Published:Updated:

கொரோனாவுக்கு வெல்கம் சொன்ன மத்தியப்பிரதேச சுகாதாரத்துறை செயலர்... அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்!

கொரோனா பாதித்த பல்லவி ஜெயின்
கொரோனா பாதித்த பல்லவி ஜெயின்

பல்லவி மற்றும் வீனா இருவரின் மகன்களும் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து மத்தியப்பிரதேசம் திரும்பியுள்ளனர். ஆனால், இருவருமே தங்கள் மகன்களின் டிராவல் ஹிஸ்ட்ரியை மறைத்து வீடுகளில் தங்க வைத்துள்ளனர். விளைவாக ... இவர்கள் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள்.

அண்மையில், பெங்களூருவில் ஒரு சம்பவம் நடந்தது. ரயில்வேதுறையில் பணி புரியும் பெண் உயர் அதிகாரி அவர். இவரின் மகன் இத்தாலியிலிருந்து பெங்களூருவுக்குத் திரும்பினார். வெளிநாட்டிலிருந்து வந்ததால், அவரை அதிகாரிகள் தனிமையில் இருக்க உத்தரவிட்டனர். தன் வீட்டில் மகனைத் தங்க வைத்தால் மற்றவர்களுக்கும் கொரோனா பரவி விடும் என்று அந்த பெண் அதிகாரி பயந்தார். இதனால், மகனின் டிராவல் ஹிஸ்டிரியை மறைத்து அந்தப்பெண் அதிகாரி, பெங்களூருவில் ரயில்வே துறைக்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் தங்க வைத்தார்.

இந்த நிலையில், 15 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு ரயில்வே அதிகாரியின் மகனுக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட, குட்டு உடைந்தது. மகனின் டிராவல் ஹிஸ்டிரியை மறைத்த அந்தப் பெண் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர். தற்போது, இதே போன்ற சம்பவம் மத்தியப்பிரரேசத்திலும் நடந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் இத்தகைய குற்றச்சாட்டில் சிக்கியிருப்பவர் சாதாரணமானவர் இல்லை. அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர். அவரின் பெயர் பல்லவி ஜெயின்.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

கடந்த ஏப்ரல் 3 - ந் தேதி மத்தியப்பிரதேச மாநில சுகாதாரத்துறை இயக்குநர் விஜய்குமாருக்கு கோவிட் 19 இருப்பது உறுதிசெய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவிட்டை எதிர்த்துக் களத்தில் அதி தீவிரமாகப் போராடிக்கொண்டிருக்கும் கடைநிலைப் பணியாளர்களை கொரோனா தொற்று தாக்கவில்லை. ஆனால், விஜய்குமாருக்குக் கொரோனா தொற்று இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரணையில். சமீபத்தில் அவர் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று வந்திருப்ப தெரியவந்தது. ஆனால், தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளாத அவர், தொடர்ந்து அலுவல் பணிகளைக் கவனித்துள்ளார்.

அலுவல் தொடர்பான கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். அடுத்த நாள் அதாவது ஏப்ரல் 4-ந் தேதி மத்தியப்பிரதேச அரசுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அந்த மாநில சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் பல்லவி ஜெயினைக் கொரோனா தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மட்டுமல்ல சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் வீனா சின்ஹா, துணைக் கூடுதல் இயக்குநர் வீரேந்திர குமார் சௌத்திரியையும் கொரோனா தாக்கியிருப்பது தெரியவந்தது

`ராஜமாதா' தமிழிசை - `பாகுபலி' முருகன்...   தமிழக பா.ஜ.க. தலைவராக முருகன் ஆன கதை!

இதில், பல்லவி மற்றும் வீனா இருவரின் மகன்களும் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து மத்தியப்பிரதேசம் திரும்பியுள்ளனர். ஆனால், இருவருமே தங்கள் மகன்களின் டிராவல் ஹிஸ்ட்ரியை மறைத்து வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விளைவாக... இவர்கள் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள். மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகானுடன் நடந்த கூட்டத்தில்கூட கொரோனா அறிகுறியுடன் பல்லவி ஜெயின் பங்கேற்றுள்ளார். இதன் காரணமாக, பல்லவி ஜெயின் வழியாக மற்ற அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஒரு மாநிலத்தின் சுகாதாரத்துறைச் செயலரே இத்தகையை அலட்சியத்துடன் நடந்துகொண்டிருப்பது இப்போது பெரும் சர்ச்சை ஏற்பட வழி வகுத்துள்ளது.

