Published:Updated:

`எனக்கும் ஒரு மகள் இருந்தாள்.. அவளுக்கு என்ன ஆனது?!’- நிர்பயா வழக்கில் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

என் மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது. ஜனவரி 22-ம் தேதி எங்களுக்குப் பெரிய நாளாக இருக்கும் என ஆஷா தேவி கூறினார்.

ஆஷா தேவி
ஆஷா தேவி

டிசம்பர் 16.. இந்த நாளை டெல்லி மக்களால் எளிதில் மறக்க முடியாது. 2012-ம் ஆண்டு இந்த நாளில்தான் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி சாலையில் வீசப்பட்டிருந்தார். அதிகாலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. மாணவியை அந்தக்கும்பல் கடுமையாக சித்ரவதை செய்து மருத்துவ அறிக்கையின் மூலம் தெரியவந்தது. தலைநகர் டெல்லிக்கு மாணவர்கள் படையெடுத்தனர். நிர்பயாவுக்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். உயர் சிகிச்சைக்காக மலேசியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நிர்பயா போராட்டங்கள்
நிர்பயா போராட்டங்கள்

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் கைதான 6 நபர்களில் ஒருவர் சிறார் என்பதுதான். அந்த நபர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வழக்கில் கைதான ராம் சிங், திகார் சிறையிலே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகேஷ்சிங், வினய்சர்மா, அக்ஷய் சிங், பவன்குமார் குப்தா ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

`7 ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருக்கிறேன்; நீதி வேண்டும்!' - கலங்கும் நிர்பயாவின் தாய்

`என் மகளை என்னிடம் இருந்து பிரித்துச் சென்று 7 வருடங்கள் ஆகின்றன. நீதி கிடைக்கும் எனக் காத்திருக்கிறேன்’ என தன் வேதனையை வெளிப்படுத்தியிருந்தார் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி. குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள் நான்குபேரையும் ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிர்பயா
நிர்பயா

நிர்பயாவின் தாய், தந்தை இருவரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். அதேபோல் குற்றவாளிகளின் குடும்பத்தினரும் நீதிமன்றத்துக்கு வருகை புரிந்திருந்தனர். நீதிபதி தீர்ப்பு வழங்கியதையடுத்து குற்றவாளி முகேஷ் சிங்கின் தாய் நிர்பயாவின் தாயாரிடம் சென்று சேலையைப் பிடித்தவாறு கெஞ்சினார். `தயவுசெய்து என் மகனை மன்னித்துவிடுங்கள். அவனுடைய வாழ்க்கைக்காக நான் உங்களிடன் கெஞ்சுகிறேன்’ எனக் கண்ணீர் வடித்தார். `எனக்கும் ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு என்ன ஆனது. நான் எப்படி மன்னிக்க முடியும். என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என 7 வருடங்களாக காத்திருக்கிறேன்’ என்றார். நீதிமன்ற வளாகத்துக்குள் அமைதி காக்கும்படி நீதிபதி கூறினார்.

தீர்ப்புக்குப் பின்னர் பேசிய ஆஷா தேவி, `என் மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது. ஜனவரி 22-ம் தேதி எங்களுக்குப் பெரிய நாளாக இருக்கும். இந்தத் தீர்ப்பின் மூலம் மக்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை ஏற்படும்’ என்றார். `நீதிமன்றத்தின் தீர்ப்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். குற்றவாளிகள் ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள். இந்த முடிவு இதுபோன்ற குற்றங்களைச் செய்யும் நபர்களுக்கு அச்சத்தைத் தூண்டும்" எனக் கூறினார்.

ஆஷா தேவி
ஆஷா தேவி

குற்றவாளிகள் நால்வரும் திகார் சிறை எண்.3-ல் அடைக்கப்பட்டுள்ளனர். நான்கு பேரையும் தனித்தனி சிறையில் அடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. குடும்பத்தினரை ஒரு முறை மட்டுமே சந்திக்க அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.