Published:Updated:

உ.பி: `சோதனை முயற்சியாக 5 நிமிடம் ஆக்சிஜனை நிறுத்தினேன்; துடிதுடித்த நோயாளிகள்!’ -வீடியோவால் சர்ச்சை

பராஸ் மருத்துவமனை
பராஸ் மருத்துவமனை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளில் யார் யார் உயிர் பிழைப்பார்கள் என்பதை அறிந்துகொள்ள, சோதனை முறையில் 5 நிமிடங்கள் ஆக்சிஜன் விநியோகத்தைத் நிறுத்தியதாகக் கூறும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் இயங்கிவரும் பராஸ் மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நகரத்தின் சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் பராஸ் மருத்துவமனையில், ஆக்சிஜன் இருப்பு போதிய அளவில் தொடர்ந்து இருந்துவருவதால், ஏராளமான கொரோனா நோயாளிகள் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தநிலையில், இணையத்தில் சமீபமாகப் பரவிக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்றில், பராஸ் மருத்துவமனையின் உரிமையாளர் ஜெயின் என்பவர், "நகரத்தில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிவருகிறது. மோடி நகர் முழுவதும் எங்கும் ஆக்சிஜன் இருப்பே இல்லை என்று நிலை வந்துவிட்டது. அதனால் நோயாளிகள் அனைவரையும் வெளியேறிவிடுமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால், பெரும்பாலானோர் சிகிச்சையிலிருந்து வெளியேற மறுத்துவிட்டனர்.

அதனால் நான், சோதனை முறையில் ஒன்றைச் செய்தேன். மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளில் யார் யார் உயிர் பிழைப்பார்கள் என்பதை அறிந்துகொள்ளச் சோதனை முறையில் ஏப்ரல் 26-ம் தேதி காலை 7 மணியளவில் சுமார் 5 நிமிடங்களுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்தினேன். அப்போது சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் 22 பேர் மூச்சுத்திணறித் துடித்தனர். அதன் மூலம் அந்த நோயாளிகளால் ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை அறிந்தேன். அதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையிலிருந்த மற்ற 74 நோயாளிகளின் உறவினர்களை அழைத்து ஆக்சிஜன் சிலிண்டர்களை சொந்தமாக எடுத்து வருமாறு வலியுறுத்தினேன்" என்று அந்த வீடியோவில் கூறுகிறார். உத்தரப்பிரதேசத்தில் ஏற்கெனவே நிலைமை மோசமாக இருக்கும் நேரத்தில் வெளியாகியிருக்கும் இந்த வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆக்சிஜன்  தட்டுப்பாடு
ஆக்சிஜன் தட்டுப்பாடு

வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, மருத்துவமனை உரிமையாளரின் பேச்சு சர்ச்சையானது. ஆக்ரா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி பாண்டே இது குறித்து விளக்கமளிக்கையில், 'நாங்கள் வெளியாகியிருக்கும் வீடியோ குறித்து விசாரித்துவருகிறோம். தனிக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. வீடியோவில் கூறப்பட்டுள்ள சம்பவம் உண்மை என்று உறுதியாகும்பட்சத்தில் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும்" என்றார்.

ஆனால் இது குறித்து வீடியோவில் பேசியிருக்கும் பராஸ் மருத்துவமனை உரிமையாளர் ஜெயின் கூறுகையில், "நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. நாங்கள் சோதனை முறையில் ஆக்சிஜனை நிறுத்தியது உண்மைதான். ஆனால், ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு இன்னும் சிறப்பாகச் சிகிச்சை அளிக்கவே அவ்வாறு செய்தோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் 26-ம் தேதி நான்கு நோயாளிகளும், 27-ம் தேதி மூன்று நோயாளிகளும் மட்டும் உயிரிழந்துள்ளனர். ஒருவேளை வீடியோவில் கூறியிருந்ததுதான் உண்மையென்றால் 22 நோயாளிகள் அல்லவா உயிரிழந்திருக்க வேண்டும்" என்று கூறி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

மேலும், சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாவட்ட தலைமை நீதிபதி பிரபு சிங், "வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனை மிகப்பெரிய மருத்துவமனை. அங்கு கொரோனாவைத் தவிர்த்து பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மற்ற நோய் பாதிப்புகளால் சிகிச்சை பெற்றுவந்தவர்களும் ஒருவேளை உயிரிழந்திருக்கலாம். மாவட்ட சுகாதாரத்துறையின் தரவுகளின்படி பார்க்கையிலும், அந்த மருத்துவமனையில் குறிப்பிட்ட தேதியில் 22 பேர் உயிரிழந்ததாகத் தெரியவில்லை. வீடியோ குறித்து முழுமையாக விசாரித்த பின்னர் அது உண்மையாக இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு