Published:Updated:

`கேள்வியில்லாமல் கைது; சட்ட உரிமைகள் மறுப்பு!' -அதிர்ச்சி கொடுத்த டெல்லி ஆளுநரின் உத்தரவு

டெல்லி
டெல்லி

பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களை எந்தக் கேள்வியும் கேட்காமல் இந்தச் சட்டத்தின் மூலம் கைது செய்யமுடியும் என்பதால், பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கடந்த ஒரு மாதமாகத் தொடர் போராட்டங்கள், வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக டெல்லியில்தான் இந்த போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கேட் பகுதி மற்றும் ஷஹீன் பாக் பகுதியில் கடந்த ஒரு மாதமாகத் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. மற்றொருபுறம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்குப் போராட்டம் நடக்கிறது. அவ்வப்போது ஜும்மா மசூதிக்கு அருகிலும் திடீர் போராட்டங்கள் தலை தூக்குகின்றன.

ஷஹீன் பாக் போராட்டம்
ஷஹீன் பாக் போராட்டம்

இந்த நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற அதிகாரத்தை போலீஸுக்கு வழங்கியுள்ளார், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால்.

நாளை முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 13-ம் தேதியே இதற்கான ஆணை டெல்லி கமிஷனரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் சமூகவலைதளங்களில் வெளியாகி டெல்லி உட்பட பிற மாநில மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`இந்துக்களுக்கு யாகம்... சீக்கியர்களுக்கு கிர்தான்!' -டெல்லியைக் கதிகலக்கிய `சர்வ தர்ம சமா பவா’

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை 1980-ம் ஆண்டு இந்திய அரசு திருத்தம் செய்து மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்தப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுபவருக்கு எதிராக எந்த ஆதாரமும் தேவையில்லை, சந்தேகம் வந்தாலே போதும். அவரைக் கைது செய்யலாம். அப்படிக் கைது செய்யப்படுபவர் வழக்கறிஞரை வைத்துக்கொள்ள முடியாது. அவர் அதை எதிர்த்து எங்கும் மேல்முறையீடு செய்ய முடியாது. கைது செய்யப்பட்டவர் தனக்கான எந்த உரிமையையும் சட்டப்படியோ, தார்மீகரீதியிலோ கேட்க முடியாது.

டெல்லி போலீஸ்
டெல்லி போலீஸ்

இந்தியத் தலைநகரில் வரும் பிப்ரவரி 8-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் தற்போதே அங்கு கட்சிகளின் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தநிலையில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் அங்கு நடைமுறைக்கு வந்துள்ளது அரசியல் கட்சியினருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களை எந்தக் கேள்வியும் கேட்காமல் இந்தச் சட்டத்தின் மூலம் கைது செய்யமுடியும் என்பதால், பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த நடைமுறை வழக்கமான ஒன்றுதான், ஒவ்வொரு காலாண்டிலும் பாதுகாப்புச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று டெல்லி போலீஸ் விளக்கமளித்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் டெல்லி காவல்துறை உள்ளதால் இந்த உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேசட்டம் ஜனவரி 14-ம் தேதி ஒருநாள் மட்டும் ஆந்திராவில் நடைமுறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு