Published:Updated:

`4 பேர் உடலில் குண்டுக் காயங்கள்; கற்களால் தாக்கப்பட்ட காவலர்!’ - தொடர் வன்முறையால் திணறும் டெல்லி

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை ( AP )

டெல்லியில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களில் 4 பேரின் உடலில் துப்பாக்கிக் குண்டு காயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் மற்றும் மஜ்பூர் ஆகிய இரண்டு பகுதிகளிலும், நேற்று முன் தினம், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்கள் ஒரே இடத்தில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட சிறிய மோதல், பிறகு பெரும் வன்முறையாக வெடித்தது. அதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்திருக்கிறது. காயமடைந்த 75 பேர், குருதக் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல உயிரிழந்தவர்களின் உடல்களும் இதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை
AP

உயிரிழந்தவர்களின் உடல்களில் நடந்த பிரேதப் பரிசோதனையில், இறந்த 7 பேரில் நான்கு பேரின் உடல்களில் துப்பாக்கிக் குண்டு காயங்கள் இருப்பதாகவும், அதன் காரணமாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் குரு தத் பகதூர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

``மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், நேற்று வரை ஒரு காவலர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அந்தக் காவலரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கற்கள் மற்றும் லத்தியால் தாக்கிய தடயங்கள் உள்ளன. மீதமுள்ள 4 பேரின் உடல்களிலும் துப்பாக்கிக் குண்டு காயங்கள் உள்ளன” என்று பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர் கூறியுள்ளார்.

கலவரத்தில் காயமடைந்து, முதல் ஆளாக மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட ரோகித் குமார் குக்லா என்ற 24 வயது இளைஞரைப் பற்றிப் பேசியுள்ள அவரது தந்தை, ``என் மகன் தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தைச் சரிசெய்யும் பணி செய்துவருகிறான். நேற்று அவன், ஒரு இடத்தில் தன் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், 10 முதல் 15 பேர் அடங்கிய கும்பல் அவனைச் சூழ்ந்துகொண்டு தாக்கியுள்ளது.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை
AP

மேலும், அவர்கள் துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். கலவரக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், என் மகனின் தொடைப் பகுதியில் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளன. அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகின்றனர்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

`ஒரே இடத்தில் குவிந்த இரு தரப்பினர்; பாடல் மூலம் எதிர்ப்பு!’ - டெல்லியில் நடந்தது என்ன?

குரு தத் மருத்துவமனை மட்டுமில்லாது, வடகிழக்கு டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனையில், காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர். அவர்களில் பல காவலர்களும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி வன்முறையில் காவலர்களை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞர் பற்றித்தான் நேற்று முதல் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 33 வயதான அந்த இளைஞர் பெயர் முகமது ஷாருக் என்றும், அவர் டெல்லியின் ஷாஹ்தரா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாருக்
ஷாருக்
Twitter

இவர், காவலரை மிரட்டியபடி வானத்தை நோக்கி 8 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். ஷாருக் தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானதும், அவரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பிறகு, நேற்று மாலையே அவர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்மீது ஆயுத சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நபரைப் பற்றி முழுமையான விவரம் இன்னும் வெளியாகவில்லை. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் வடகிழக்கு டெல்லியில் இதுவரை 4-க்கும் அதிகமான வன்முறை வெடித்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு