Published:Updated:

விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை; முடிக்கப்படவிருக்கிறதா திஷா ரவி `டூல்கிட்' வழக்கு?

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடர்பாக `டூல்கிட்' வெளியிட்டதாக பெங்களூருவைச் சேர்ந்த காலநிலை செயல்பாட்டாளர் திஷா ரவி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி சைபர் கிரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

திஷா ரவி கைது செய்யப்பட்ட `டூல்கிட்' வழக்கு விசாரணையில், ஸூம் மற்றும் கூகுள் நிறுவனங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வராததாலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததாலும், அவ்வழக்கு விரைவில் முடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக `இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடர்பாக `டூல்கிட்' வெளியிட்டதாக பெங்களூருவைச் சேர்ந்த காலநிலை செயல்பாட்டாளர் திஷா ரவி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி சைபர் கிரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவருடன் மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மற்றும் பொறியாளர் சாந்தனு ஆகியோரும் அந்த டூல்கிட்டை உருவாக்கித் திருத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். தொடர்ந்து, திஷா ரவி டூல்கிட்டை உருவாக்க உதவியதாகவும், இந்திய அரசுக்கு எதிரான அதிருப்தியை பரப்புவதற்காக காலிஸ்தானியின் பிரிவினைவாத அமைப்பான `பொயடிக் ஜஸ்டிஸ்' அறக்கட்டளையுடன் இணைந்து இவர்கள் திட்டமிட்டுள்ளனர் எனவும் போலீஸார் குற்றம் சாட்டினர்.

திஷா ரவி
திஷா ரவி
`டூல் கிட்’ வழக்கு... திஷா ரவி கைது ஏன்?; டெல்லி போலீஸின் குற்றச்சாட்டுகள்! - என்ன நடந்தது?

இதனையடுத்தது அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124ஏ-ன் கீழ் தேச துரோக வழக்கும், கலவரத்தைத் தூண்டும் நோக்கம், குற்றவியல் சதி எனப் பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்டு காவல்துறையினரின் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் டெல்லி நீதிமன்றம் திஷாவிற்கு ஜாமீன் வழங்கியதுடன், இவருக்கு எதிரான காவல்துறையினர் போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை எனவும் கூறியது.

தற்போது தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்த வழக்கை முடிப்பதற்கான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படலாம் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த செய்தி நிறுவனத்திடம் பேசியிருக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர், `பி.எஃப்.ஜெ அமைப்பை சேர்ந்த மோ தளிவாலுடன் திஷா ரவி ஸூம் அழைப்பில் கலந்துரையாடிதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஸூம் நிறுவனத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் சைபர் செல் கடிதம் எழுதியது. ஆனால் இதுநாள் வரை அதற்கான எந்த பதிலையும் ஸூம் நிறுவனம் அனுப்பவில்லை.

தொடர்ந்து, டூல்கிட் ஆவணம் பற்றிய தகவலுக்கு புலனாய்வாளர்கள் கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொண்டனர். அங்கிருந்தும் இதுவரை பதில் இல்லை. மேலும் ஜேக்கப் மற்றும் சாந்தனு பணிபுரியும் `எஸ்டிங்ஷன் ரிபெல்லியன்' என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த குழுவும் இந்த வழக்குத் தொடர்பாக எந்த பதிலையும் கூறவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.

திஷா ரவி
திஷா ரவி
சூழலியல் ஆர்வலரா... தீவிரவாத ஆதரவாளரா... உண்மையில் யார் இந்த திஷா ரவி?!

மேலும், அவர் கூறுகையில் ஜாமீனில் வெளியே வந்த திஷா ரவியிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் அவரது பங்களிப்பு உள்ளது என்பதை நிரூபிக்கமுடியவில்லை என்று அறிக்கையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இந்த வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலையில், எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் வழக்கை முடிப்பதற்கான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு