Published:Updated:

ஆர்யன் கான் கைது: `அதிகாரிமீது குற்றம்சாட்டிய அமைச்சருக்குக் கொலை மிரட்டல்!’ - பாதுகாப்பு அதிகரிப்பு

நடிகர் ஷாருக் கான் மகனைக் கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிக்கு எதிராகக் குற்றம்சாட்டிய மகாராஷ்டிரா அமைச்சருக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதனால் அவருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் கைதுசெய்தனர். இந்தக் கைது நடவடிக்கையை முன்னின்று நடத்திய மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷாருக் கான் மகனுடன் கைது செய்யப்பட்டவர்களில் பாஜக பிரமுகரின் உறவினர் உட்பட சிலரை அதிகாரிகள் விடுவிடுத்துவிட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

நவாப் மாலிக்
நவாப் மாலிக்

இதே போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேதான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நவாப் மாலிக் மருமகன் சமீர் கானை போதைப்பொருள் பறிமுதல் தொடர்பாகக் கைதுசெய்தார். ஆனால் அவர் இப்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கு எதிராகக் குற்றம்சாட்டிய மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்குக்குப் பல்வேறு மாநிலங்களிலிருந்து கொலை மிரட்டல் வந்துகொண்டிருக்கிறதாம்.

ஷாருக் கான் மகனைக் கைதுசெய்த அதிகாரி சமீர் வான்கடே, மாநில அரசால் வேவு பார்க்கப்பட்டாரா?!

இதையடுத்து மாநில அரசு நவாப் மாலிக்குக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளது. ஒய் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு கொடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதோடு இது குறித்து நவாப் மாலிக் மீண்டும் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில் ``போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் என் மருமகனைச் சிக்க வைத்துள்ளனர். விளம்பரத்துக்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர். கோர்ட் உத்தரவு மூலம் நானும் என்னுடைய குடும்பத்தினரும் அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார். அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி வான்கடேவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

ஆர்யன் கான்
ஆர்யன் கான்

மற்றொரு புறம் ஷாருக் கான் மகன் வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்தவர் திடீரென காணாமல்போய்விட்டார் என்ற தகவலும் பரவிவருகிறது. அவரைக் கைது செய்ய புனே போலீஸார் அனைத்து விமான நிலையங்களையும் உஷார்ப்படுத்தியிருக்கின்றனர். ஜனவரி 13-ம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 200 கிலோ கஞ்சாவை பிரிட்டன் பிரஜையான கரன் சஜ்னானி வீட்டிலிருந்து பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில்தான் அமைச்சர் மாலிக் மருமகன் சமீர் கான் கைதுசெய்யப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு