Published:Updated:

`13வது நாளாக உண்ணாவிரதம்; சுயநினைவு இழப்பு'- மருத்துவமனையில் ஸ்வாதி மலிவால்!

ஸ்வாதி மலிவால்
ஸ்வாதி மலிவால் ( ani )

கடந்த 3ம் தேதி உண்ணாவிரதம் தொடங்கிய மலிவால் இன்னும் தனது உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை. 13வது நாளாக அவரது போராட்டம் நீடித்துவருகிறது

இந்தியாவில் சமீபகாலமாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் எரித்துக் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதை எதிர்த்து எவ்வளவு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்தாலும் மற்றொரு புறம் இந்தச் சம்பவங்கள் நடப்பது மட்டும் குறைந்தபாடில்லை. அதிலும் இதுபோன்ற குற்றங்களில் சிக்கி கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க பல ஆண்டுகள் ஆகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. டெல்லி மாணவி நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு இன்னும் தண்டனை விதிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

representational image
representational image

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஹைதராபாத் பெண் மருத்துவர், உன்னாவ் பெண் எரிப்பு விவகாரம் போன்ற தொடர் சம்பவங்களுக்குப் பிறகு பாலியல் குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டுமென்ற குரல் நாடு முழுவதும் வலுத்து வருகின்றன. இதற்கிடையே, பாலியல் வன்கொடுமை வழக்குகளை ஆறுமாதங்களில் விசாரித்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் திசா மசோதாவை உடனடியாக இந்தியா முழுவதும் அமல்படுத்தவேண்டும் எனக் கூறி டெல்லி மகளிர் ஆணைய தலைவியான ஸ்வாதி மலிவால் டெல்லி ராஜ்கோட்டில் உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.

கடந்த 3ம் தேதி உண்ணாவிரதம் தொடங்கிய மலிவால் இன்னும் தனது உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை. 13வது நாளாக அவரது போராட்டம் நீடித்துவருகிறது. இதனால் அவரது உடல் எடை 8 கிலோ வரை குறைந்துள்ளது. மருத்துவர்கள் அவரை பரிசோதித்து உடனடியாக உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால் மலிவால் அதை ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் இன்று காலை திடீரென மலிவால் உண்ணாவிரதம் செய்த இடத்தில் மயக்கமடையவே அவரை டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐ.சி.யூ.வில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்வாதி மலிவால்
ஸ்வாதி மலிவால்
ani

உண்ணாவிரதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள மலிவால், ``பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் ஆறு மாதத்துக்குள்ளாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ராஜஸ்தானில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் அலறல் நம்மை சும்மா இருக்கவிடாது. அவர்கள் அனுபவித்திருக்கும் சித்ரவதைகளை நினைக்கும்போது நமக்கும் நடுக்கம் வருகிறது. எனவே, இதுமாதிரியான குற்றங்களுக்குக் கடுமையான சட்டங்கள் நிறைவேற்றுவது மட்டும்தீர்வு இல்லை. அதை எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றுகிறோம் என்பதுதான் முக்கியம்" எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு