Published:Updated:

`எங்களுக்கு வர வேண்டிய தடுப்பூசிகளை மத்திய அரசு தடுக்கிறது!' - டெல்லி துணை முதல்வர் குற்றச்சாட்டு

``மாநிலங்களின் தேவையை அறிந்து மத்திய இதுபோன்ற நேரத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு, உள்நாட்டு தேவைக்கு என்ன வழியோ அதைச் செய்ய வேண்டும்."

டெல்லியில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து வந்தது. உயிரிழப்புகளும் கணிக்கப்பட்டதை விட அதிகமாக இருந்தன. மத்திய அரசு போதிய அளவு ஆக்சிஜன் வழங்காததால் கொரோனா நோயாளிகளின் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் தலையிட்டு டெல்லிக்கு போதிய ஆக்சிஜன் கொடுக்க உத்தரவிட்டது.

டெல்லி அரசு, வரும் 17-ம் தேதி வரை பொதுமுடக்கத்தை அமல்படுத்தி இருக்கிறது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மருத்துவப் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்த டெல்லி அரசு, சோதனைகளையும் அதிகப்படுத்தியது. இதையடுத்து தற்போது டெல்லியில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது.

அர்விந்த் கெஜ்ரிவால்
அர்விந்த் கெஜ்ரிவால்

ஏப்ரல் 22-ம் தேதி கொரோனா தொற்று 36% இருந்தது. அடுத்த 8 நாள்களுக்கு 30% என்ற அளவில் இருந்துகொண்டே இருந்தது. அதன் பிறகு, கொரோனா தொற்றின் அளவு படிப்படியாகக் குறைய ஆரம்பித்துள்ளது. இது குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், ``டெல்லியில் கொரோனாவின் தாக்கம் குறைந்திருக்கிறது. இதற்கு லாக்டௌன் மற்றும் மக்களின் ஒத்துழைப்பே முழுக்காரணம். கடந்த சில நாள்களில் ஆக்சிஜன் வசதியுடன்கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்.

இப்போது ஆக்சிஜன் மற்றும் படுக்கைக்குத் தட்டுப்பாடு இல்லை. வரும் நாள்களில் மேலும் கொரோனா தொற்று குறையும் என்று நம்புகிறேன். அதற்காக லாக்டௌனில் எந்த சலுகையும் காட்டப்படாது'' என்று தெரிவித்தார். மேலும், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க அதன் தொழில்நுட்பத்தை வேறு கம்பெனிகளுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று மத்திய அரசை கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த டெல்லியின் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மத்திய அரசின் மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். ``டெல்லியின் தற்போதைய தடுப்பூசி தேவை 1.34 கோடி டோஸ்கள். இதற்காக கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டும் 67 லட்சம் டோஸ்கள் கேட்டிருந்தோம். இதுகுறித்து கோவாக்சின் உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கேட்டபோது, `நாங்கள் மத்திய அரசின் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படிதான் தடுப்பூசியை மாநிலங்களுக்கு விநியோகம் செய்து வருகிறோம். எனவே, இப்போது தாங்கள் கேட்கும் தடுப்பூசிகளைத் தர இயலாது' என்று கூறிவிட்டனர். எங்களிடம் இருந்த மருந்துகள் அனைத்தும் தீர்ந்ததால்தான் இப்போது கேட்கிறோம்.

மனிஷ் சிசோடியா
மனிஷ் சிசோடியா

மாநிலங்களின் தேவையை அறிந்து மத்திய இதுபோன்ற நேரத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு, உள்நாட்டு தேவைக்கு என்ன வழியோ அதைச் செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் எவ்வளவு விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால், டெல்லிக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளை மத்திய அரசின் உத்தரவால்தான் அவர்கள் வழங்கவில்லை" எனப் பேசியிருக்கிறார் மனிஷ் சிசோடியா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு