Published:Updated:

''அப்போ 10 வயசு இருக்கும்.. சாட்சி சொன்னேன்.. சொந்தங்கள் ஒதுக்கியது!''- தேவிகா நினைவில் நவம்பர் 26

தேவிகா
தேவிகா ( Humans of Bombay )

தீவிரவாதிகளுக்கு எதிராக நாங்கள் சாட்சியம் அளித்தால் பயங்கரவாதிகளால் அவர்களுக்கு ஏதாவது பிரச்னை வரும் என நினைத்தனர்.

மும்பையைச் சேர்ந்த தேவிகா ரோட்டவன் (Devika Rotawan ) வாழ்க்கையில், ‘நவம்பர் 26’ மறக்கமுடியாத நாள் என்றால் அஜ்மல் கசாப் மறக்க முடியாத பெயர். 2008, நவம்பர் 26-ம் தேதி மும்பை தனது வழக்கமான பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. கடற்கரை வழியாக மும்பை நகருக்குள் நுழைந்த தீவிரவாதிகள், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன்பின் தாஜ் ஹோட்டல் , ஓரியண்ட் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்தினர். ஹோட்டலின் உள்ளே பிணைக்கைதிகளாக நூற்றுக்கணக்கானவர்கள் பிடித்து வைக்கப்பட்டனர். மூன்று நாள்கள் போராட்டத்துக்குப் பின்னர் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட அஜ்மல் கசாப் கைதுசெய்யப்பட்டான். நீதிமன்றம் தூக்குத்தண்டனை அளித்தது.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் அஜ்மல் கசாப்
சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் அஜ்மல் கசாப்

இந்தத் தாக்குதலில் தேவிகா என்பவர் காயமடைந்தார். அப்போது அவருக்கு 10 வயது. இந்தச் சம்பவம் நடந்து 11 வருடங்கள் ஆகின்றன. அந்த நாளின் மக்களின் அலறல் சத்தங்கள் தேவிகாவின் செவிகளில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. அந்த நினைவுகள்குறித்து Humans of Bombay என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் தேவிகா பகிர்ந்துகொண்டதில் இருந்து, “ எனக்கு அப்போது 10 வயதுதான் இருக்கும். என்னுடைய வலது காலை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. நான் என் தந்தை மற்றும் சகோதரனுடன் அங்கே காத்திருந்தேன். எங்களைச் சுற்றி ஏதோ ஒரு குழப்பமான சூழல் நிலவியது. எங்களுக்கு, அங்கே என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இங்கிருந்து ஓடிவிடு என என்னுடைய உள்ளுணர்வு கூறியது.

`தாயின் மரணம்... 7 வயதில் பாலியல் வன்கொடுமை'- வீழ்ந்த போதெல்லாம் விருட்சமாக எழுந்த நட்டாஷா!

என்னை நோக்கி ஒருவர் துப்பாக்கியுடன் சுடுவதைக் கண்டேன். எனக்கு கடுமையான வலி இருந்தது. நான் சரிந்தேன். அடுத்த நாள், மருத்துவமனையில் கண் விழித்துப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. 26-ம் தேதி என்ன நடந்தது என்பதை மருத்துவர்கள் என்னிடம் கூறினர். நான் மிகவும் கோபமடைந்தேன். பெண்கள் மற்றும் குழந்தைகள் கண்முன்னே மடிந்தது மீண்டும் கண்முன்னே வந்துபோனது. அந்த முகம், என் மனத்தில் தெளிவாக இருந்தது. என் காயங்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக நான் ஒன்றரை மாதம் மருத்துவமனையில் கழித்தேன். என்னுடைய நினைவிலிருந்து அந்த முகத்தை என்னால் அழிக்க முடியவில்லை.

தேவிகா
தேவிகா
Humans of Bombay

நான் நன்றாகக் குணமடைந்தவுடன், மருத்துவமனையிலிருந்து எனது சொந்தக் கிராமத்துக்குச் சென்றேன். நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பதற்காக என் தந்தையை போலீஸார் தொடர்புகொண்டனர். அந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் என்பதால், நாங்கள்தான் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காட்ட வேண்டியிருந்தது. நான் பயப்படவில்லை. அவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நாங்கள் இந்த முடிவை எடுத்த பின்னர், எங்கள் குடும்பத்தினர் எங்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டனர். தீவிரவாதிகளுக்கு எதிராக நாங்கள் சாட்சியம் அளித்தால், பயங்கரவாதிகளால் அவர்களுக்கு ஏதாவது பிரச்னை வரும் என நினைத்தனர்.

காலில் எனக்கு அறுவைசிகிச்சை நடந்திருந்ததால், ஊன்று கோலுடன் நீதிமன்றத்துக்கு சென்றேன். எனக்கு முன்பாக நான்கு நபர்கள் நிறுத்திவைக்கப்பட்டனர். நான் உடனடியாக அஜ்மலை அடையாளம் கண்டுகொண்டேன். என் மனம் முழுவதும் கோபம் நிறைந்திருந்தது. நான் அங்கேயே நீதி கிடைக்க வேண்டும் என விரும்பினேன். நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என முடிவு எடுக்கவைத்த தருணமும் அதுதான். நான் தைரியமாக இருப்பதாக நினைத்தேன். ஆனால், இதற்குப் பின் எல்லோரும் எங்களை விட்டு விலகத் தொடங்கினார்கள்.

தேவிகா  நீதிமன்றத்தில்
தேவிகா நீதிமன்றத்தில்

என் தந்தை பழக்கடை வைத்திருந்தார். யாரும் எங்களுடன் வியாபாரம் செய்ய விரும்பவில்லை. அதன் காரணமாக அந்தத் தொழிலை விடவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டோம். நாங்கள் இருந்த நிலத்தின் உரிமையாளர் வாடகையை உயர்த்தினார். நாங்கள் ஏதோ விளம்பரத்தின்மூலம் அதிகமாக பணம் சம்பாதிக்கிறோம் என நினைத்துவிட்டார். மாநில அரசு எங்களுக்கு நிலம் தருவதாகக் கூறியது. அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், நாங்கள் பின்வாங்கவில்லை தாய் நாட்டிற்கு செய்யவேண்டிய கடமையைச் செய்தோம்.

அஜ்மல் கசாப் இப்போது உயிரோடு இல்லை. நான் ஐஏஎஸ் அதிகாரியாக இந்த அநீதிகளுக்கு எல்லாம் எதிராகப் போராடிய பின்னர், எனது கோபம் அடங்கும். இன்று வரை என்னால் தீபாவளிப் பண்டிகையும் வாண வேடிக்கையும் ரசிக்க முடியவில்லை. கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற்றால் என்னால் கொண்டாட முடியவில்லை. அந்த பட்டாசு சத்தம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது” என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு