இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை தொடர்ந்து நீடித்துவருகிறது. இதற்காக எத்தனையோ முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும்கூட இதுவரை முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், அருணாசலப்பிரதேசத்தில் இந்தியச் சிறுவன் ஒருவன் சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருகிறது. அருணாச்சலப்பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்துக்குட்பட்ட ஜிடோ என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மிரம் தரோன் (17), ஜானி யாயிங் (27). இவர்கள் இருவரும் பக்கத்திலுள்ள துதிங் பகுதிக்கு வேட்டையாடச் சென்றிருக்கிறார்கள். அது சீன எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள இடம் எனக் கூறப்படுகிறது. அப்போது, வேட்டைக்குச் சென்ற இரண்டு பேரையுமே சீன ராணுவம் சிறைபிடித்துவிட்டதாகவும், அங்கிருந்து ஜானி யாயிங் மட்டும் தப்பி வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், சிறுவன் மிரம் தரோன் மட்டும் வீடு திரும்பவில்லை. அவனைச் சீன ராணுவம் கடத்திச் சென்றதாகத் தெரிகிறது. இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன ராணுவத்திடமிருந்து சிறுவன் மிரம் தரோனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தொகுதியின் எம்.பி தபிர் காவோ, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக உள்துறை இணை அமைச்சர் நிஷித் பிரமாணிக்கிடம் தான் எடுத்துரைத்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அந்தச் சிறுவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை. இதனால் தொடர்ந்து பதற்றம் நீடித்துவருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், ``குடியரசு தினத்துக்கு சில நாள்களுக்கு முன்பு, இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் சீனாவால் கடத்தப்பட்டான். நாங்கள் மிரம் தரோனின் குடும்பத்துடன் நிற்கிறோம், நம்பிக்கையைக் கைவிட மாட்டோம். தோல்வியை ஏற்க மாட்டோம். பிரதமரின் மௌனமே அவருடைய அறிக்கை. அவர் இந்த விவகாரத்தைப் பொருட்படுத்தவில்லை” என்று ட்வீட் செய்துள்ளார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கமளித்திருக்கும் இந்திய ராணுவம், ``மூலிகைகள் சேகரிக்கும் மற்றும் வேட்டையாடும் ஒரு நபர் வழி தவறிவிட்டார் என்று எச்சரிப்பதற்காக 'ஹாட்லைன்' மூலம் சீன ராணுவத்தை அணுகியிருக்கிறோம். அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன" என்று தெரிவித்ததாகப் பிரபல செய்தி நிறுவனமான என்.டி.டி.வி குறிப்பிட்டிருக்கிறது.