Published:Updated:

டெல்லி : `என் மகனை காப்பாற்றுங்கள்!’ - ஜூனியருக்காக ஒன்றிணைந்த 100 மருத்துவர்கள்

மருத்துவர்
மருத்துவர்

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு ஜூனியர் மருத்துவரை காப்பாற்ற பிற மருத்துவர்கள் இணைந்து உதவியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

டெல்லி அரசு பாபா சாஹிப் அம்பேத்கர் மருத்துவமனையில் ஜூனியர் மருத்துவராகப் பணிபுரிந்து வருபவர் 27 வயதாக ஜோகிந்தர். விவசாயியான இவரின் தந்தை மிகவும் சிரமப்பட்டு தன் மகனை மருத்துவம் படிக்க வைத்து அழகு பார்த்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவியதும் அதற்காக முன் வரிசையில் நின்று பலரது உயிரையும் காப்பாற்றியுள்ளர் ஜோகிந்தர். ஆனால், கொரோனா அந்த ஜூனியர் மருத்துவரையும் விட்டுவைக்கவில்லை. கடந்த ஜூன் 27 -ம் தேதி வைரஸால் பாதிக்கப்பட்ட அவர், தான் பணி புரிந்த மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா
கொரோனா

ஜோகிந்தர் உடல்நிலை தொடர்பான விஷயம் மத்திய பிரதேசத்தில் உள்ள அவரது தந்தை ராஜேந்தர் சௌத்ரிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஜூனியர் மருத்துவரின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையின் ஐ.சி.யு பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைளிக்கப்பட்டுள்ளார். ஆனால், தனியார் மருத்துவமனையில் தன் மகனுக்கு சிகிச்சையளிக்க போதுமான பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார் ராஜேந்தர். இந்நிலையில் தன் மகனின் உடல்நிலை தொடர்பாக உருக்கமாக வீடியோ பதிவு செய்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ராஜேந்தர்.

கொரோனா: தந்தை மரணம்; மருத்துவமனையில் மகன்! - நெகிழவைத்த தன்னார்வலர்கள் உதவி

இதைப் பார்த்த டெல்லி முழுவதும் உள்ள பல மருத்துவர்கள் இணைந்து ஜோகிந்தரின் மருத்துவ உதவிக்கு நிதி கொடுத்து உதவியுள்ளனர். `பணத்தைப் பற்றி கவலைப் படாதீர்கள். நாங்கள் உதவி செய்கிறோம்’ என்று 100-க்கும் அதிகமான மருத்துவர்கள் மெசேஜ் அனுப்பி பண உதவியும் செய்துள்ளனர். ஜோகிந்தருடன் இணைந்து பணி செய்த மருத்துவர்கள் மட்டும் சுமார் 3 லட்சம் ரூபாய் வரை நிதி வழங்கியுள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஜூனியர் மருத்துவருக்கு உதவும்படி அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

பண உதவி
பண உதவி
மாதிரி புகைப்படம்

“ஊர், பெயர் தெரியாத பலர் என் மகனுக்காக உதவுவார்கள் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என ஜோகிந்தரின் தந்தை ராஜேந்தர் தெரிவித்துள்ளார். ஜோகிந்தரின் உடல்நிலை பற்றி ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை தரப்பில் கூறும்போது, ``தற்போது ஐ.சி.யு-வில் சிகிச்சை பெற்று வரும் ஜோதிந்தருக்கு மிகவும் குறைந்த அளவு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அவர் குணமடைந்து வீடு திரும்பும்போது எங்களால் முடிந்த உதவியை நிச்சயம் செய்வோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோகிந்தர் பற்றிப் பேசியுள்ள பாபா சாஹிப் அம்பேத்கர் மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த மருத்துவர் ஒருவர், ``நான் இதுவரை ஜோகிந்தரை சந்தித்துப் பேசியது இல்லை. ஆனால், நாங்கள் ஒரே இடத்தில்தான் வேலை செய்துள்ளோம். கொரோனா எங்களை இன்னும் நெருக்கமாகிவிட்டது. நாங்கள் அனைவரும் இணைந்து போராடி கொரோனாவை வெல்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார். ஜூனியர் மருத்துவருக்காக மற்ற மருத்துவர்கள் உதவிய சம்பவம் டெல்லியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு