில் ஊரடங்கு

இந்தியாவில் முதலில் ஏப்ரல் 14-ம் தேதி வரைதான் ஊரடக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு கூலித்தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய அரசு முதலில் அமல்படுத்திய 21 நாள் ஊரடங்கின்போதே கையிலிருந்த பணம் எல்லாம் செலவழிந்துவிட்டது. மேற்கொண்டு நாள்களை எப்படி நகர்த்துவது என்ற அச்சத்தில்தான் இவர்கள் பயணமாகின்றனர்.

`கணவர் உடலைக்கொண்டு வர பணமில்லை; வைக்கோல் பொம்மை மூலம் இறுதிச்சடங்கு’- கலங்கும் உ.பி பெண்

கிருஷ்ணா நதி ஆந்திராவையும் தெலங்கானாவையும் இரண்டாகப் பிரிக்கிறது. கடந்த சில நாள்களாகக் கூலித்தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களைப் பரிசல்கள் மூலம் மாநில எல்லைகளைக் கடக்கும் சம்பவங்கள் நடந்துவருகிறது. தலைக்கு 500 முதல் 1,000 வரை வசூலித்துக்கொண்டு பரிசல்களில் அழைத்து வருவது இருமாநில காவல்துறையினருக்குத் தலைவலியைக் கொடுத்துள்ளது.

ஊரடங்கு
ஊரடங்கு

கொரோனா ஊரடங்கால் போலீஸாருக்குத் தலைவலி!

பால் போன்ற அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் மறைந்துகொண்டு சென்ற நபர்களையும் போலீஸார் தடுத்து வைத்துள்ளனர். இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``கிராமப்புற பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது மாணவர்கள் சிலர் ஆந்திராவில் இருந்து தெலங்கானா செல்வதற்காகப் பால் வண்டியில் மறைந்து சென்றனர், அவர்களைத் தடுத்து நிறுத்தினோம்.

அதுமட்டுமல்ல படகுகள் மூலமும் மாநில எல்லைகளைக் கடக்க முயற்சி செய்கின்றனர். இதற்காக படகு உரிமையாளர்கள் தலைக்கு ரூ.500 முதல் 1,000 வரை வசூலில் இறங்குகின்றனர். கிருஷ்ணா நதியானது ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களிலிருந்து தெலங்கானாவில் சூர்யாபேட் மற்றும் நல்கொண்டா மாவட்டங்களைப் பிரிக்கிறது.

காவல்துறையினர்
காவல்துறையினர்

நல்கொண்டா போலீஸார் சுங்கச்சாவடி பகுதியில் 200 புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பால் வண்டியின் டேங்கர்களில் சிலர் மறைந்துகொண்டு பயணம் செய்தது சோதனையில் தெரியவந்தது. சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஓட்டுநர்களுக்குப் பணம் கொடுத்து பயணம் செய்கின்றனர்” என வேதனை தெரிவிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு