Published:Updated:

டெல்லி வன்முறை வழக்கில் உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட `1984'... அப்போது என்ன நடந்தது?

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை ( Twitter/@mohit_mali )

தற்போதைய கலவரத்தையும் 1984 கலவரத்தையும் இணைத்து டெல்லி ஹைகோர்ட் எச்சரிக்கக் காரணம் என்ன. 1984 கலவரம் எதனால் ஏற்பட்டது. அதன் பாதிப்புகள் என்ன என்பது பற்றிய சின்ன ஃப்ளாஷ்பேக்...

டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கடந்த சில நாள்களாகக் கடுமையான வன்முறைகள் வெடித்தன. மஜ்பூர், ஜாஃப்ராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த மோதலில் காவலர் உட்பட 20க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலவரத்தால் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இதுதொடர்பான வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்தது. கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை கிடைக்க வழி செய்ய வேண்டும், கலவரத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தார், இறுதிச் சடங்குகள் செய்வதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், கலவரம் குறித்து தகவல் தெரிவிக்க பிரத்யேக டோல்ஃப்ரீ எண் அறிமுகம் செய்ய வேண்டும், பாதுகாப்பு முகாம்களை ஏற்படுத்தி, கலவரத்தால் பாதிக்கப்படுவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை
AP

கூடவே, மீண்டும் டெல்லியில் 1984ம் ஆண்டு வன்முறைச் சம்பவம் போல நிகழ்ந்துவிடக்கூடாது என்றும், ஒவ்வொரு குடிமகனுக்கும் இசெட் பிரிவு பாதுகாப்பு ரீதியில் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரிக்கையும் கொடுத்தது டெல்லி ஹைகோர்ட். தற்போதைய கலவரத்தையும் 1984 கலவரத்தையும் இணைத்து டெல்லி ஹைகோர்ட் எச்சரிக்கக் காரணம் என்ன. 1984 கலவரம் எதனால் ஏற்பட்டது. அதன் பாதிப்புகள் என்ன என்பது பற்றிய சின்ன ஃப்ளாஷ்பேக்...

`டெல்லி வன்முறையைக்  கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி!'- யார் இந்த ஐ.பி.எஸ் ஶ்ரீவஸ்தவா?

1984 கலவரம் எதற்கு?

பஞ்சாப் மாநிலத்தில் மத்திய அரசு, மாநில உரிமைகளைப் பறிப்பதாக மாநிலக் கட்சியான அகாலி தளம் குற்றம்சாட்டியது. மாநில உரிமைகளாகப் பல்வேறு கோரிக்கைகளை ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பியது அகாலி தளம். ஆனால், காங்கிரஸ் கட்சி அந்தக் கோரிக்கைகள் பிரிவினையைத் தூண்டுவதாகக் கூறி நிராகரித்தது. அந்த நிராகரிப்பு, `பிந்த்ரன் வாலே' என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பு தோன்ற காரணமாக அமைந்தது. `பிந்தரன் வாலே' அமைப்பு, பஞ்சாப் மாநிலத்தைத் தனி நாடாக, `காலிஸ்தான்' என்ற பெயரில் அமைப்பதைத் தங்கள் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி
vikatan

பிந்தரன் வாலே தலைமையிலான அமைப்பு உருவான பின், பஞ்சாப் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்குப் பிரச்னை மிகவும் சீர்கேடு அடைந்தது. ஏராளமான இளைஞர்கள், தங்களை பிந்தரன் வாலே அமைப்பில் இணைத்துக்கொண்டு, அதன் கீழ் பணியாற்றத் தொடங்கினர். இந்த அமைப்பின் தலைமையகமாக அமிர்தசரஸ் பொற்கோயில் செயல்பட்டது. பிந்தரன் வாலே அமைப்பை ஒடுக்குவதற்காக, 1984-ம் ஆண்டு ஜூன் 01-ம் தேதி அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி `ஆபரேஷன் ப்ளூஸ்டார்' என்ற ராணுவத் தாக்குதல் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டார். அமிர்தசரஸ் பொற்கோயில் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது.

Vikatan

மூன்று நாள்கள் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, பொற்கோயில் பாதுகாப்புப் படையினரின் கைவசம் வந்தது. இருபக்கமும் உயிர்ப்பலிகள் நிகழ்ந்தன. பொற்கோயில் கட்டடம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் உலகம் முழுவதும் வாழும் சீக்கியர்களால் கண்டனத்துக்கு உள்ளானது. தங்கள் மத நம்பிக்கையின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலாகச் சீக்கியர்கள் அந்தத் தாக்குதலைப் பார்க்கத் தொடங்கினர்.

