Published:Updated:

அசத்தும் அரசுப் பள்ளி, ஆச்சர்யப்படுத்தும் அரசு மருத்துவமனை... டெல்லி மாடல் எப்படிச் செயல்படுகிறது?

டெல்லி அரசுப் பள்ளியில் ஸ்டாலின் - கெஜ்ரிவால் படம்

டெல்லி மாடல் பள்ளி மற்றும் மொஹல்லா கிளினிக்கின் சிறப்புகள் என்னென்ன என்று டெல்லி வாழ் தமிழர்களிடம் விசாரித்தோம்.

அசத்தும் அரசுப் பள்ளி, ஆச்சர்யப்படுத்தும் அரசு மருத்துவமனை... டெல்லி மாடல் எப்படிச் செயல்படுகிறது?

டெல்லி மாடல் பள்ளி மற்றும் மொஹல்லா கிளினிக்கின் சிறப்புகள் என்னென்ன என்று டெல்லி வாழ் தமிழர்களிடம் விசாரித்தோம்.

Published:Updated:
டெல்லி அரசுப் பள்ளியில் ஸ்டாலின் - கெஜ்ரிவால் படம்

"தமிழ்நாட்டிலும் டெல்லியில் உள்ளது போன்ற பள்ளிகளை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன” என்று டெல்லியில் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். நான்கு நாள்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் அமைந்துள்ள மொஹல்லா கிளின்க் என்று அழைக்கபடும் அரசு மருத்துமனைகளையும், டெல்லியில் உள்ள மாதிரிப் பள்ளிகளையும் ஆய்வு செய்தார்.

கெஜ்ரிவால் - ஸ்டாலின் - மனிஷ் சிஷோடியா
கெஜ்ரிவால் - ஸ்டாலின் - மனிஷ் சிஷோடியா

டெல்லி முதல்வராக முதல்முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்ற பிறகு அந்த மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு முன்னுரிமை கொடுக்கும் என்று அறிவித்தார். அதன்படி டெல்லி நகரின் ஒவ்வொரு பகுதியிலும் மொஹல்லா கிளினிக் என்கிற பெயரில், சிறிய அளவிலான மருத்துவமனைகளைத் திறந்தார். இந்த மருத்துவமனைகள் மூலம் அந்ததந்த பகுதி மக்களுக்கு தரமான சிகிச்சைகளை உறுதி செய்ய முடிந்தது. அதே போல், மாதிரிப் பள்ளிகளையும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உருவாக்கியதால் அரசுப் பள்ளிகளில் அதிகளவிலான மாணவர்கள் சேரத் துவங்கினார்கள். டெல்லி மாடல் என்றே இந்த இரண்டு திட்டங்களையும் இந்தியாவில் உள்ள பிற மாநில மக்கள் அழைக்க ஆரம்பித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
டெல்லி மாடல் பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விமுறையில் நடந்த மாற்றங்களினால், தனியார் பள்ளிகளில் படித்த பலரும் இப்போது டெல்லி அரசு நடத்தும் பள்ளிகளில் படித்துவருகிறார்கள். அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மகள், டெல்லி அரசு பள்ளிகளின் சிறப்புகளை அறிந்து, நேரடியாக வந்து பார்த்து சென்றார். டெல்லி மாடல் பள்ளி மற்றும் மொஹல்லா கிளினிக்கின் சிறப்புகள் என்னென்ன என்று டெல்லி வாழ் தமிழர்களிடம் விசாரித்தோம்.
டெல்லி அரசுப் பள்ளி
டெல்லி அரசுப் பள்ளி

"அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் உள்ள மனிஷ் சிஷோடியாவின் சிந்தனையில் உதித்த திட்டம்தான் 'மாடல் ஸ்கூல்ஸ்' என்கிற இந்தத் திட்டம். 2015-ம் ஆண்டுக்கு முன்பாக டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு செல்லவே பெற்றோர்கள் முகம் சுளித்தனர். சிதலமடைந்த கட்டடங்கள், உடைந்த மேஜை சேர்கள், ஆய்வுப் பொருள்களே இல்லாமல் செயல்பட்ட ஆய்வகங்கள் என்று ஒருபள்ளிக்கான எந்த அடையாளங்களுமே இல்லாமல் பள்ளிகள் செயல்பட்டு வந்தன.

