Published:Updated:

பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பறந்த மெயில்... 2 மணி நேரத்தில் தற்கொலையைத் தடுத்த டெல்லி போலீஸார்

பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரதமர் போரிஸ் ஜான்சன்

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் இங்கிலாந்து பிரதமருக்கு இமெயில் அனுப்பிவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 43 வயது பெண், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் அலுலவக மின்னஞ்சலுக்கு ஒரு செய்தி அனுப்பியுள்ளார். அதில் ``நான் மிகவும் மனமுடைந்து உள்ளேன். யாரும் எனக்கு உதவவில்லையெனில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் நான் தற்கொலை செய்துகொள்வேன்” எனக் குறிப்பிட்டிருந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரதமர் அலுவலகம், உடனடியாக இங்கிலாந்தில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு தொடர்புகொண்டு அதன் மூலம், இந்திய வெளியுறவுத்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் விரைந்து செயல்பட்டு இந்தத் தகவலை டெல்லி போலீஸாருக்குத் தெரிவித்துள்ளனர். பின்னர் டெல்லி போலீஸாரும், ரோஹிணி காவல்நிலைய போலீஸாரும் இணைந்து செயல்பட்டு, மெயில் அனுப்பிய பெண்ணைத் தேடியுள்ளனர். அந்தப் பெண்ணை போலீஸார் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது அவர் அழைப்பை ஏற்க மறுத்துள்ளார். தொடர்ந்து அவரது தொலைபேசி எண்ணை வைத்து அவரது முகவரியைத் தேடியுள்ளனர் போலீஸார். 2 மணி நேரத்துக்குள் தற்கொலை செய்யவுள்ளதாக அந்தப் பெண் தெரிவித்திருந்ததால் அதற்குள் அவரைக் கண்டுபிடிப்பது டெல்லி போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.

டெல்லி, ரோஹிணி பகுதியில் செக்டார் 21 என்பதை மட்டுமே கண்டுபிடித்த போலீஸார் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று சுமார் 50 வீடுகளின் கதவைத் தட்டி சோதனை செய்துள்ளனர். இறுதியாக ஒரு வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியபோது, உள்ளே இருந்த பெண் கதவைத் திறக்க மறுத்து போலீஸாருக்கு எதிராகக் கூச்சலிட்டு, `தயவு செய்து சென்றுவிடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்களை வரவழைத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு 43 வயது நிரம்பிய ஒரு பெண் மட்டும் சுமார் 16 பூனைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

பெண்
பெண்
மாதிரிப் புகைப்படம்

தன் வீட்டினுள் போலீஸாரைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக அழத்தொடங்கியுள்ளார். பின்னர் பெண் காவலர்கள் அவரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் அவருக்கு 10 வருடங்களுக்கு முன்பு விவாகரத்தானதாகவும் அப்போதிலிருந்து தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார். டெல்லியில் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்த அவர், சில வருடங்களுக்கு முன்பு தன் வேலையையும் ராஜினாமா செய்துள்ளார். வீட்டில் பூனைகளையே தன் உலகமாகக் கருதி வாழ்ந்து வந்த அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து டெல்லி போலீஸார் அவருக்கு உதவ முன்வந்து, மனநல மருத்துவரை அழைத்து அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். காலையில் அவர் பழைய நிலைக்குத் திரும்பியவுடன் இங்கிலாந்து பிரதமருக்கு மெயில் அனுப்பியதன் காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது, அப்போது, ``எனக்கு நிறைய கடன்கள் உள்ளன. வீட்டின் வாடகையும் கட்டப்படாமல் உள்ளது அதற்கு உதவி கேட்கவே இங்கிலாந்து பிரதமருக்கு மெயில் செய்தேன்” என்று கூறியுள்ளார்.

``இந்த விவகாரம் தொடர்பாக இரவு 1 மணிக்கு எனக்கு போன் காலும் மெயிலும் வந்தன. அதன் பிறகு மெயிலில் இருந்த தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டும் பயன் இல்லை. பிறகு போலீஸ் படையுடன் அந்தப் பெண்ணின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தோம். தற்போது அவர் நல்ல நிலையில் உள்ளார், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தப் பெண், காவலர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்” என்று டிசிபி பி.எம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு