Published:Updated:

`நான் வரலாறு படைக்கிறேன் என அவர்களுக்குத் தெரியாது!’ - போராட்டத்தில் கவனம் ஈர்த்த மாணவி

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாடாளுமன்ற வளாக போலீஸ் நிலையம் நோக்கி பேரணியாகச் சென்றுகொண்டிருந்தனர்.

போராட்டம்
போராட்டம்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர்15-ம் தேதி நடந்த சம்பவம் மாணவர்களை ஒன்றியணைய வைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும். டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாம் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த காவலர்கள் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இதில், சில மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். டெல்லி போலீஸாரின் இந்தச் செயலைக் கண்டித்து மாணவர்கள் டெல்லியில் திரண்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

தலைநகர் டெல்லியில் மாணவர்கள் தொடர்ந்து அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் காவல்துறையினருக்கு ரோஜா பூக்களை வழங்குவது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இளம்பெண் ஒருவர் காவல்துறையினருக்கு ரோஜா பூக்களை வழங்கும் போட்டோ அனைவரையும் கவர்ந்துள்ளது. அந்த மாணவி கையில் வைத்திருக்கும் பதாகையும் போராட்டத்தில் கவனம் பெற்றது. ``நான் வரலாறு படிக்கிறேன் என என்னுடைய தந்தை நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கு தெரியாது நான் இங்கு வரலாறு படைத்துக்கொண்டிருக்கிறேன் என்று” அதில் எழுதப்பட்டிருக்கிறது.

`மாணவர்களுக்கு எந்த இடைக்கால நிவாரணமும் கிடையாது!’ - டெல்லி நீதிமன்றத்தில் கொந்தளித்த வழக்கறிஞர்

இதற்கிடையில் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மாலை 6 மணிக்கு மேல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதியில்லை எனக் கூறி அங்கிருந்த மாணவர்களை வெளியேற்றினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாடாளுமன்ற வளாக போலீஸ் நிலையம் நோக்கிப் பேரணியாகச் சென்றுகொண்டிருந்தனர்.

போராட்டம்
போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒருவர் பேசுகையில், ``அரசியலமைப்பு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இந்திய மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். இந்த அரசானது மதச்சார்பின்மையை அழிக்கப் பார்க்கிறது. மதச்சார்பின்மைதான் இந்திய அரசியலைப்பின் அடிப்படை. அரசியலமைப்பை காக்க நாங்கள் வீதிக்கு வந்துள்ளோம். எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் பேரணியாக சென்றுகொண்டிருக்கிறோம்” என்றனர்.