Published:Updated:

``நோ மீன்ஸ் நோ" - ஜந்தர் மந்தரில் ஒன்று கூடிய காஷ்மீர் மக்கள்

பால. அழகு ராச பாரதி
அ. அ. நவயுகன்

"சரத்து 370 எங்கள் அடையாளம், அது இந்தியவுடனான சமூக ஒப்பந்தம். அது நீக்கப்பட்டது துரோகம். காஷ்மீர் மக்கள் இதை ஏற்கவில்லை”

காஷ்மீர் மாணவர்களின் போராட்டம்
காஷ்மீர் மாணவர்களின் போராட்டம்

நேற்று (வெள்ளிக்கிழமை) டெல்லி ஜந்தர் மந்தரில் ஜம்மு காஷ்மீரில் சரத்து 370 நீக்கப்பட்டதைக் கண்டித்தும் அங்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை எதிர்த்தும் வாயில் கருப்புத்துணி அணிந்து ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதில் டெல்லியில் பணிபுரியும் மற்றும் வசிக்கும் ஜம்மு காஷ்மீரைச் சார்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.

அவர்கள் பல்வேறு எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். அவற்றில் "நோ மீன்ஸ் நோ", "கட்டாய கல்யாணம் நீடிக்காது" போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

போராட்டத்தின் நடுவில் ஓர் மாணவி அழுதுகொண்டிருந்தார். அவர், தான் டெல்லியில் ஜாமிய மிலியா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருப்பதாகவும் காஷ்மீரில் இருக்கும் தன் குடும்ப நபர்களிடம் பேசி ஐந்து நாட்கள் ஆகிறது என்றும் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பயமாக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் இந்த செயலால் காஷ்மீர் மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றும் தெரிவித்தார்.

ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம்
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம்

தொடர்ந்து, வளர்ச்சிக்கும் சரத்து 370-க்கும் சம்பந்தம் இல்லை. பிகார் போன்ற மாநிலங்கள் முன்னேறாததற்கு என்ன காரணம்? பிகாரில் என்ன 370 உள்ளதா என்றும் வினவினார்.

`ஒரே உரையில் உலக ஃபேமஸ்..!’ - காஷ்மீர் தலைவர்களை க்ளீன் போல்டாக்கிய லடாக் எம்.பி பேசியது என்ன?

இதையடுத்து நம்மிடம் உரையாடிய இன்னொரு மாணவி காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தைச் சார்ந்தவர் என்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் பிரிவில் இளங்கலைப்பட்டம் படிப்பதாக தெர்வித்தார். அவர் கூறியதாவது, "சரத்து 370 எங்கள் அடையாளம், அது இந்தியவுடனான சமூக ஒப்பந்தம். அது நீக்கப்பட்டது துரோகம். காஷ்மீர் மக்கள் இதை ஏற்கவில்லை. அவர்கள் அங்கு போராட முற்படுகிறார்கள் என்றும் அதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்றும் அங்கிருந்து வந்த நபர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்", என்று கூறினார்.

பதாகைகளுடன் மாணவர்கள்
பதாகைகளுடன் மாணவர்கள்

அதைத் தொடர்ந்து பேசிய இன்னொரு மாணவர், "டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லிக்கு மாநில அந்தஸ்து கேட்பார், ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து இழப்பதை ஆதரிப்பார். அவர் 'இன்று எங்களுக்கு நாளை உங்களுக்கு' என்பதை புரிந்து கொள்ளவேண்டும்" என்று கூறினார்.மேலும், "இந்த நடவடிக்கை யாரிடம் கேட்டு எடுக்கப்பட்டது? எங்களிடமா இல்லை எங்கள் பிரதிநிதியிடமா? கவர்னரிடம் ஒப்புதல் பெற கவர்னர் என்ன எங்கள் பிரதிநிதியா?" என்று கேள்விகள் எழுப்பினார். முடிவில் இது நீடித்தால் வரும் திங்கட்கிழமை பக்ரீத் ஜந்தர் மந்தரில் தான் கொண்டாடக்கூடும் என்று கூறினர்.