Published:Updated:

`அப்பா, அவர் ஏன் என் கண்ணாடிய போட்டிருக்கார்?' - தோனி மகள் ஸிவா சேட்டையும் ரன்வீர் சிங் பதிலும்

இந்தக் காலத்தில் வளரும் குழந்தைகள் வித்தியாசமாக இருக்கிறார்கள். நான்கரை வயதில், என்னிடம் இப்படி ஒரு கண்ணாடி இருக்கிறது என்பது நிச்சயம் எனது நினைவிலே இருந்திருக்காது.

Ranveer singh - Ziva
Ranveer singh - Ziva ( Instagram )

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், திரைப்படங்கள் மட்டுமல்லாது பொது இடங்களிலும் வித்தியாசமான கெட்-அப்களில் தோன்றி டிரெண்ட் ஆவார். அவரது லுக், அவர் பயன்படுத்தும் உடை, கண்ணாடி என வெரைட்டி காண்பித்து கவனம்பெறுவார். இந்த முறை அவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகள் ஸிவா கவனத்தையும் பெற்றிருக்கிறார்.

ஸிவா
ஸிவா

தோனி, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் இந்திய அணிக்காக விளையாடவில்லை. சிறிது காலம் ராணுவத்தில் பயிற்சி பெற்று பணியாற்றிய நிலையில், தற்போது ஓய்வில் இருக்கிறார். இந்த ஓய்வுக் காலத்தை அவர் தனது குடும்பத்துடன் செலவிட்டுவருகிறார்.

இந்நிலையில், தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரன்வீர் சிங் மற்றும் தனது மகள் ஸிவா ஆகியோரது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் ஸிவா மற்றும் ரன்வீர் ஆகிய இருவரும் ஒரே மாதிரியான கண்ணாடிகளை அணிந்திருந்தனர். இந்தப் புகைப்படத்துக்குக் கீழே தோனி, ``ஸிவா இந்தப் புகைப்படத்தைப் பார்த்து, `இவர் ஏன் எனது கண்ணாடியை அணிந்துள்ளார்’ என்று கேட்டதோடு நிற்காமல், மாடிக்கு ஏறிச் சென்று தன்னுடைய கண்ணாடியை எடுத்துவந்து, `எனது கண்ணாடி என்னிடம் தான் இருக்கிறது’ என்றார்.

இந்தக் காலத்துக் குழந்தைகள் வித்தியாசமாக இருக்கிறார்கள். நான்கரை வயதில் என்னிடம் இப்படி ஒரு கண்ணாடி இருக்கிறது என்பது நிச்சயம் எனது நினைவிலே இருந்திருக்காது. அடுத்த முறை ஸிவா ரன்வீரை சந்திக்கும்போது, நிச்சயம் அவரிடம் `உங்களிடம் இருப்பதைப் போன்றே என்னிடமும் ஒரு கண்ணாடி இருக்கிறது’ எனத் தெரிவிப்பார்” என்று பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பெரும் கவனம் ஈர்த்த இந்தப் பதிவுக்குக் கீழே பலரும் ஸோ க்யூட் எனப் பதிவிட்டுவந்தனர். சிலர், 'தோனி மகள் ஸிவாவுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் ரன்வீர்' எனவும் கேட்டனர். இந்நிலையில் ரன்வீர் இந்தப் பதிவில்,

Ranveer Comment
Ranveer Comment

``Hahahahaha FASHIONISTA Z !!! 😍❤️🙌🏽🕶” என கமென்ட் செய்துள்ளார் ரன்வீர். நேற்று முதல் தோனியின் இந்தப் பதிவு செம வைரலாகிவருகிறது. `Elle Beauty’ என்னும் விருது வழங்கும் விழாவில்தான் ரன்வீர் இந்தக் கண்ணாடியுடன் வந்துள்ளார்.