Published:Updated:

`` `துரோகி’ என வாளைச் சுழற்றினான்; கலவரக்காரர்கள் செய்ததைக் கூறவா?” -அதிர்ச்சி விலகாத டெல்லி மக்கள்

டெல்லிக் கலவரம்
டெல்லிக் கலவரம்

கஜூரி காஸ் பகுதியில் வசித்த இஸ்லாமிய மக்கள் தங்கள் அண்டை வீடுகளில் வசித்தவர்களால் தாக்கப்பட்டத்தை மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளனர்.

`நான் யாருக்காக அல்லாவிடம் துவா செய்தேனோ அதேமக்கள் எங்கிருந்தோ வந்த, 100பேருடன் சேர்ந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். யாரை நம்புவது எனத் தெரியவில்லை. குழப்பமாக இருக்கிறது. எங்களுடன் வசித்தவர்களினாலே நாங்கள் தாக்கப்பட்டோம்’ என வேதனை தெரிவிக்கின்றனர் கஜூரி காஸ் (Khajuri Khas) பகுதியைச் சேர்ந்த மக்கள்.

டெல்லி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிவருகிறது. பாதுகாப்புக்காக எங்கெங்கோ தஞ்சமடைந்திருந்த மக்கள், மீண்டும் தங்கள் பகுதிக்கு அச்சத்துடனே திரும்புகின்றனர். இன்னமும் 100-க்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பு முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். கஜூரி காஸ் பகுதியில் வசித்த இஸ்லாமிய மக்கள் தங்கள் அண்டை வீடுகளில் வசித்தவர்களால் தாக்கப்பட்டதை மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளனர்.

டெல்லிக் கலவரம்
டெல்லிக் கலவரம்

கஜூரி காஸ் பகுதியில் இந்து மக்கள்தான் பெரும்பான்மையாக உள்ளனர். இந்து மற்றும் இஸ்லாமியக் குடும்பங்கள் பல வருடங்களாக இங்கு உறவினர்கள் போல் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அந்தச் சகோதரத்துவமும் நட்பும் ஒரே இரவில் காற்றில் பறந்துவிட்டன. அங்கு காட்சிகள் மாறி எல்லாம் தலைகீழாயின.

`இந்த நாட்டில் வாழ எனக்கு உரிமையில்லையா?' - கேள்வியெழுப்பிய முன்னாள் சி.ஆர்.பி.எஃப் வீரர்

அந்தப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேசுகையில், ``இந்தப் பகுதியில் உள்ள எல்லோருடனும் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. நான் இப்போதுதான் புதிதாக ஒரு பைக் வாங்கியிருந்தேன். இந்தப் பகுதியில் இருக்கும் என் நண்பர்கள் எல்லோரும் அதைப் பயன்படுத்துவார்கள். ஆனால், கலவரத்தில் என் கண் முன்னால் அவர்கள் என்னுடைய பைக்கை வீட்டிலிருந்து இழுந்துவந்து சாலையில் தீவைத்து எரித்தனர். என் நண்பன் கையில் வாள் ஏந்திக்கொண்டு என்னை துரோகி என்று அழைத்தான். அந்த வார்த்தைகளைக் கேட்டு நான் அதிர்ந்துவிட்டேன். அவன் கண்களில் அப்படி ஒரு கோபத்தைப் பார்த்தேன்.

டெல்லிக் கலவரம்
டெல்லிக் கலவரம்

என்னுடன்தான் இருப்பான். என் வீட்டில் சாப்பிடுவான். எங்கள் நட்பிற்கு எந்த அடித்தளமும் இல்லை என நினைத்திருந்தேன். நாங்கள் இருவரும் ராப் பாடகர் எமினம்-யின் தீவிர ரசிகர்கள். எனக்கு ராப் பாடகர் ஆக வேண்டும் என விருப்பம். அது அவனுக்கும் தெரியும். இருவரும் ஒன்றாக அமர்ந்துதான் எமினம் பாடல்களை எல்லாம் கேட்போம். இன்று அவன் கையில் வாளை எடுத்துக்கொண்டு என்னையும் என் குடும்பத்தினரையும் கொலை செய்யும் நோக்கில் வருகிறான். உதவியற்ற நிலையில் மாடியிலிருந்து ஏகிறிக்குதித்து நாங்கள் தப்பித்தோம். அப்போது தான் என்னுடைய வாகனத்தை இழுத்து வந்து சாலையில் தீவைத்ததைப் பார்த்தேன். என் வீட்டுக்கு முன்பு அந்த பைக் கொளுந்துவிட்டு எரிந்தது. இப்போது என்னிடம் எமினம் போஸ்டர் வாங்குவதற்குக் கூட காசில்லை” என்கிறார்.

`மதம் தெரியல; என்  பிள்ளைகளாகவே பார்த்தேன்!’ - டெல்லி வன்முறையில் மக்களைக் காத்த சீக்கியர்கள்

அந்தப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பேசுகையில், ``நான் துணிகளைத் தைத்து வாழ்க்கை நடத்தி வந்தேன். என் வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் எங்களின் ரத்தத்தையும் வியர்வையையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். துணி தைக்கும் இயந்திரத்தை எரித்துவிட்டனர். இந்தப்பகுதியில் இஸ்லாமியர்கள் வீடுகள் மட்டும் திட்டமிட்டுக் கொள்ளையடிக்கப்பட்டு, எரிக்கப்பட்டுள்ளன. இதை உங்களுக்கு எப்படி எடுத்துக்கூறுவேன். இங்கிருப்பவர்கள் கூறாமல் கலவரக்காரர்களுக்கு எது இஸ்லாமியர்களின் வீடு இந்துக்கள் வீடு என எப்படி தெரியும். ஈத் பண்டிகையையும் தீபாவளியையும் நாங்கள் ஒன்றாகத்தான் கொண்டாடுகிறோம். இனி நாங்கள் எப்படி இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை நம்புவது? நாங்கள் எப்படி இனி இங்கு வீடுகளைக் கட்டுவது. எங்களது ஆவணங்களை எல்லாம் எரித்துவிட்டார்கள்.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

இங்கு நடந்த கொடூரத்தை எப்படி விவரிப்பது? கலவரக்காரர்கள் இந்தப்பகுதியில் வந்ததுமே நாங்கள் இங்கிருந்து ஓடத்தொடங்கிவிட்டோம். அந்தக்கூட்டத்தில் இருந்தவர்கள் நிர்வாணமாக நின்றுகொண்டு, `இங்கே வா’ என்று அழைத்ததையும் அவர்கள் செய்த அசிங்கத்தையும் விவரிக்கட்டுமா? ``இங்கே வா உன்னைத் துண்டு துண்டாக வெட்டுகிறேன்’ எனக் கூறிக்கொண்டு துரத்தும்போது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்போது எங்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. நீங்கள் எது கேட்டாலும் கொடுப்பதற்கு எங்களுடன் எதுவும் இல்லை. எல்லாமே திட்டமிட்டுதான் நடத்தப்பட்டுள்ளன” எனக் கண்ணீரோடு விவரித்தார்.

Credits: News18English

அடுத்த கட்டுரைக்கு