Published:Updated:

`தமிழக - கேரள எல்லையான வாளையாரில் நடந்தது என்ன?' - நேரடி ரிப்போர்ட்

வாளையார் சோதனைச் சாவடி
வாளையார் சோதனைச் சாவடி

தமிழக-கேரள எல்லையில் கடந்த சில நாள்களாக நடந்த சம்பவங்களின் விரிவான தொகுப்பு...

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கோவை அருகே உள்ள தமிழக-கேரள எல்லை கடந்த வாரம் மூடப்பட்டது. ‘அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்களும் மருத்துவ உதவிக்கான வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்படும்’ என்று அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

வாளையார்
வாளையார்

இதனிடையே, கேரளாவிலிருந்து ஆம்புலன்ஸ்கள் மூலம் தமிழர்கள் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியானது- கொரோனா பதற்றம் காரணமாக, கேரளாவில் பணியாற்றும் தமிழக கூலித் தொழிலாளிகளை காவல்துறை அழுத்தம் கொடுத்து வெளியேற்றுவதாகப் புகார் எழுந்தது.

`என்னதான் நடக்கிறது' என்பதை அறிய நேரடியாகக் களத்தில் இறங்கி விசாரித்தோம். முதலில் வாளையார் சோதனைச் சாவடியில் பணியாற்றிவரும் அதிகாரிகளிடம் பேசினோம். ``கேரளாவிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்களை எல்லைக்குள் அனுமதித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆவணங்களை வைத்திருந்த தமிழர்களை சோதனை செய்துவிட்டு, தமிழகத்துக்குள் அனுமதித்தோம். ஆனால், சட்டவிரோதமாக ஆம்புலன்ஸ் மூலமாக பொதுமக்களை இங்கு அழைத்து வருகின்றனர்.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

அப்படி வந்தவர்களை எச்சரித்து அனுப்பினோம். அதற்குள், `நாங்கள் நோயாளிகளை ஏற்றிவந்த ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்திவிட்டோம்' என வதந்தியைக் கிளப்பிவிட்டனர். இதனால், கேரள போலீஸாரும் ஊடக பிரதிநிதிகளும் எல்லைப் பகுதியில் குவிந்தனர். தமிழகத்திலிருந்து யாரையுமே அனுமதிப்பதில்லை என்று தவறான தகவல்களைப் பரப்பினார்கள். கேரளாவிலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் எல்லைப் பகுதியில் குவிகின்றனர்” என்றனர்.

இதையடுத்து, கேரளாவிலிருந்து வந்த மக்களிடம் பேசினோம், ``நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளர், `வீட்டை பூட்டிவிட்டு உங்களது ஊருக்கே செல்லுங்கள்' என்றார். வேலை செய்யும் இடத்திலும் அதைத்தான் சொன்னார்கள்.

கேரளாவில் இருந்து வரும் தமிழர்கள்
கேரளாவில் இருந்து வரும் தமிழர்கள்

மேலும், கேரள போலீஸாரும், `ஊருக்கே செல்லுங்கள்' என்று திருப்பி அனுப்பினர். அதனால்தான் கிடைத்த வாகனங்களிலும் பொடிநடையாகவும் இங்கு வந்தோம்” என்றனர்.

வாளையாரில் உள்ள தமிழக சோதனைச் சாவடியில், மக்கள் நீண்ட வரிசையில் நின்ற காட்சிகளையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில், மலப்புரம் பகுதியில் கட்டட வேலை செய்துவந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர்களை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வெளியேற்றியதாகத் தகவல் வெளியானது.

கள்ளக்குறிச்சி தொழிலாளிகள்
கள்ளக்குறிச்சி தொழிலாளிகள்

இதையடுத்து, தமிழகத்துக்குள் நுழைந்த அவர்களுக்கு தமிழக அதிகாரிகள் உணவு கொடுத்து, அவர்கள் ஊருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

மேற்கண்ட இந்தத் தகவல்களை அடிப்படையாக வைத்து 26.3.2020 தேதி அன்று “வலுக்கட்டாயமாக வெளியேற்றம்... கேரளாவின் செயலால் தெருவில் தஞ்சமடைந்த தமிழகத் தொழிலாளிகள்” என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரை வெளியான சில மணிநேரத்திலேயே அது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. கேரள அதிகாரிகளின் நடவடிக்கைக்குக் கண்டனங்கள் எழுந்த நிலையில், மறுபக்கம், `இது தவறான செய்தி. கேரளாவிலிருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை. விகடன் வதந்தியைப் பரப்புகிறது' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

வாளையார்
வாளையார்

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், எளிய மக்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்ற நோக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரை குறித்து வந்த விமர்சனங்களால் அதிர்ச்சியடைந்தோம். கள நிலவத்தைத் தெரிந்துகொள்ள 27.3.2020 தேதியன்று மீண்டும் வாளையார் சென்றோம்.

அங்கு பணியில் இருந்த தமிழக அதிகாரிகளிடம் பேசினோம். `` இன்றுகூட 9 ஆம்புலன்ஸ்களைத் திருப்பி அனுப்பியுள்ளோம். ரயில்வே ட்ராக் வழியாக சிலர் தமிழகத்துக்குள் நுழையப் பார்த்தனர். அவர்களையும் திருப்பி அனுப்பிவிட்டோம். 5 நாள்களில் 10,000 பேர் இங்கு வந்துள்ளனர். அங்கிருக்கும் போலீஸ் அதிகாரிகள்தான் கட்டாயப்படுத்தி, வெளிமாநிலத் தொழிலாளிகளை வெளியேற்றுகின்றனர். பிரச்னையின் தீவிரத்தை உணராமல் பல வாகனங்களில் மக்களை ஏற்றிவருகின்றனர்.

வாளையார்
வாளையார்

இதனால், எந்த மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்றுதான் நாங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம். கடந்த சில நாள்களுடன் ஒப்பிடும்போது, அங்கிருந்து வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே நேரத்தில், முழுமையாகக் குறைந்துவிட்டது என்றும் சொல்லிவிட முடியாது” என்றனர்.

அதிகாரிகள் நம்முடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, அந்த வழியாக இரண்டு தமிழர்கள் நம் எல்லைக்குள் நுழையப் பார்த்தனர். ஆனால், அவர்களைத் தடுத்த தமிழக போலீஸார், ‘இப்போதுதானே உங்களை திருப்பி அனுப்பினோம். இங்கே வராதீர்கள்’ என்று சொல்லி அவர்களை மீண்டும் கேரள எல்லைக்குள் அனுப்பினர். அந்தக் கட்டடத் தொழிலாளிகளிடம் சில நிமிடங்கள் நாம் பேசினோம். அதில் ஒரு முதியவர், கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பேசத்தொடங்கினார்.

கடலூர் முதியவர்
கடலூர் முதியவர்

``கடலூர்தான் எனக்கு சொந்த ஊரு. முதலாளி நேத்துதான் காசு கொடுத்து, ‘உங்க ஊருக்கே போய்க்கோ... இங்க இருக்காதே’னு சொன்னாரு. அங்க இருக்கற போலீஸ்காரங்களும், ‘நீங்க தமிழ்நாட்டுக்கே போங்க’னு சொன்னாங்க. சாப்பாடுகூட கொடுக்கல. பாலக்காட்டுல இருந்து நடந்தே வந்தேன். அங்க போனா அவங்க அடிப்பாங்க. எங்கள எப்படியாச்சும் தமிழகத்துக்குள்ள அனுமதிக்கச் சொல்லுங்க” என்று அழுதார்.

அதற்குள் அதிகாரிகள் அவரை விரட்டினர். எங்கே செல்வதென்று தெரியாமல் இரண்டு எல்லைகளுக்கு நடுவே நின்று அவர் தத்தளித்துக்கொண்டிருந்தார். இந்தச் சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே கேரளாவில் இருந்து, தமிழகப் பதிவு எண் கொண்ட ஒரு லாரி வந்தது. போலீஸாரும் அந்த லாரியை சோதனை செய்தனர்.

லாரியில் வந்த தொழிலாளிகள்
லாரியில் வந்த தொழிலாளிகள்

அந்த லாரியில் அத்தியாவசியப் பொருள்கள் எதுவும் இல்லை. அதில் இருந்தது ஐந்து மனித உயிர்கள். ஆம், அவர்கள் கேரளத்தில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளிகள். அவர்களையும் தமிழக அதிகாரிகள் உடனடியாக கேரளாவுக்கே திருப்பி அனுப்பினர்.

ஆனால், கேரள எல்லையில் இருந்த போலீஸாரோ, `இங்க வராதே.. அப்படியே திரும்பிச் செல்’ என்கின்ற வகையில் அவர்களை நோக்கி கை அசைத்தனர். இதனால், எங்கு செல்வதென்று தெரியாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருந்தனர். அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக அவர்களிடம் நம்மால் பேச முடியவில்லை.

லாரியில் வந்தவர்கள்
லாரியில் வந்தவர்கள்

கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில், சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல், பணிக்குச் சென்ற ஊருக்கும் திரும்ப முடியாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருந்ததை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.

இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் பேசினோம். ``இரண்டு நாள்களுக்கு முன்பு அப்படி ஒரு பிரச்னை நடந்ததாக தகவல் வந்தது. உடனடியாக பாலக்காடு கலெக்டரிடம் பேசினேன். மேலும், கேரள அரசு செயலரிடமும் பேசினேன். அந்தப் பிரச்னை அப்போதே முடிந்துவிட்டது. இரண்டு தரப்பிலும் எந்த மக்களையும் வெளியேற்றக் கூடாது என்று பேசிவிட்டோம். தற்போது, ரயில்வே ட்ராக் வழியாக சிலர் வருவதாகப் புகார் வந்துள்ளது.

கோவை ஆட்சியர் ராசாமணி
கோவை ஆட்சியர் ராசாமணி

இதுதொடர்பாக போலீஸ் எஸ்.பி-யிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொன்னேன். இதையடுத்து, ரயில்வே ட்ராக்கிலும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்” என்றார்.

பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பாலமுரளியிடம் பேசினோம், `` கேரளாவில் பணியாற்றும் அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் நாங்கள் முகாம்களை அமைத்து, உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வழங்கி வருகிறோம். 21 நாள்கள் பணி இல்லை என்பதால், சிலர் தங்களது குடும்பத்தைப் பார்க்க வேண்டுமென்ற நோக்கத்தில் கிளம்பி வருகின்றனர். பாலக்காடு மட்டுமல்ல, பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகின்றனர். அவர்கள் யாரையும் நாங்கள் வெளியேற்றவில்லை.

பாலக்காடு ஆட்சியர் பாலமுரளி
பாலக்காடு ஆட்சியர் பாலமுரளி

இங்கு மட்டுமல்ல. நாடு முழுவதுமே பல பகுதிகளில் மக்கள் தங்களது ஊர்களுக்கு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். மிகவும் குறைந்த அளவில், எங்கேயாவது, ஏதாவது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்திருக்கலாம். அது அனைத்து பகுதிகளிலும் நடப்பதுதான். அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டுமென்றுதான் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்றார்.

தமிழர்கள் வெளியேற்றப்படுவது தொடர்பான செய்தி குறித்துப் பேசிய தமிழக சி.பி.எம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கனகராஜ், `` கேரள அரசு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அந்தச் செய்தி எங்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இரு மாநிலங்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டுவதற்கு இது வழிவகுக்கும். இதுதொடர்பாக, கோவை மற்றும் கேரளாவில் நாங்களும் விசாரித்தோம். ஆனால், நீங்கள் சொல்வது போல எந்தச் சம்பவமும் நடந்ததாக யாரும் சொல்லவில்லை. அப்படியே தவறு நடந்திருந்தாலும், அதற்காக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கனகராஜ்
கனகராஜ்

ஒருவேளை நீங்கள் சொல்வது போல இருந்தால், அது மிகத் தீவிரமான பிரச்னை. அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இதுதொடர்பாக எங்களின் மாநில செயலாளர், கேரள முதல்வர் மற்றும் சி.பி.எம் கேரள மாநில செயலாளருக்குக் கடிதம் அனுப்ப உள்ளார்” என்றார்.

கேரளா மீது வெறுப்புணர்ச்சி, கேரள அரசின் மீது காழ்ப்புணர்ச்சி என்பன போன்ற கருத்துகள் மிகவும் வேதனையளிக்கிறது. செய்திக்கான பணியில், வெறுப்புணர்ச்சி, காழ்ப்புணர்ச்சி போன்றவற்றுக்கு இடம் கொடுக்காமல் உண்மையை உரக்கச் சொல்லி, அதன் மூலம் தீர்வைக் கொடுப்பதுதான் விகடனின் பணியாக இருந்து வருகிறது.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

தமிழர்-மலையாளி என்ற பாகுபாட்டுக்கு எல்லாம் விகடனில் இடமே இல்லை. சொல்லப்போனால், கேரள அரசின் செயல்பாடுகள் குறித்தும், நலத்திட்டங்கள் குறித்தும் விகடனில் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம்.

சி.ஏ.ஏ போராட்டங்கள் வெடித்திருந்த நேரத்தில் காசர்கோடு பகுதியில் தங்களது இந்து வளர்ப்பு மகளுக்குக் கோயிலில் திருமணம் செய்து வைத்த இஸ்லாமிய தம்பதி, கண்ணூரில் ஏழை மாணவர்களுக்கு நிலம் எழுதிக் கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர், பினராயி விஜயனுடன் செல்ஃபி எடுத்த மாற்றுத்திறனாளி பிரணவின் சிறப்புப் பேட்டி, கொரோனா தொற்றுக்காக 20,000 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்த கேரள அரசின் முன்மாதிரி நடவடிக்கை என்று சமீபத்தில்கூட கேரளா தொடர்பான பல பாசிட்டிவ் கட்டுரைகளை விகடனில் எழுதியிருக்கிறோம்.

வாளையார்
வாளையார்

எப்போதெல்லாம் எளிய மக்களுக்குப் பிரச்னையோ அப்போதெல்லாம் விகடனின் குரல் ஓங்கி ஒலிக்கும். எளிய மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே அந்தக் கட்டுரையின் ஒரே நோக்கம். அதிகாரிகளின் நடவடிக்கைகள் நம்பிக்கைகளை விதைத்துள்ளன. களத்திலும் சுமூகநிலை திரும்பி வருகிறது. அந்தவிதத்தில் நாம் கட்டுரை வெளியிட்டதன் நோக்கம் நிறைவேறியதில் மகிழ்ச்சியடைகிறோம்.

``எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே".

அடுத்த கட்டுரைக்கு