Published:Updated:

`டெல்லியில் கொரோனா பரவல் விகிதம் குறைந்திருக்கிறது; ஊரடங்கு தொடரும்!' - முதல்வர் கெஜ்ரிவால்

arvind kejriwal
arvind kejriwal

டெல்லியில் ஒரு மாதத்துக்குப் பிறகு கொரோனா தொற்று பரவல் விகிதம் 11% ஆகக் குறைந்துள்ளது. ஆனாலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருந்தது. கொரோனாவைக் கட்டுப்படுத்த போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் டெல்லி திண்டாடியது. கோர்ட் படியேறி தேவையான ஆக்சிஜனை மத்திய அரசிடமிருந்து பெற்றது மாநில அரசு. அதோடு பொதுமுடக்கமும் அமல்படுத்தப் பட்டுள்ளது. டெல்லி அரசின் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தற்போது பலனளிக்கத் தொடங்கி இருக்கிறது. படிப்படியாக கொரோனா தொற்று குறைய ஆரம்பித்து, கடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு, கொரோனா தொற்று பரவல் விகிதம் 11% ஆகக் குறைந்துள்ளது.

corona test
corona test

அதாவது, நேற்றைய முன் தினம் 6,430 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு முந்தைய தினத்தில் 8,500 ஆகப் பதிவாகி இருந்தது. அதற்கு முந்தைய தினத்தில் 10,489 பேருக்குத் தொற்று ஏற்பட்டு இருந்தது. தொற்று படிப்படியாகக் குறைந்து வருவது குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆனாலும், தொற்று குறைந்தாலும் கொரோனாவுக்கு எதிரான அரசின் போராட்டம் தொடரும், கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது என்றும், கொரோனா தொற்று படிப்படியாகக் குறைய தொடங்கி இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், 'தொற்று மீண்டும் அதிகரிக்காமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்வோம். தொற்று முற்றிலும் குறைந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும், முன்னெச்சரிக்கையாகப் புதிதாக 500 அவசர சிகிச்சை படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா காரணமாக வீட்டில் தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்காக சிறிய ஆக்சிஜன் உற்பத்தி மெஷின்கள் (ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்) வழங்கப்படும். இதற்காக சிறிய ஆக்சிஜன் மெஷின் வங்கி தொடங்கப்பட்டு இருக்கிறது. டெல்லியில் உள்ள 11 மாவட்டத்துக்கும் தலா 11 ஆக்சிஜன் மெஷின்கள் வழங்கப்படும்.

lock down
lock down

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் பட்சத்தில் டாக்டர்கள் பரிந்துரைத்தால் அவர்களுக்கும் இந்த மெஷின் வழங்கப்படும். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 15 நாள்களில் 1,000 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை பிரிவை உருவாக்கிய டாக்டர்கள் மற்றும் பொறியாளர்களின் சேவை மிகவும் மகத்தானது' என்று தெரிவித்தார்.

டெல்லியில் பொதுமுடக்கம் இன்றுடன் முடிவுக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில், ஊரடங்கை மேலும் ஒருவாரத்துக்கு (வரும் 24-ம் தேதி வரை) நீட்டிப்பதாக முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு