Published:Updated:

`சில வழக்குகளில் மரண தண்டனை அவசியமாகிறது!’- மறு சீராய்வு மனுவில் உச்சநீதிமன்றம் கருத்து

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

மரண தண்டனைக் குற்றவாளி தாக்கல் செய்த மறு சீராய்வு மனு மீதான விசாரணையில், சில வழக்குகளின் மரண தண்டனையே இறுதித் தீர்ப்பாக இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த சலீம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்குப் பெண் வீட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், 2008-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி ஷப்னமைத் தவிர அவரது வீட்டிலிருந்த அனைவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இது பற்றி போலீஸாரிடம் தெரிவித்திருந்த ஷப்னம், `இரவு திடீரென ஒரு மர்மக் கும்பல் வீட்டுக்குள் நுழைந்து வீட்டிலிருந்த 7 பேரையும் தாக்கி கொலை செய்துவிட்டனர்’ என்று கூறியுள்ளார்.

கொலை
கொலை
மாதிரி புகைப்படம்

இதையடுத்து, வழக்கு பதிவுசெய்து நடைபெற்ற விசாரணையில் ஷப்னமும் அவரின் காதலன் சலீமும் இணைந்துதான் குடும்பத்தினரைக் கொலை செய்துள்ளனர் என்ற விவகாரம் தெரியவந்தது. விஷம் கலந்த உணவை உண்டதால் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்ததாகப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களில் பத்து மாத குழந்தையும் இருந்துள்ளது. இதையடுத்து, ஷப்னம் மற்றும் அவரின் காதலன் சலீம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

எவ்வளவு நீளக் கயிறு... என்னென்ன பரிசோதனைகள்... எப்படி நிறைவேற்றப்படும் தூக்குத் தண்டனை? #Nirbhaya

இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம் 2010-ம் ஆண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவர்களின் மனுவை விசாரித்த நீதிமன்றம் உள்ளூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால், தண்டனை தேதி மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

மரண தண்டனை
மரண தண்டனை
மாதிரி புகைப்படம்

இதையடுத்து, 2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இருவரும் கருணை மனுத் தாக்கல் செய்தனர். ஆனால், உச்சநீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்துவிட்டது. பின்னர் தங்களின் மரண தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் குற்றவாளிகள் இருவரும் சமீபத்தில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே, நீதிபதிகள் எஸ்.ஏ நசீர் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், அவர்களின் நன்னடத்தையைக் காரணம் காட்டி அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டு என வாதாடியுள்ளனர்

இரு தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு பேசிய தலைமை நீதிபதி அமர்வு, ``ஒவ்வொரு குற்றவாளியும் தங்களை அப்பாவி என்றே கூறிக்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் செய்த குற்றம் இல்லை என்று ஆகாது. குற்றவாளிகள் தரப்பில் என்ன நியாயம் உள்ளது என்று பார்த்து அவர்களின் தண்டனையைக் குறைக்க முடியாது. அதைவிடப் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தைத்தான் முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

சில வழக்குகளில் மரண தண்டனை இறுதித் தீர்ப்பாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு மரண தண்டனை குற்றவாளி அதை எதிர்த்து கேள்வி கேட்க முடியும் என நினைக்கக் கூடாது. மரண தண்டனை தொடர்பாக முடிவில்லாமல் போராடிக்கொண்டிருக்கவும் கூடாது. பத்து மாத குழந்தை உட்பட 7 பேரின் கொலை வழக்கில் குற்றவாளிகளின் உரிமையில் மட்டும் கவனம் செலுத்த நாங்கள் விரும்பவில்லை. சமூகம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில்தான் நீதிமன்றங்கள் நீதியை நிலைநாட்டி வருகின்றன. குற்றவாளிகளின் நன்னடத்தை காரணமாக அவர்களை மன்னித்துவிட முடியாது, சட்டப்படிதான் தீர்ப்பு வழங்க முடியும்” எனக் கூறி இந்த மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.

பின் செல்ல