கூட்டங்களில் பங்கேற்றாலும் நான் யாரையும் தொடவில்லை. என்னால் கொரோனா பரவியது என்பதை ஏற்க முடியாது!
பல்லவி ஜெயின்

இது குறித்து மத்தியப்பிரதேச அதிகாரிகள் கூறுகையில், '' மார்ச் 16- ந் தேதி பல்லவி ஜெயின் மகன் அமெரிக்காவிலிருந்து டெல்லி திரும்பினார். வீட்டில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அவர் அறிவுறுத்தப்பட்டார். கொரோனா தொற்று லேசான பாதிப்பில் இருந்தால், வீட்டில் தனிமையில் இருக்கச் சொல்வது வழக்கமான ஒன்றுதான். இதையே பல்லவி ஜெயினும் செய்தார். ஆனால், அவரும் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். மாறாக அவரோ கூட்டங்களில் பங்கேற்றார். இதுதான் பல்லவி ஜெயின் செய்த தவறு'' என்கின்றனர்.

தற்போது, கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பல்லவி ஜெயின், 'கூட்டங்களில் பங்கேற்றாலும் தான் யாரையும் தொடவில்லை. அதனால், என் வழியாக யாருக்கும் கொரோனா பாரவியிருக்க வாய்ப்பில்லை' என்று மறுத்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல், கெஸ்ட் ஹவுஸில் பல்லவி ஜெயின் தங்க வைக்கப்பட்டிருப்பதும் விதிகளுக்கு முரணாணது என்பதையும் இங்கே கவனத்தில்கொள்ள வேண்டும்.

பல்லவி ஜெயினின் நேரடி உதவியாளர்களும் கொரோனா சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. மத்தியப்பிரதேச சுகாதாரத்துறையைச் சேர்ந்த 83 அதிகாரிகளிடத்தில் சோதனை நடத்தப்பட்டதில் 40 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல, 12 போலீஸாரையும் கொரோனா தொற்று தாக்கியுள்ளது . இதனால், மத்தியப்பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராட அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றிருந்த 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மூத்த அதிகாரிகள், உதவியாளர்கள், பியூன்கள் வரை தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தின் மனித உரிமை ஆணையம், அந்த மாநில முதன்மைச் செயலர் இன்பால் சிங் பைன்ஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் விடுத்துள்ளது. 'கொரோனா தொற்று அறிகுறியுடன் பல்லவி ஜெயின் கூட்டங்களில் பங்கேற்றது. கோவிட் சோதனையை நடத்த ஒத்துழைப்பு தராதது ஏன்' என்பது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

கெஸ்ட் ஹவுஸில் பல்லவி ஜெயின் சிகிச்சை
கெஸ்ட் ஹவுஸில் பல்லவி ஜெயின் சிகிச்சை

மத்தியப்பிரதேசத்தில் இதுவரை 313 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 14 பேர் இறந்து போனார்கள். போபால் நகரில் மட்டும் 83 பேரை கொரோனா தாக்கியுள்ளது. அதில், 40 பேர் சுகாதாரத்துறை அதிகாரிகள். 20 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள். 12 போலீஸார், பொது மக்களில் 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளிடத்தில் கொரோனா பரவ பல்லவி ஜெயின் காட்டிய அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டை சமூக ஆர்வலர்கள் முன் வைத்துள்ளனர். அதிகாரிகள் பயன்படுத்திய ஃபைல்கள் வழியாக கொரோனா தொற்று ஒருவரிடத்திலிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவியிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

சாதாரண பொதுமக்கள், கடை நிலை ஊழியர்கள் வரை கொரோனா விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படும் நிலையில், மாநிலத்தின் உயர் அதிகாரிகள் அதுவும் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்களே இப்படி நடந்து கொண்டிருப்பது, அலட்சியத்தின் உச்சத்தைத் தவிர வேறென்ன?

`தயவுசெய்து அரசியலாக்காதீர்கள்... பிணப்பைகள்தான் வேண்டுமா?!' - ட்ரம்ப் மிரட்டலுக்கு WHO பதில்
அடுத்த கட்டுரைக்கு