Published:Updated:

``18,000 கோடிக்கு உத்தரவாதம் கொடுங்க...'' ஜெட் ஏர்வேஸ் அதிபர் வெளிநாடு செல்ல முடியாது!

தெ.சு.கவுதமன்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் 18,000 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ் ( vikatan )

கச்சா எண்ணெய் விலை உயர்வு, போட்டி நிறுவனங்களின் வளர்ச்சி, நிர்வாகச் செயல்திறன் குறைபாடு போன்ற காரணங்களால் கடந்த மூன்றாண்டு காலமாகவே கடும்நஷ்டத்தைச் சந்தித்துவரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 18,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி முறைகேடு பிரச்னையில் சிக்கியுள்ளது. இதன்காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான நரேஷ் கோயல் வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாதென விமானநிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.

நரேஷ் கோயல்
நரேஷ் கோயல்
vikatan

இந்த நிலையில், கடந்த மே மாதம் லண்டன் செல்ல மும்பை விமான நிலையத்திலிருந்து கிளம்பியபோது தடுத்து நிறுத்தப்பட்டார் கோயல். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நரேஷ் கோயல் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. வெளிநாடு செல்லத் தடைவிதிக்கும் அளவுக்கு எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படாத நரேஷ் கோயலுக்கு வெளிநாட்டுப்பயணம் மறுக்கப்பட்டது தவறு என அவரின் வழக்கறிஞர் வாதிட்டார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நஷ்டத்தைச் சமாளிக்க, நிதி திரட்டுவதற்காகத்தான் துபாய், லண்டன் போன்ற நகரங்களுக்கு கோயல் பயணிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், இந்த வாதத்தை மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் ஆச்சார்யா எதிர்த்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், நிறுவனத்துக்கான பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவே நண்பர்களிடமிருந்தே பெற்றுக்கொள்ளலாம். இதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லத்தேவையில்லை. நிரவ் மோடி, லலித் மோடி போல இவரும் வெளிநாட்டில் சென்று பதுங்கக்கூடும் என்பதால், ரூ.18,000 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவார் என்று கண்டிப்புடன் கூறியுள்ளது.

ஜெட் ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ்
vikatan

கோயல் தப்பிக்க முடியாது!