Published:Updated:

`கெஞ்சினேன்... விடவில்லை; தொடர்ந்து அடித்தார்கள்!'-திக்திக் நிமிடங்களை விவரித்த தொழிலாளி #Delhiriots

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை ( Twitter/@mohit_mali )

டெல்லி வன்முறையின்போது, ஒரு கும்பல் சுற்றி நின்று கட்டைகள், இரும்பு ராடுகளைக் கொண்டு தாக்குதல் நடத்த, மண்டியிட்டு தலையைக் கவிழ்ந்து, உணர்ச்சியற்ற நிலையில் ஒருவர் மயங்கிக் கிடப்பது போன்ற போட்டோ வைரலானது.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்களிடையே வெடித்த வன்முறை, கிழக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் எதிரொலித்தது. வன்முறையில் ஈடுபட்ட ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியதோடு, வாகனங்கள் உள்ளிட்டவைகளுக்கு தீ வைத்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்திருக்கிறது.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை
AP

இதுகுறித்துப் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், `நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அதனால் டெல்லிக்கு ராணுவத்தை வரவழைக்க வேண்டும். வன்முறையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்திருக்கிறார்.

`நீ இந்துவா... முஸ்லிமா; ஆடையைக் கழற்று..!'- டெல்லி வன்முறையில் பத்திரிகையாளரின் `திகில்' அனுபவம்

டெல்லி வன்முறையின்போது, ஒரு கும்பல் சுற்றி நின்று கட்டைகள், இரும்பு ராடுகளைக் கொண்டு தாக்குதல் நடத்த, மண்டியிட்டு தலையைக் கவிழ்ந்து, உணர்ச்சியற்ற நிலையில் ஒருவர் மயங்கிக்கிடப்பது போன்ற போட்டோ வைரலானது. அந்தப் புகைப்படத்தில் இருப்பவர், சந்த் பாக் பகுதியைச் சேர்ந்த முகமது ஜுபேர் என்பது தெரியவந்தது. ராய்ட்டர்ஸ் நிறுவன புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் எடுத்த அந்தப் புகைப்படம், இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துவருகிறது.

Delhi Violence
Delhi Violence
AP

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடகத்திடம் நடந்த சம்பவம்குறித்து அதிர்ச்சி விலகாமல் பேசியிருக்கிறார், முகமது ஜுபேர். ``அவர்கள், நான் மயக்கமடையும்வரை என்னை தாக்கிக் கொண்டே இருந்தார்கள். என்னை விட்டுவிடும்படி அவர்களிடம் கெஞ்சினேன். ஆனால், விடாமல் தொடர்ந்து அடி விழுந்துகொண்டே இருந்தது. மதரீதியான கோஷங்களை எழுப்பியபடியே கபில் மிஸ்ராவின் (டெல்லி பா.ஜ.க மூத்த தலைவர்) பெயரை அவர்கள் முழக்கமிட்டனர். எனது குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். என்னால், அந்தப் புகைப்படத்தைக்கூட பார்க்க முடியவில்லை; பயத்தில் கால்கள் நடுங்குகின்றன'' என்று அந்தத் திகில் நிமிடங்களை அவர் கண்ணீருடன் விவரித்திருக்கிறார்.

அப்பகுதியில் கூலி வேலை செய்துவரும் ஜுபேருக்கு, 2 மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். அவர்களுக்கு இனிப்புகள் வாங்குவதற்காக கடைத் தெருவுக்குச் சென்ற ஜுபேரை அந்தக் கும்பல் திடீரென்று சுற்றிவளைத்திருக்கிறது. தாக்குதலில் தலை, கை, கால்களில் காயமடைந்து மூர்ச்சையான நிலையில் கிடந்த ஜுபேரை, அந்த வழியாகச் சென்ற சிலர் மீட்டு, டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையிலிருந்து தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருக்கும் அவர், குழந்தைகள் மற்றும் மனைவி ஆகியோரைப் பாதுகாப்பு கருதி உ.பி-யில் இருக்கும் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.

Delhi Riot
Delhi Riot
AP

சம்பவம் நடந்த பின்னர், ஜுபேரின் தாய், சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். அவர்கள், தங்கள் வீட்டை உள்புறமாகத் தாழிட்டுக்கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதாகக் கூறுகிறார்கள். இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கும்படி அக்கம்பக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், `புகார் அளிப்பதைவிட உயிர் வாழ்வதற்கான போராட்டமே இந்த நேரத்தில் முக்கியம்' என்று கூறி, அதை ஜுபேரின் சகோதரர் மறுத்ததாகச் சொல்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு