Published:Updated:

`கேரளா, கர்நாடகாவுக்கு மழை; ஒடிசாவின் 12 மாவட்டங்களுக்கு அலர்ட்’ - வலுப்பெறும் ஆம்பன் புயல்

புயல்
புயல் ( Representational image )

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் இந்த வருடம் பிப்ரவரி மாதமே கோடை தொடங்கிவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 4-ம் தேதி முதல் கத்தரி வெயிலும் வாட்டி வதைத்துவருகிறது. இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி அந்தமான் அருகே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், இது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று புயலாக வலுப்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

காற்று
காற்று
Representational image

இந்தப் புயலுக்கு `ஆம்பன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆம்பன் புயல் நாளை வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும் 20-ம் தேதி ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தை ஒட்டிய கடற்பகுதியில் கரையைக் கடக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக வங்கக் கடல் பகுதியில் 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் வங்கக்கடல், மேற்குவங்கக் கடல், குமரிக் கடல், கச்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

`குணமடைந்த பின்னும் கொரோனா பாசிட்டிவ்... அச்சப்படத் தேவையில்லை!’ - விளக்கும் உலக சுகாதார நிறுவனம்

ஆம்பன் புயலால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈரப்பதத்தால் குறைந்த அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை, அதேநேரம் வெப்பச் சலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென் தமிழக கடலோரத்தில் ஓரிரு பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை
மழை
Representational image

வரவிருக்கும் ஆம்பன் புயலைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவின் 12 மாவட்டங்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஒடிசாவின் சிறப்பு நிவாரண ஆணையர் பிரதீப் ஜீனா, ``தற்போது புயலின் பாதை தொடர்பாகத் தெளிவான எந்த அறிகுறிகளும் இல்லை. ஆனால், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி புயலின் நிலைமையைச் சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருகிறது” எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு