Published:Updated:

`பா.ஜ.க-வைக் கண்டுகொள்ளாத சிவசேனா; பிளான் பி!' - மகாராஷ்ட்ரா முதல்வர் பட்னாவிஸ் ராஜினாமா

மகாராஷ்ட்ரா முதலமைச்சர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷியாரியிடம் அளித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ் ( ANI )

சமீபத்தில் நடந்துமுடிந்த மகாராஷ்ட்ரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க - சிவசேனா கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. கடந்த மாதம் 24-ம் தேதி அறிவிக்கப்பட்ட முடிவுகளில் இந்தக் கூட்டணி பெரும்பான்மை பெற்றும், இதுவரை ஆட்சியமைக்க முடியாமல் அங்கு இழுபறி நீடித்துவருகிறது. மொத்தமுள்ள 288 இடங்களில் பா.ஜ.க 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. எதிர்க்கட்சிகளான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வென்றன.

பட்னாவிஸ் - உத்தவ் தாக்கரே
பட்னாவிஸ் - உத்தவ் தாக்கரே

ஆட்சியமைக்க 145 இடங்கள் இருந்தால் போதும் என்ற நிலையில், பா.ஜ.க - சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றது. இருப்பினும் முதலமைச்சர் பதவியில் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் இரண்டரை ஆண்டுகள் அமர வேண்டும் என பா.ஜ.க-வுக்கு சிவசேனா செக் வைத்தது. மேலும், அமைச்சரவையில் சரிபாதி வேண்டும் என்றும் சிவசேனா கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், சிவசேனாவின் கோரிக்கைகளுக்கு பா.ஜ.க செவிசாய்க்கவில்லை. இதனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாள்கள் ஆகியும் மகாராஷ்ட்ராவில் யாரும் ஆட்சியமைக்க உரிமைகோர முடியாத சூழல் இருக்கிறது.

நாளொரு திருப்பமும் பொழுதொரு முன்னேற்றமுமாக மகாராஷ்ட்ரா அரசியலில் மாறிமாறி புயலடித்துக் கொண்டிருக்கிறது. தங்களுக்கு 170 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறிக்கொள்ளும் சிவசேனா, ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரவில்லை. பா.ஜ.க தரப்பில் முதலமைச்சர் பொறுப்பேற்று, தங்களது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்கட்டும் என்று சிவசேனா சவால் விடுத்துவருகிறது. அப்படி அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதபட்சத்தில் இரண்டாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில் சட்டப்பேரவையில் எங்கள் பலத்தைக் காட்டுவோம் என்று சிவசேனா தரப்பில் கூறியிருக்கிறார்கள்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இதுதொட-ர்பாக சமீபத்தில் தங்கள் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னா மூலம் பா.ஜ.கவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது சிவசேனா. அதன் தலையங்கத்தில், பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதபட்சத்தில் தேசியவாத காங்கிரஸின் 54 எம்.எல்.ஏ-க்கள், காங்கிரஸின் 44 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் சிலரின் உதவியால் இரண்டாவது பெரிய கட்சியான தங்களால் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சிக்கட்டிலில் அமர முடியும்' என்றும் சிவசேனா கருத்து தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, ``நான் அறிந்தவரை மகாராஷ்ட்ரா அமைச்சரவையில் உள்ள இடங்களை சரிசமமாகப் பிரித்துக்கொள்வது மற்றும் முதலமைச்சர் பதவியைப் பிரித்துக்கொள்வது தொடர்பாக பா.ஜ.க - சிவசேனா இடையில் எந்தவித ஒப்பந்தமும் இல்லை'' என்றார்.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்
ANI

ஆளுநரிட ம் ராஜினாமா கடிதத்தை அளித்தபின்னர் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், ``ஆளுநர் எனது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். 5 ஆண்டுகள் மகாராஷ்ட்ரா மக்களுக்கு சேவை செய்ததில் மகிழ்ச்சி. தேர்தல் முடிவுகள் வெளிவந்த அன்று உத்தவ் தாக்கரே, அரசு அமைப்பது தொடர்பாக எல்லா வாய்ப்புகளும் இருப்பதாகக் கூறியது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள், எங்களது கூட்டணிக்கு பெரும்பான்மை அளித்திருந்த நிலையில், இது மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியது. நான் மீண்டும் ஒருமுறை தெளிவாகக் கூற விரும்புகிறேன். முதலமைச்சர் பதவியை இரண்டு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்துகொள்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக அமித் ஷாவோ, நிதின் கட்கரியோ எதுவும் கூறவில்லை.

ஆளுநரைச் சந்திக்கும் பா.ஜ.க; எம்.எல்.ஏ-க்களை அழைக்கும் சிவசேனா!- உச்சத்தில் மகாராஷ்டிரா அரசியல் களம்

பால் தாக்கரேவை நாங்கள் எல்லோரும் மதிக்கிறோம். அதேபோல், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகக்கூட நாங்கள் எந்தக் கருத்தையும் தெரிவித்ததில்லை. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாகக் குறிப்பாகக் கடந்த 10 நாள்களாக பிரதமர் மோடி உட்பட எங்கள் கட்சியின் தலைமையைப் பற்றி அவர்கள் (சிவசேனா) பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதபடி இருக்கிறது. உத்தவ் தாக்கரேவுடன் எனக்கு நெருங்கிய நட்பு இருக்கிறது. அது தொடரும். நான் அவருக்கு பலமுறை போன் செய்தேன். அதற்கு அவர் இதுவரை பதிலளிக்கவில்லை'' என்பதோடு முடித்துக்கொண்டார்.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

இந்தச் சூழலில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கடந்த சில நாள்களாக பா.ஜ.க தரப்பிலிருந்து வந்த அழைப்புகளை சிவசேனா தொடர்ந்து நிராகரித்து வந்திருக்கிறது என்கிறார்கள். தேசியவாத காங்கிரஸ் தலைமையுடன் அந்தக் கட்சியினர் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. யாரும் ஆட்சியமைக்க உரிமைகோராத நிலையில், மகாராஷ்ட்ராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.