Published:Updated:

`அதி தீவிரத்திலிருந்து சூப்பர் புயலாக மாறும் ஆம்பன்?’ - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஆம்பன் புயல்
ஆம்பன் புயல்

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆம்பன் புயல், சூப்பர் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தமானுக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில், கடந்த 13-ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை, அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. ‘ஆம்பன்’ (UM-PUN) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், வட மேற்கு நோக்கி நகர்ந்துவரும் 20-ம் தேதி ஒடிசா, மேற்குவங்கம், வங்கதேசத்துக்கு இடையே கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டது.

புயல்
புயல்
Representational image

புயல் காரணமாக வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 65 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், வங்கக்கடல், மேற்கு வங்கக் கடல், குமரிக் கடல், கச்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆம்பன் புயலால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும். கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈரப்பதத்தால் குறைந்த அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதேநேரம், வெப்பச் சலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென் தமிழகக் கடலோரத்தில் ஓரிரு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த ஆம்பன் புயல், சூப்பர் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ‘வங்காள விரிகுடாவின் மையப்பகுதி மீது உள்ள ஆம்பன் புயல், கடந்த 6 மணி நேரத்தில் 13 கி.மீ வேகத்தில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மிகவும் கடுமையான சூறாவளி புயலாக மாறி தீவிரமடைந்துள்ளது. இது, அடுத்த 6 மணிநேரத்தில் மேலும் தீவிரமடையக்கூடும். இந்தச் சூறாவளி, வடமேற்கு வங்காளவிரிகுடா வழியாக இன்னும் வேகமாக நகர்ந்து, வங்கதேசத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இது, சூப்பர் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆம்பன் புயல்
ஆம்பன் புயல்
Twitter /@India Met. Dept.

இதனால் ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பலத்த காற்றுடன் மழை பொழியும் எனவும் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

“ஆம்பன் புயல் கரையைக் கடக்கும்போது, 110 முதல் 130 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒடிசாவின் பாலசோர், பத்ராக், ஜாஜ்பூர், மயூர்பன்ஜ் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படலாம்” என புவனேஷ்வரை சேர்ந்த ஆய்வாளர் உமாசங்கர் தாஸ் ஏஎன்ஐ ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

`கேரளா, கர்நாடகாவுக்கு மழை; ஒடிசாவின் 12 மாவட்டங்களுக்கு அலர்ட்’ - வலுப்பெறும் ஆம்பன் புயல்

மேலும், இன்று மாலை 4 மணிக்கு, பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்தப் புயலால் வட ஒடிசா பகுதிகள்தான் அதிகமாக பாதிக்கப்படும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு