Published:Updated:

`இப்போது விற்றால்தான் வாங்குவார்கள்; எதிர்காலத்தில் சிரமம்!' -ஏர் இந்தியா குறித்து ஹர்தீப் சிங்

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்வசம் ஒப்படைக்கவில்லை என்றால் வருங்காலத்தில் இதை இயக்குவது மிகவும் சிரமமாக இருக்கும் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

 ஏர் இந்தியா
ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 60,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதுகுறித்து அண்மையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``ஏர் இந்தியா நிறுவனம் நடப்பு நிதி ஆண்டிலேயே விற்பனை செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கிறோம். நிதி நெருக்கடியால் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை வாங்க முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்” என்றார்.

இவ்விரு பொதுத்துறை நிறுவனங்களையும் விற்பதால் 2019-20-ம் நிதி ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதியைத் திரட்டலாம் என்பது மத்திய அரசின் திட்டம்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

ஏர் இந்தியாவை தனியார்மயமாக்குவதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் திட்டத்தால் ஏர் இந்தியா ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. `ஊழியர்களின் பிரச்னைகளைத் தீர்க்காமல் நிறுவனத்தை விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம்' என்கிறார்கள் ஏர் இந்தியா ஊழியர்கள். ``ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்வசம் ஒப்படைக்கவில்லை என்றால் வருங்காலத்தில் இதை இயக்குவது மிகவும் சிரமமாக இருக்கும்" என்கிறார் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி.

ஏர் இந்தியா விவகாரம் தொடர்பாகப் பேசிய ஹர்தீப் சிங், ``ஏர் இந்தியாவை இப்போது விற்றால் அதை வாங்க ஏலத்துக்கு நிறைய பேர் வருவார்கள். நாம் அதை விற்க வேண்டாம் எனக் கருத்தியல்ரீதியில் முடிவெடுத்தால் எதிர்காலத்தில் அதை இயக்குவது மிகவும் சிரமமாக இருக்கும்.

இதற்கு முன்னதாக ஏர் இந்தியா நிறுவனம் சந்தித்த நஷ்டத்தை ஈடு செய்வதற்காகவும் மேற்கொண்டு இயக்குவதற்கும் நிதித்துறையை நாடினோம். இப்போது நிதியமைச்சகத்திலிருந்து எந்தப் பணமும் பெறுவதில்லை. இனி வங்கிக்குத்தான் செல்ல வேண்டும். தனியார்வசம் ஒப்படைக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் இதை இயக்குவது மிகவும் சிரமம்.

ஹர்தீப் சிங் புரி
ஹர்தீப் சிங் புரி

ஊழியர்கள் வருத்தப்படுவது போல் எதுவும் நடக்காது. அவர்களுக்கு நியாயமாக நடக்க கடமைப்பட்டுள்ளோம். விமான சேவையைப் பெறுபவர்களுக்குப் பயிற்சி பெற்ற ஊழியர்கள் தேவைப்படுவார்கள். ஏர் இந்தியாவை தனியார்மயமாக்க அரசாங்கம் உறுதியாக உள்ளது” என்றார் விரிவாக.