Published:Updated:

`மிகப் பெரிய வலியைக் கொடுத்திருக்கும்!'- துப்பாக்கியை எதிர்த்துநின்ற டெல்லி`வைரல்' போலீஸ் நெகிழ்ச்சி

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை ( Twitter )

டெல்லி வன்முறையின்போது துப்பாக்கியால் மிரட்டிய நபர் முன்னால், கையில் லத்தி மட்டுமே வைத்துக்கொண்டு நிற்கும் போலீஸ் ஒருவரின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லியில் வெடித்த வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 30-க்கும் மேல் உயர்ந்திருக்கிறது. அங்கு அமைதி திரும்ப மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சம்பவ இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை முன்பாக விளக்கம் அளித்தார்.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை
AP

இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர், பஞ்சாபுக்கு மாற்றப்பட்டது தற்போது சர்ச்சையாகியிருக்கிறது. `இது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை வெட்கக்கேடானது' என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்குவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விமர்சனம் செய்திருக்கிறார்.

டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த 23ம் தேதி மாலை வன்முறை வெடித்தது. கடைகள், வீடுகள், வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இதனால், வடகிழக்கு டெல்லியில் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து 26ம் தேதி வரை 3 நாள்கள் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வன்முறை தொடர்ந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்த அதேநேரத்தில், அங்கிருந்து 20 கி.மீ தூரத்தில் டெல்லியின் மறுபுறம் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை
AP

இந்தநிலையில், டெல்லியில் பாதுகாப்புப் பணிக்காக போலீஸாருடன் சி.ஆர்.பி.எஃப் வீரர்களும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். வன்முறையால் பாதிக்கப்பட்ட டெல்லியின் ஜாஃப்ராபாத், மவுஜ்பூர், ஷிவ் விஹார் மற்றும் சாந்த் பாக் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். டெல்லியில் அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

`கெஞ்சினேன்... விடவில்லை; தொடர்ந்து அடித்தார்கள்!'-திக்திக் நிமிடங்களை விவரித்த தொழிலாளி #Delhiriots

டெல்லி வன்முறையின்போது துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறின. மவுஜ்பூர் பகுதியில் திடீரென துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் வானத்தை நோக்கிச் சுடத் தொடங்கினார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரையும் மிரட்டத் தொடங்கினார். இதையடுத்து அங்கிருந்தவர் சிதறி ஓடத் தொடங்கிய நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் கையில் லத்தி மட்டுமே இருந்தநிலையில், மிரட்டிய நபரை நோக்கி நகர்ந்தார். ஹெல்மெட்டுடன் துப்பாக்கியை எதிர்த்து அந்தக் காவலர் நின்றிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தக் காவலரின் பெயர் தீபக் தஹியா என்பது தெரியவந்தது.

டெல்லி வன்முறையின்போது, ஒரு கும்பல் சுற்றி நின்று கட்டைகள், இரும்பு ராடுகளைக்கொண்டு தாக்குதல் நடத்த, மண்டியிட்டுத் தலையைக் கவிழ்ந்து, உணர்ச்சியற்ற நிலையில் ஒருவர் மயங்கிக் கிடப்பது போன்ற போட்டோ வைரலானது.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை
Twitter

அங்கு நடந்த சம்பவங்கள் தொடர்பாக தீபக் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசியிருக்கிறார். துப்பாக்கியுடன் நின்றவர் முன் சென்றது குறித்து பேசிய அவர், ``என் கண்முன்னால் யாரேனும் உயிரிழந்திருந்தால், அது எனக்கு மிகப்பெரிய வலியைக் கொடுத்திருக்கும். அந்த இடத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்திலேயே துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் முன் தைரியமாக நின்றேன்.

மவுஜ்பூர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அது நடந்தது. துப்பாக்கியுடன் அவர் எங்களை நோக்கி முன்னேறினார். அவரது கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில், நான் அவரை நோக்கி முன்னேறிச் சென்றேன். துப்பாக்கியுடன் நிற்பவரின் வழியில் வேறு யாரும் வந்து, அதனால் பாதிப்புகள் ஏற்படக் கூடாது என எண்ணினேன்'' என்று கூறியிருக்கிறார். லத்தியை மட்டுமே வைத்துக்கொண்டு துப்பாக்கிக்கு நேரெதிரே நின்ற கணத்தில் என்ன தோன்றியது என்ற கேள்விக்கு, `அது என்னுடைய கடமை. அதை நான் செய்தே ஆக வேண்டும்' என்று அவர் பதிலளித்திருக்கிறார்.

காவலர் தீபக் தஹியா
காவலர் தீபக் தஹியா

சோனிபத் பகுதியைச் சேர்ந்த தீபக், 2010ல் டெல்லி போலீஸில் காவலராகப் பணியில் சேர்ந்திருக்கிறார். ஹெட் கான்ஸ்டபிள் பதவிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அவர், தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர், மனைவி மற்றும் இரு மகள்களோடு சோனிபத் பகுதியில் வசித்து வருகிறார். நடந்த சம்பவம் குறித்து அடுத்த நாள் பத்திரிகைகளில் வரும் வரை தீபக்கின் குடும்பத்தினருக்கு எதுவும் தெரியாது என்கிறார் அவர். அடுத்த நாள் பத்திரிகைகளில் புகைப்படம் வெளியான பின்னர், தனது ஆடையில் இருந்த ஊதாநிறக் கோடுகளைக் கொண்டு மனைவி தன்னை அடையாளம் கண்டுகொண்டதாகச் சொல்கிறார் தீபக்.

அடுத்த கட்டுரைக்கு