Published:Updated:

டவ்தே புயல்: `தயார்நிலையில் இருங்கள்..!’ - மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவுறுத்தல்

மும்பை கடற்பாலம்
மும்பை கடற்பாலம்

அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள டவ்தே புயலால் ஏற்படும் கனமழையைச் சமாளிக்க தயார்நிலையில் இருக்கும்படி முதல்வர் உத்தவ் தாக்கரே மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் டவ்தே புயல் காரணமாக கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொச்சி அருகே 240 கடல் மைல் தூரத்தில் மையம்கொண்டிருந்த புயல், சனிக்கிழமை வேகமெடுத்து கோவா, மகாராஷ்டிரா வழியாக குஜராத் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்தப் புயல் வரும் 18-ம் தேதி குஜராத்தில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மகாராஷ்டிராவில் புயல் மூலம் ஏற்படும் கனமழையைச் சமாளிக்க மகாராஷ்டிரா அரசு தயாராகிவருகிறது. குறிப்பாக மும்பை, ராய்கட், பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க் போன்ற கடற்கரையோர மாவட்டங்கள்தான் அதிகமாக பாதிக்கப்படும் என்பதால் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தினரை முதல்வர் உத்தவ் தாக்கரே உஷார்படுத்தியுள்ளார்.

மேக மூட்டம்
மேக மூட்டம்

பலத்த காற்றுடன் மழைபெய்ய வாய்ப்பு இருக்கிறது. மீட்புக் கருவிகள், போதிய ஆட்களுடன் தயார்நிலையில் இருக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர்களை முதல்வர் கேட்டுக்கொண்டிருக்கிறார். மும்பையில் ஒடிந்து விழும் நிலையிலிருக்கும் மரங்கள் வெட்டப்பட்டுவருகின்றன. தாழ்வான பகுதிகளில் மழைநீரை அகற்ற மோட்டார் பம்ப்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. மும்பையிலுள்ள ஆறு முக்கியக் கடற்கரைகளில் மீட்புப்படையினர் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால், பாதிக்கப்படும் மக்களுக்குத் தற்காலிகமாக தங்கும் முகாம்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் இரண்டு நாள்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

புயல் காரணமாக அதிக காற்று வீசினால் தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றவும் மாநகராட்சி அதிகாரிகள் தயார்நிலையில் இருக்கின்றனர். மும்பையிலுள்ள பாந்த்ரா-ஒர்லி கடல் பாலமும் தற்காலிகமாக இரண்டு நாள்கள் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் இரண்டு நாள்களுக்கு கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று மும்பை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டிருக்கிறது. மும்பை, தானேயில் மஞ்சள் எச்சரிக்கையையும், பால்கரில் பச்சை எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தீயணைப்புத்துறையினரும் முழு உஷார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மும்பையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கேரளா-கர்நாடகா, கோவா-மகாராஷ்டிரா கடற்கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதியை சேர்ந்தவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. புயல் காரணமாக விமானப் போக்குவரத்தும் பாதிக்க வாய்ப்பிருப்பதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சென்னை, திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு, மும்பை, புனே, கோவா, அகமதாபாத் நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் பாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் புயலால் பாதிப்பு ஏற்படும் இடங்களில் மீட்புப் பணிகளுக்காக பேரிடர் மீட்புப் படையினர் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு