Published:Updated:

`சரயு ஸ்நானம்; களைகட்டும் கந்துமூல்!’ - அயோத்தியில் குவிந்த பக்தர்கள் #VikatanInAyodhya

அயோத்தியில் இன்று சரயு ஸ்நானம் என்ற விழா கொண்டாடப்படுவதால் பல லட்சக்கணக்கான மக்கள் அங்கு குவிந்துள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சரயு ஸ்நானம்
சரயு ஸ்நானம்

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில், தீபாவளிக்குப் பிறகு கார்த்திகை பூர்ணிமா அல்லது சரயு ஸ்நானம் எனப்படும் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது.

அயோத்தி
அயோத்தி

அங்குள்ள சரயு நதியில் புனித நீராடி, கடவுளை வழிபட்டால் அனைத்துவித நன்மைகளும் கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. அதன்படி உத்தரப்பிரதேசம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஐந்து லட்சம் பேர் இன்று அயோத்திக்கு வருகை தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று அதிகாலை 4 மணி முதல் மக்கள் சரயு நதியில் புனித நீராடி வருகின்றனர்.

`தீர்ப்புக்குப் பின் எப்படி இருக்கிறது அயோத்தி?' - நேரடி விசிட் #VikatanInAyodhya

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தின் தீர்ப்பு வெளியாகி சில நாள்களேயான நிலையில் அங்கு இவ்வளவு பெரிய விழா கொண்டாடப்படுகிறது. இதனால் அயோத்தி முழுவதும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கந்த் மூல்
கந்த் மூல்

பொதுவாக, ஐந்து லட்சம் பேர் ஓர் இடத்தில் கூடினாலே, அதற்குப் பெரிய அளவில் பாதுகாப்பு இருக்கும். தற்போது தீர்ப்பும் வெளியாகியுள்ளதால் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அயோத்தி முழுவதும் மக்கள் நடமாட்டத்தை பாதுகாப்புத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

சரயு ஸ்நானம் விழாவையொட்டி, அயோத்தி முழுவதும் பல்வேறு தற்காலிக மற்றும் சிறிய கடைகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் பல கடைகளில் `கந்த் மூல்’ (khand mool) என்ற கிழங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடவுள் ராமர், காட்டிலிருந்தபோது இந்தக் கிழங்கை உண்டு பசியாறினார் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் சரயு ஸ்நானம் விழாவின் போது கந்த் மூல் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கந்த் மூல்
கந்த் மூல்

கிட்டதட்ட யானையின் காலளவு உள்ள இந்தக் கிழங்கு, சுவையில் இனிப்பு உருளைக்கிழங்கைப் போன்று உள்ளது. இதை மெல்லிய அளவில் வெட்டி அதன் மீது எலுமிச்சைச் சாற்றைத் தேய்த்து உண்கின்றனர். ராமர் பிரசாதம் எனப் பலரும் ஆவலாக இதை உண்டுவிட்டுச் செல்கின்றனர். மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள சித்ரகோட் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இது விளைவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

அயோத்தியில் ராமர் பிரசாதமாக பக்தர்கள் உட்கொள்ளும் 'கந்த்மூல்' அயோத்தியிலிருந்து விகடனின் லைவ் ரிப்போர்ட்டிங்! #VikatanInAyodhya #Ayodhya #AyodhyaVerdict

Posted by Vikatan EMagazine on Monday, November 11, 2019