Published:Updated:

'டூல்கிட்' சர்ச்சை : காங்கிரஸ்- பா.ஜ.க மோதல்! ; ‘ட்விட்டர் இந்தியா’ நிர்வாக இயக்குநரிடம் விசாரணை!

ட்விட்டர்
ட்விட்டர் ( STEPHEN LAM )

காங்கிரஸ் மீது பொய்ப்பழி சுமத்தும் பா.ஜ.க-வினரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றனர் காங்கிரஸ் தரப்பினர்.

இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது மெல்ல மெல்ல ஒரு சில மாநிலங்களில் குறைந்துவந்தாலும், அது ஏற்படுத்திவரும் பாதிப்புகளும் உயிர்ச் சேதங்களும் அதிகம். மறுபுறம், மக்கள் தடுப்பூசிகளை செலுத்திவருகின்றனர். ஏக தேசத்தையும் குழப்பியுள்ள கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும் மத்தியில் காங்கிரஸ் - பா.ஜ.க இடையிலான ட்விட்டர் பஞ்சாயத்து பெரும்பாடாகச் சென்றுவருகிறது. கடந்த மாதம், பா.ஜ.க குறித்த அவதூறான கருத்துகளைச் சமூக வலைதளங்களில் பரப்பி பா.ஜ.க-வின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும்விதமாக காங்கிரஸ் சார்பில் ‘டூல்கிட்’ ஒன்று திட்டமிட்டுப் பரப்பப்பட்டதாக பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ரா காங்கிரஸ் கட்சியின் சின்னம் பொறித்த அதன் ஆவணங்களுடன் குற்றம்சாட்டியிருந்தார். இதை பா.ஜ.க-வின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா, ஸ்மிருதி இரானி, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உட்பட பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் சிலர் பகிர்ந்ததோடு, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடினர். இதை காங்கிரஸ் தரப்பினர் கடுமையாக மறுத்ததோடு, டெல்லி காவல் துறையிலும் வழக்கு பதிவு செய்தனர். காங்கிரஸ் மீது பொய்ப்பழி சுமத்தும் பா.ஜ.க-வினரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றனர் காங்கிரஸ் தரப்பினர்.

Twitter | ட்விட்டர்
Twitter | ட்விட்டர்

அதைத் தொடர்ந்து, ட்விட்டரில் பா.ஜ.க-வினர் வெளியிட்ட பதிவுகளில் ட்விட்டர் நிறுவனம் ‘Manipulated Media’ என்ற டேக்கை சேர்த்தது. இதற்கு பா.ஜ.க அரசு ட்விட்டர் நிறுவனத்தைக் கண்டித்தது. அப்போது இந்த விவகாரம் குறித்த விசாரணையை போலீஸார் மேற்கொண்டுவந்ததால், இந்திய ட்விட்டர் நிர்வாகம் இது குறித்த எந்தவொரு பதிலையும் அளிக்காமல் அமைதி காத்துவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திடம் விசாரிக்க டெல்லி சிறப்புப்படை காவல்துறையினர் கடந்த மே மாதம் 21-ம் தேதி இந்தியாவின் ட்விட்டர் நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஷ்வரிக்கு விசாரணையில் இணையுமாறு சம்மன் அனுப்பினர். அதற்கு அவர் இ-மெயில் வாயிலாக பதிலளித்துள்ளார். காவல்துறையினர் நேரில் ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியும் சரிவர அவர் பதிலளிக்காததால், கடந்த மே மாதம் 31-ம் தேதி டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸார் பெங்களூர் விரைந்தனர். அங்கு ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஷ்வரியின் வீட்டுக்கே சென்று விசாரணை மேற்கொண்டதில், ட்விட்டரின் நிர்வாக இயக்குநராகச் செயலாற்றியபோது அந்த நிறுவனத்தின் கட்டமைப்புகள் குறித்தும், தனக்கு கீழ் பணியாற்றிவந்த பணியாளர்கள் குறித்தும் தனக்கு முழுமையாகத் தெரியாது என்று மனீஷ் மகேஷ்வரி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு