Published:Updated:

`மூடப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள், போலீஸ் தடியடி'- தீவிரமடையும் ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்!

போலீஸார் எங்களிடம் மோசமாக நடந்துகொள்கிறார்கள். எங்கு அழைத்துச்செல்கிறார்கள் என்பதுகூட எங்களுக்குத் தெரியவில்லை.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் தங்கும் விடுதிக்கான விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர நிர்வாகம் முடிவெடுத்தது. இதுதொடர்பாக முன்வரைவு ஒன்றையும் வெளியிட்டு, மாணவர்களிடம் கருத்துகளைக் கேட்டிருந்தது. இதில், விடுதிக்கான கட்டணத்தை எக்கச்சக்கமாக உயர்த்தியிருந்தது. இதனால் வெளியான முன்வரைவுக்கு மாணவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தரைச் சந்திக்க முடிவுசெய்தனர். துணைவேந்தரைச் சந்திக்க முடியாததால் அவரது அறைக்கு மாணவர்கள் பூட்டு போட்டனர். துணை வேந்தரைக் காணவில்லை என காவல்நிலையத்திலும் புகார் தெரிவித்தனர். ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு தற்போது (2019) கொண்டாடப்பட்டுவருகிறது. இக்கல்வியாண்டு முழுதும் பல்கலைக்கழக வளாகத்தினுள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தச் சூழலில், மாணவர்கள் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 13-ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த மாணவர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து, பல்கலைக்கழகம் அருகே போலீஸார் குவிக்கப்பட்டனர். நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணியாகச் செல்வதைத் தடுப்பதற்காக ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தினர். 144 தடை உத்தரவை மீறியும் மாணவர்கள் பேரணியாகச் சென்றனர்.

பல்கலைக்கழகத்திலிருந்து அரைகிலோ மீட்டர் தொலைவிலேயே மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மாணவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக பேரிகார்டுகளைக் கொண்டு போலீஸார் தடுப்புகளை அமைந்திருந்தனர். மாணவர்கள் அதையும் மீறி முன்னேறியதையடுத்து, கேந்திரிய விந்தியா பள்ளி அருகில் பேரிகார்டுகள் மற்றும் தண்ணீர் அடிக்கும் வாகனம் கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தினர். ஆனால், மாணவர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. போலீஸார் அமைத்திருந்த 3 அடுக்கு தடுப்புகளையும் மீறி மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி முன்னேறினர்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

இதனிடையே பேசிய மாணவ பிரதிநிதிகள், “குழு அமைப்பது குறித்து மாணவர் சங்கத்திற்கு அமைச்சகம் தகவல் தெரிவிக்கவில்லை. நிர்வாக அதிகாரிகளும் குழுவும் எங்களிடம் பேச வேண்டும். எங்களில் பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். போலீஸார், எங்களிடம் மோசமாக நடந்துகொள்கிறார்கள், எங்கு அழைத்துச்செல்கிறார்கள் என்பதுகூட எங்களுக்குத் தெரியவில்லை” என்றனர்.

போலீஸாரால் தடுத்த நிறுத்தப்பட்ட பின்னர், வேறொரு பாதையில் நாடாளுமன்றம் நோக்கி சென்றனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், மத்திய அரசு, பல்கலைக்கழகத்துக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். மாணவர்களின் போராட்டத்தால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். சில மாணவர்களை போலீஸார் பிடித்துச்சென்றனர். இதையடுத்து, போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே மாணவர்கள் அமர்ந்து போராட்டம் செய்தனர். போலீஸார் தடியடி நடத்தியதில் மாணவர்கள் சிலர் காயமடைந்தனர். அவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம் காரணமாக டெல்லி மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் ரயில்கள் நிற்காது எனவும், குறிப்பிட்ட சில மெட்ரோ நிறுத்தங்களின் நுழைவு வாயில்கள் தற்காலிகமாக மூடப்படுவதாகவும் டெல்லி போலீஸார் அறிவித்தனர். இதுகுறித்துப் பேசிய டெல்லி காவல்துறை அதிகாரிகள், ஜே.என்.யூ மாணவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல முயல்கிறோம். சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுக்க வேண்டாம்; சாலைகளைத் தடுத்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் என அவர்களிடம் கூறினோம். நாங்கள் அவர்களை நம்பவைக்க முயல்கிறோம், விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். தடியடி நடத்தியது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்போம்” என்றனர். தற்போது, மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் சென்றுவிட்டதாகத் தகவல் வந்துள்ளது.