Published:Updated:

`மாவோயிஸ்ட்டுகளுக்குத் துணையாக நிற்பது யார்?’- சி.பி.எம் விமர்சனத்தால் கேரளாவில் வெடித்த சர்ச்சை

கோழிக்கோட்டை மையமாகக்கொண்டு செயல்படும் அமைப்புகள், மாவோயிஸ்ட்டுகளுக்கு உரமிட்டு தண்ணீர் ஊற்றுகிறார்கள் என சி.பி.எம் மாவட்டச் செயலாளர் பேசியது சர்ச்சையின் தொடக்கம்.

சி.பி.எம். மாவட்டச் செயலாளர் மோகனன் மாஸ்டர்
சி.பி.எம். மாவட்டச் செயலாளர் மோகனன் மாஸ்டர்

கேரளமாநிலம் அட்டப்பாடியில், நக்ஸல் தடுப்புப் பிரிவான தண்டர்போல்ட் போலீஸார், கடந்த மாதம் 28-ம் தேதி நான்கு மாவோயிஸ்ட்டுகளை சுட்டுக்கொன்றனர். இதில், மேலும் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட்டுகளை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு, கேரளத்தை ஆளும் சி.பி.எம் கட்சிக்கு அதன் கூட்டணிக் கட்சியான சி.பி.ஐ கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய கோழிக்கோடு மாவட்ட சி.பி.எம் செயலாளர் மோகனன் மாஸ்டர், "சில தீவிரவாத அமைப்புகள் மாவோயிஸ்ட்டுகளுக்கு பின் துணையாக இருக்கின்றன. முஸ்லிம் தீவிரவாதிகளுக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே தொடர்பு உண்டு. கோழிக்கோட்டை மையமாகக்கொண்டு செயல்படும் அமைப்புகள், மாவோயிஸ்ட்டுகளுக்கு உரமிட்டுத் தண்ணீர் ஊற்றுகிறார்கள்" என்று பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

முஸ்லீம் லீக் செயலாளர் கே.பி.ஏ.மஜீத்
முஸ்லீம் லீக் செயலாளர் கே.பி.ஏ.மஜீத்

இதுகுறித்து கேரள மாநில முஸ்லிம் லீக் செயலாளர் கே.பி.ஏ.மஜீத் கூறுகையில், "மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறார்கள். இப்போது கைதுசெய்யப்பட்டிருப்பவர்கள் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர்கள். அப்படியானால், அவர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைப்பதற்கு சி.பி.எம் வாய்ப்பு ஏற்படுத்தியது என்று கருதலாமா... மாவோயிஸ்ட் மற்றும் தீவிரவாதிகளின் அடைக்கலமாக சி.பி.எம் மாறியிருக்கிறது என்றால், அதற்கு பொறுப்பு ஏற்காமல் அந்தக் கட்சி ஒழிந்துகொள்ள முடியாது" என்றார். தனது கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளதை மறைக்கவும், தங்களை தற்காத்துக்கொள்ளும் முயற்சியின் வெளிப்பாடுதான் இந்தப் பேச்சு என மோகனன் மாஸ்டருக்கு சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், கேரள சி.பி.எம் மாநிலக் குழு உறுப்பினர் பி.ஜெயராஜன், கோழிக்கோடு மாவட்டச் செயலாளருக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளார். பி.ஜெயராஜன், தனது ஃபேஸ்புக் பதிவில், "மோகனன் மாஸ்டர் கூறியதைக் கேட்டு கொதித்தவர்கள், தீவிரவாத சிந்தனை உடையவர்கள். மத தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவிசெய்வது உண்மைதான். மோகனன் மாஸ்டர் கூறியது முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு எதிரான கருத்து. ஆனால், சிலர் அதை முஸ்லிம் மத நம்பிக்கை கொண்டவர்களுக்கு எதிரானது என திருப்பிவிடப்பார்க்கிறார்கள்.

பி.ஜெயராஜன்
பி.ஜெயராஜன்

இஸ்லாம் தீவிரவாதம் பற்றிக் கூறினால், முஸ்லிம் லீக்-க்கு ஏன் கோபம் வருகிறது. இந்து தீவிரவாதம் பற்றிப் பேசினால், சாதாரண இந்துக்கள் எங்கள் பக்கம் நிற்பார்கள். அதுபோல முஸ்லிம் தீவிரவாதம் பற்றிப் பேசினால், சாதாரண முஸ்லிம்கள் எங்கள் கட்சிக்குத் துணையாக நிற்பார்கள்" என்றார்.

சி.பி.எம் மாவட்டச் செயலாளரின் முஸ்லிம் தீவிரவாதம் குறித்த பேச்சும், அதுதொடர்பான சர்ச்சையும் கேரளத்தில் தொடர்கிறது.