மத்தியப் பிரதேச மாநிலம், இந்தோர் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் தன் குடும்பத்துடன் வசித்துவந்திருகிறார். அவர் பெற்றோர் கூலித்தொழில் செய்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், அந்த சிறுமி 35 வயது நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இதனால், அந்த சிறுமியின் பிறப்பு உறுப்பு கிழிந்து மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியின் உடலில் குடலுக்கும்-பிறப்பு உறுப்புக்கும் இடையே துளை ஏற்பட்டு, இயற்கை கழிவு வெளியேற மருத்துவர்கள் `Colostomy bag' எனும் பையைப் பொருத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, சிறுமிக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் முடிந்திருக்கும் நிலையில், இன்னும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவரின் உடல்நிலை இருக்கிறது.

ஆனால், சிறுமியின் பெற்றோர் தங்களின் ஏழ்மை நிலை காரணமாக மகளின் சிகிச்சைக்கு பணமின்றி பரிதவித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், தி.மு.க-வைச் சேர்ந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் பாதிக்கப்பட்ட சிறுமியை நேரில் சந்தித்து, அவருக்கு சிகிச்சைக்காக 1 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர், ``35 வயது நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அந்த 11 வயது சிறுமி இன்னும் பருவவமடையாதவர். என்ன நடந்தது என்றே தெரியாமல் சிகிச்சையில் இருக்கிறார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அவருக்கு மத்தியப் பிரதேச அரசு எந்த உதவியும் வழங்கியதாகத் தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர் மட்டும் ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை வழங்கியதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்கள் மூலம் உதவி கேட்டிருந்த அந்த குடும்பத்தை நேரில் சந்தித்து தற்போது சிகிச்சைக்காக 1லட்சம் ரூபாய் வழங்கியுள்ளேன். அவர்கள் விரும்பினால் தமிழ்நாடு அல்லது டெல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்வோம்" என வீடியோ பதிவில் தெரிவித்திருக்கிறார்.