கெஜ்ரிவால் அரசு வந்தவுடன், முதலில் அரசு பள்ளிகளின் கட்டமைப்புகளை மாற்றினார்கள். சிதலமடைந்த கட்டடங்களைச் சீர்படுத்தியதோடு, கறுப்பு நிற போர்டுகளுக்குப் பதிலாக நவீன வெள்ளை நிற காட்போர்டுகளைப் பயன்படுத்தினார்கள். மாணவர்களின் சீருடைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. நவீன வகையான டேபிள் சேர்கள், புரொஜெக்டர், ஸ்மார்ட் போர்டுகள் எனத் தனியார் பள்ளிகளுக்கு இணையான அனைத்து வசதிகளும் அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டன. ஆய்வகங்களுக்குத் தேவையான பொருள்களும் பெறப்பட்டு அவை நவீனப்படுத்தப்பட்டன. இப்படி அடுத்தடுத்த தொடர் நடவடிக்கைகளால் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர ஆரம்பித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆசிரியர்கள் முழு அளவில் நிரப்பப்பட்டனர். ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்குக் கட்டாயம் வேலை கிடைக்கும் என்கிற நிலையும் ஏற்பட்டது. அதோடு பள்ளிப் பாடத்திட்டத்தில் நல்லொழுக்கக் கல்வியோடு யோகா, தியானம் உள்ளிட்டவை கூடுதலாகக் கொண்டுவரப்பட்டன. மாணவர்களின் தகுதியை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுப் பயிற்சிக்கான மைதானங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை பள்ளிகள் அமைந்துள்ள இடங்களைப் பொறுத்து அமைத்துத் தரப்பட்டன. இத்தனை வசதிகளோடு பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வழிகாட்டியாகச் செயல்படும் முறையும் கொண்டுவரப்பட்டது.

டெல்லி அரசுப் பள்ளியின் ஆய்வகம்
டெல்லி அரசுப் பள்ளியின் ஆய்வகம்

அந்தப் பத்து மாணவர்களின் வழிகாட்டியாக உள்ள ஆசிரியர், மாணவர்களின் குடும்ப விவரம் முதல், தனிப்பட்ட பிரச்னைகள் வரை கலந்துரையாடும் வகையில் ஒரு திட்டத்தை முன்வைத்தனர். இத்தனை மாற்றங்களையும் கொண்டு வந்த பிறகு இதற்கு 'டெல்லி மாடல் ஸ்கூல்' என்கிற பெயரை கொண்டுவந்ததுள்ளனர். இலவசமாக தனியார் பள்ளிகளுக்கு ஈடாக கிடைக்கும் கல்விக்கு தனி மவுசும் ஏற்பட்டுள்ளது” என்கிறார்கள்.

கல்வித்திறமையோடு, மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையிலும் அரசுப் பள்ளிகள் செயல்படுவதால் பல மாநிலத்தின் கல்வியாளர்களும் இப்போது டெல்லி அரசு பள்ளிகளைப் போன்ற பள்ளிகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.

“பள்ளிக்குக் கொடுத்த முக்கியதுவம் போலவே சுகாதாரத்திற்கும் கெஜ்ரிவால் அரசு முக்கியதுவம் கொடுத்தது. அதற்கு அவர்கள் கொண்டுவந்த திட்டமே மொஹல்லா கிளினிக். மொஹல்லா என்றால் ஏரியா, பகுதி என்று பொருள். அந்த வகையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மினி கிளினிக் திறக்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் ஒரு மினி ஆபரேஷன் தியேட்டர், ஊசிப் போடும் அறை, மருத்துவர் ஆலோசனைக்கான அறை, மருந்தகம் உள்ளிட்ட வசதிகளோடு மருத்துவமனைகள் திறக்கப்பட்டன. இந்த மருத்துவமனைகளுக்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுநர், உதவியாளர் உள்ளிட்டவர்கள் முழுநேரபணியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

டெல்லி மொஹல்லா கிளினிக்
டெல்லி மொஹல்லா கிளினிக்

இதனால் எல்லா நேரமும் மருத்துவர்களை சந்தித்து இலவசமாகச் சிகிச்சை பெற முடியும் என்பதால் இந்தத் திட்டமும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகள் என்றாலே மருத்துவர்கள் இல்லாத நிலை, சுகாதாரமற்ற நிலை போன்ற பிம்பங்களுக்கு மாற்றாக செயல்படுகின்றன இந்த மொஹல்லா கிளினிக்குகள்” என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.

குறிப்பாகக் கடந்த காலங்களில் கொரோனா பெருந்தொற்றிலிருந்து டெல்லி விரைவாக மீண்டுவர இந்த மொஹல்லா கிளினிக்கும் முக்கிய காரணம் என்கிறார்கள் டெல்லிவாசிகள்.
மொஹல்லா கிளினிக் - டெல்லி
மொஹல்லா கிளினிக் - டெல்லி

தமிழகத்தில் ஏற்கெனவே மினி கிளினிக் என்கிற திட்டம் கொண்டுவரப்பட்டது. அனால், அதை முறையாகச் செயல்படுத்தவில்லை. தேவையான மருத்துவர்களோ, செவிலியர்களோ அதற்கென நியமிக்கப்படாமல் போனதால் அந்த மினி கிளினிக்குகள் முடங்கிவிட்டன. இப்போது டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் டெல்லியில் செயல்படுத்தப்படும் மாடல் பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக் திட்டங்களைப் போன்று தமிழகத்திற்கும் புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என்று சொல்லியுள்ளார்.

திட்டங்களைக் கொண்டுவருவதில் இங்கு எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனால், அதை முறையாகச் செயல்படுத்தினால் மட்டுமே டெல்லியைப் போன்று தமிழக மக்களுக்கும் அது பயன்படும். அதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism