Published:Updated:

`இன்ஸ்டாகிராம் பேஜ்; பள்ளி மாணவர்களின் ஆபாச சாட்!’ - ட்விட்டரை அதிரவைத்த ஸ்கிரீன்ஷாட்

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

``ஸ்கிரீன்ஷாட்டுகளை சிலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டதன் மூலம் வேகமாக இந்தச் செய்தி பரவத் தொடங்கியது. இதைப் பதிவிட்டவர்களையும் அவர்கள் ஆபாசமாக மிரட்டியுள்ளனர்.”

இன்றைய உலகில் பெரு நகரங்கள் முதல் கிராமங்கள் வரை இணையம் என்பது எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. ஊரடங்கு மாதிரியான இந்தக் காலங்களில் இணையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர நேரத்தை செலவழிக்க பலரும் வேறு வழிகளைக் குறித்து ஆலோசிப்பதுகூட இல்லை. அவ்வளவு தூரம் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது இணையம். குறிப்பாக சிறுவர்கள் இந்த இணைய உலகில் அதிகமான நேரங்களை செலவிட்டு வருகின்றனர். பெரும்பாலும் சமூக வலைதளங்கள் அவர்களின் நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. இத்தகைய சூழலில், டெல்லி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில் சிலர் இன்ஸ்டாகிராமில் `BoysLockerRoom' என்ற பக்கத்தைத் தொடங்கி பாலியல் தொடர்பாகப் பேசி வந்திருக்கும் செய்தி பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Screenshots
Screenshots
vikatan

டெல்லியில் உயர் பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் இணைந்து இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பாலியல் வன்கொடுமை மற்றும் உடல் சார்ந்த விஷயங்கள் குறித்து மாணவர்கள் உரையாடி வந்துள்ளனர். கேட்க முடியாத விஷயங்களைக் கூட மிகவும் சாதாரணமாக மாணவர்கள் உரையாடி வந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சில சிறுமிகளின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து அந்தப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக தங்களது வகுப்பு மாணவிகள் பற்றியும் பாலியல் ரீதியான உரையாடல்களை நடத்தியுள்ளனர்.

இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவர்கள் நடத்திய உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்டுகளை சிலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டதன் மூலம் வேகமாக இந்தச் செய்தி பரவத் தொடங்கியது. இதை பதிவிட்டவர்களையும் அவர்கள் ஆபாசமாக மிரட்டியுள்ளனர். இதுதொடர்பான கண்டனங்களைப் பலரும் #BoysLockerRoom என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பகிரத் தொடங்கினர்.

இந்தியாவில்  சைபர் குற்றங்கள்  -  ஒரு பார்வை!

டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், இந்த இன்ஸ்டாகிராம் குழுவில் உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், அவர் என்.டி.டி.வி ஊடகத்திடம், ``டெல்லி காவல்துறையினருக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இந்தச் சிறுவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக #MeTooIndia ட்விட்டர் பக்கமானது, ``பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரை தூக்கிலிடுவது ஆண்கள் மற்றும் சிறுவர்களிடம் எவ்வாறு பயத்தை ஏற்படுத்தும் என நீங்கள் மீண்டும் எங்களுக்குச் சொல்லுங்கள். மாநில அரசுகள் தங்கள் விரும்பும் அனைத்துக் குற்றவாளிகளையும் தூக்கிலிடலாம். ஆணாதிக்கம், உரிமைகள் மற்றும் ஆண்மை தொடர்பான அடிப்படை விஷயங்கள் குறித்து கவனிக்காவிட்டால் BoysLockerRoom தொடரும்” என பதிவிட்டுள்ளது.

`இன்ஸ்டா’ பாலியல் மோசடி; சிக்கிய லேப்டாப்! - ஃபேஸ்புக் மூலம் வேகமெடுக்கும் இன்ஜினீயர் சுஜி வழக்கு
அடுத்த கட்டுரைக்கு