4 மாதங்கள் கழித்து, 1984-ம் ஆண்டு அக்டோபர் 31 அன்று, டெல்லியில் பிரதமர் இல்லத்திலிருந்து தன் பாதுகாவலர்கள் இருவருடன் வெளியே நடந்து வந்தார் இந்திரா காந்தி. அப்போது பாதுகாவலர்களாக இருந்த சத்வந்த் சிங், பீன்ட் சிங் ஆகிய இருவரும் இந்திரா காந்தியைத் தங்களின் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். உடலில் 30 துப்பாக்கிக் குண்டுகள் துளைக்க, இந்திரா காந்தி பரிதாபமாகக் கொலை செய்யப்பட்டார்.

டெல்லி வன்முறை வழக்கில் உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட `1984'... அப்போது என்ன நடந்தது?

சீக்கியப் பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டது நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்காரர்களைச் சீக்கியர்களுக்கு எதிராகத் திருப்பியது. இந்திரா காந்தியின் படுகொலைக்குக் காரணம் என ஒரு சிறுபான்மைச் சமூகமே குற்றம் சாட்டப்பட்டு, வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் உடலைப் பார்வையிட வந்த அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த நான்கு நாள்களும் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீக்கியர்கள் தேடி தேடி கொல்லப்பட்டனர். பெண்கள் பலர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர்; உடைமைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

`நீ இந்துவா... முஸ்லிமா; ஆடையைக் கழற்று..!'- டெல்லி வன்முறையில் பத்திரிகையாளரின் `திகில்' அனுபவம்

1984-ம் ஆண்டு, நவம்பர் 1 முதல் 4-ம் தேதி வரை நிகழ்ந்த வன்முறையில் ஏறத்தாழ 2,700 சீக்கியர்கள் டெல்லியில் மட்டும் கொல்லப்பட்டதாகவும், இந்தியா முழுவதும் அந்த எண்ணிக்கை 3,300 எனவும் அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. எனினும் மனித உரிமை அமைப்புகள் அரசின் இந்த எண்ணிக்கையை மறுப்பதோடு, இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டும் எனவும் கூறுகின்றன.

வாக்காளர் பட்டியல்களின் உதவியுடன் சீக்கியர்களின் வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன; கண்டுபிடிக்கப்பட்ட வீடுகள் அடையாளப்படுத்தப்பட்டன. வன்முறையாளர்களுக்கு ஆயுதங்களும் பணமும் வழங்கப்பட்டன. மிகப்பெரிய இனப்படுகொலை ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு நிகழ்த்தப்பட்டது.

டெல்லி வன்முறை வழக்கில் உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட `1984'... அப்போது என்ன நடந்தது?

காவல்துறையினர் சாலைகளில் சென்றுகொண்டிருந்த சீக்கியர்களைச் சோதனையிட்டு, தற்காப்புக்காக வைத்திருந்த ஆயுதங்களைப் பறித்தனர். காவல்துறையில் இருந்த சீக்கியர்கள், பணி விடுமுறை அளிக்கப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். காவல்துறையினரின் பணி, வன்முறையாளர்களுக்கு உதவுவதாக இருந்தது. இறந்த சீக்கியர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் பணியையும் காவல்துறையினர் செய்துகொண்டிருந்தனர்.

1984-ம் ஆண்டு, நவம்பர் ஐந்தாம் தேதி வன்முறை நிறுத்தப்பட்டது. டெல்லி முழுவதும் கடைகள் திறக்கப்பட்டன. கலவரம் தொடர்பாகப் பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் தனிநபர் ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைத்தது. ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் ``காங்கிரஸ் கட்சிக்கும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று அறிக்கை அளித்தது. இந்தக் கோர சம்பவங்களை மனதில் வைத்துதான் டெல்லி ஹைகோர்ட் இந்த அறிவுரையை வழங்கியுள்ளது.

`மீண்டும் திறக்கப்படும் 1984 கலவர வழக்குகள்!' - மத்தியப் பிரதேச முதல்வருக்கு நெருக்கடி
அடுத்த கட்டுரைக்கு