Published:Updated:

`என் கணவர் உயிரைப் பறித்தது கொரோனா அல்ல; மோசமான மருத்துவமனைகள்தான்!' - வீடியோவில் கலங்கிய பெண்

நீரஜா தம்பதி
நீரஜா தம்பதி

டெல்லியிலிருந்து பீகாருக்கு ஹோலிப் பண்டிகை கொண்டாட வந்த பெண்ணின் கணவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரைக் காப்பாற்ற அவரின் மனைவி மூன்று மருத்துவமனைகளுக்குக் கணவரை அழைத்துச் சென்றும் டாக்டர்களின் அலட்சியத்தால் கணவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

கொரோனா இரண்டாவது அலை வடமாநிலங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாத பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் இதில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பெண் ஒருவர் ஹோலிக்காக டெல்லியில் இருந்து பீகார் சென்றபோது, தன் கணவரை கொரோனாவுக்குப் பறிகொடுத்துள்ளார்.

டெல்லி, நொய்டாவைச் சேர்ந்தவர் 31 வயதாகும் நீரஜா பாண்டே (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஹோலிப் பண்டிகை கொண்டாடுவதற்காகத் தன் கணவருடன் பீகாருக்கு வந்தார். வந்த இடத்தில் ஏப்ரல் 11-ம் தேதி அப்பெண்ணின் கணவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து காய்ச்சல் இருந்துள்ளது. உடனே அவருக்கு இரண்டு முறை கொரோனா சோதனை எடுத்துப் பார்த்தனர். ஆனால் ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்தது. அப்படி இருந்தும் நீரஜாவின் கணவர் உடல்நிலை மோசமடைந்தது.

இந்நிலையில் நீரஜாவின் அம்மாவுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நீரஜா டெல்லியில் தனக்குத் தெரிந்த ஒரு டாக்டருக்கு போன் செய்து நிலைமையை எடுத்துக் கூறினார். உடனே நெஞ்சுப்பகுதியில் சி.டி.ஸ்கேன் எடுத்துப்பார்க்கும்படி அவர் அறிவுரை வழங்கினார்.

நீரஜா தம்பதி
நீரஜா தம்பதி

இதையடுத்து சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது அவருக்குக் கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே பாகல்பூர் குளோசல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அப்பெண்ணின் கணவர். அப்பெண்ணின் தாயாரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

`மருத்துவமனையில் டாக்டர்கள் சரியாக சிகிச்சையளிக்க வில்லை. வார்டு உதவியாளர் அடிக்கடி காணாமல் போய்விடுவார். படுக்கை விரிப்பை மாற்றும்படி சொன்னதற்குகூட மாற்ற மறுத்துவிட்டார்' என்று கூறுகிறார் நீரஜா. அவரின் கணவர் பேசவே முடியாமல் தண்ணீர் வேண்டும் என்று சைகை செய்திருக்கிறார். அப்படி இருந்தும் மருத்துவமனை உதவியாளர் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கவில்லை. அதோடு நீரஜா தன் கணவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது மருத்துவமனை உதவியாளர் பின்னால் இருந்து அவரின் துப்பட்டாவை இழுத்துள்ளார். திரும்பிப் பார்த்தபோது அவர் இடுப்பை பிடித்தபடி சிரித்துக்கொண்டு நின்றிருக்கிறார் மருத்துவமனை உதவியாளர்.

துப்பட்டாவை தன் வசம் இழுத்துக்கொண்ட நீரஜா, மேற்கொண்டு ஏதாவது செய்தால் தன் கணவர் மற்றும் தாயாருக்குத்தான் சிக்கல் ஏற்படும் என்று கருதி எதுவும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.

அம்மருத்துவமனையில் நீரஜாவின் கணவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருக்கிறது. உடனே அவரை வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி கேட்டுக்கொண்டது நிர்வாகம். மாயாகஞ்ச் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் நோயாளிக்கு சிகிச்சையளிக்காமல், விளக்கை அணைத்துவிட்டு இருட்டில் அமர்ந்துகொண்டு மொபைல் போனில் படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று கூறுகிறார் நீரஜா. நீரஜா எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும் அவரின் கணவருக்கு ஆக்சிஜன் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து பாட்னாவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்குத் தன் கணவரை மாற்றினார் நீரஜா.

`ஆனால், அங்கும் ஏற்கெனவே இருந்த இரண்டு மருத்துவமனைகளைவிட மிகவும் மோசமான நிலை இருந்தது. மருத்துவமனை ஊழியர்கள் பாதியில் ஆக்சிஜனை பிடுங்கிச் சென்றுவிட்டனர்' என்று சொல்லும் நீரஜா, வெளியில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். மருத்துவமனையே சிலிண்டரை தலா 50,000-க்கு விற்பனை செய்திருக்கின்றனர். ஆனால், பாட்னா மருத்துவமனையில் நீரஜாவின் கணவர் சிகிச்சைப் பலனலிக்காமல் இறந்துபோனார்.

நீரஜா
நீரஜா
Screenshot from Twitter video

தன் கணவரை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்பதற்காக விமான ஆம்புலன்ஸில் டெல்லி கொண்டு சென்றுவிடக்கூட முயன்றார் நீரஜா. ஆனால், அவரின் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. தன் கணவரை காப்பாற்ற மூன்று மருத்துவமனைகளில் போராடியும் காப்பாற்ற முடியாமல்போனது நீரஜாவை மீளா துயரில் ஆழ்த்துவிட்டது.

மருத்துவமனைகள் நடந்துகொண்ட விதம் குறித்து நீரஜா வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். `கொரோனா வந்தால் பொதுமக்கள் தங்களது சொந்தங்களை பொறுப்புடன் கவனித்துக்கொள்ளுங்கள். யாரும் மருத்துவமனையை நம்பாதீர்கள். என் கணவரை நான் கொரோனாவுக்கு இழக்கவில்லை, மருத்துவமனை கவனக்குறைவு, ஆக்சிஜன் போன்றவைதான் அவர் உயிரிழப்புக்குக் காரணம்' என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு