Published:Updated:

ஒரு ஃபேஸ்புக் பதிவு; ஒரே ஒரு போன்கால்! - 32 காஷ்மீர் பெண்களுக்கு உதவிய டெல்லி இன்ஜினீயர்

சத்யா கோபாலன்

காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு நடுவே அம்மாநிலத்தைச் சேர்ந்த 32 பெண்களைப் பத்திரமாகக் காஷ்மீருக்கு அனுப்பி வைத்திருக்கிறார் டெல்லியைச் சேர்ந்த சிங் ஒருவர்.

kashmir Girls
kashmir Girls ( Facebook/@Kam Singh )

2019 ஆகஸ்ட் 5, இந்த நாளை காஷ்மீர் மக்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35A ஆகிய சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டது இந்த நாளில்தான். அதேநாளில் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

Harminder Singh
Harminder Singh
Indian Express

சிறப்புச் சட்டம் தடை செய்யப்படுவதற்கு முன்னதாகப் பல ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படை வீரர்கள் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டனர். அரசியல் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டு, தொலைபேசி, இணைய வசதிகள் முடக்கப்பட்டன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகே, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது.

144 தடை உத்தரவும் இணையத் துண்டிப்பும் சுமார் இரண்டு வாரங்கள் நீடித்தன. இந்தச் சமயத்தில் வெளியூரில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். இப்படியான ஒரு சூழலில், காஷ்மீர் பெண்கள் 32 பேரைப் பத்திரமாக அவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் டெல்லியைச் சேர்ந்த சிங் ஒருவர்.

kashmir Girls
kashmir Girls
Facebook/@Amrik Micky

மென்பொருள் பொறியாளரான ஹம்ரிந்தர் சிங், காஷ்மீர் சிறப்புச் சட்டம் தடை செய்யப்பட்ட நாளான ஆகஸ்டு 5-ம் தேதி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு லைவ் செய்தார். அதில், `சொந்த ஊருக்குத் திரும்ப விருப்பப்படும் காஷ்மீர் மாணவர்கள், இளைஞர்கள் என யாராக இருந்தாலும் என்னைத் தொடர்புகொள்ளலாம். இல்லையேல் உங்களுக்கு அருகில் இருக்கும் குருத்வாராவில் சென்று தங்குங்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

சிறைவைக்கப்பட்டிருக்கிறது காஷ்மீர்!

அவரின் ஃபேஸ்புக் பதிவு வைரலானதைத் தொடர்ந்து ஒரு பெண் ஹம்ரிந்தருக்குப் போன் செய்து உதவி கேட்டுள்ளார். இதுபற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள ஹம்ரிந்தர் சிங், ``ருக்யா என்ற பெண்ணிடமிருந்து எனக்கு போன் வந்தது. அதில் `நான் உள்பட 32 பெண்கள் புனேவில் இருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அரசு விதித்துள்ள தடையால் எங்களால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை. நாங்கள் மீண்டும் ஊருக்குச் செல்ல உதவி செய்ய வேண்டும்’ என என்னைக் கேட்டுக்கொண்டார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

kashmir Girls
kashmir Girls
Facebook/@Kam Singh

அந்தப் பெண்கள் அனைவரும் அரசின் உதவியுடன் புனேவில் தங்கி நர்ஸிங் படிக்கும் மாணவிகள். அனைவரும் 17 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள். இந்த மாணவிகள் ஸ்ரீநகர் சென்று இறங்கும்போது அங்கு அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை, தெரிந்தவர்கள் மூலம் ஏற்பாடு செய்தார் ஹம்ரிந்தர் சிங். அனைத்தும் முடிந்த பிறகு, ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தங்கள் குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள முடியாததால், அந்தப் பெண்கள் சொந்த ஊர் திரும்புவதற்குக்கூட பணம் இல்லாமல் இருந்துள்ளனர். இதை அறிந்த ஹம்ரிந்தர், பெண்களின் நிலையை எடுத்துக் கூறி மீண்டும் ஃபேஸ்புக் மூலம் பண உதவி கேட்டுள்ளார். அந்தப் பதிவை பார்த்த ஒரு தொழிலதிபர் சிங், அனைத்துப் பெண்களுக்கும் உதவுவதாகக் கூறி, விமான டிக்கெட்டை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். பெண்களுடன் பயணிக்க 4 தன்னார்வலர்களையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

kashmir Girl
kashmir Girl
Facebook/@Kam Singh

இதையடுத்து அனைத்துப் பெண்களும் ஆகஸ்ட் 9-ம் தேதி விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்று, அங்கிருந்து பாதுகாப்பாகத் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஹம்ரிந்தர் சிங்கின் இந்த நடவடிக்கை தற்போது வைரலாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நெட்டிசன்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் ஹம்ரிந்தர்.

News & Photo Credits : Indian Express