Published:Updated:

பிறந்த 3-ம் நாள் தாயிடமிருந்து பறிக்கப்பட்ட குழந்தை; போராடி மீட்ட அனுபமா!

டி.என்.ஏ பரிசோதனை முடிவில் அது அனுபமா மற்றும் அஜித்தின் குழந்தை என்பது உறுதியானது. இதையடுத்து அனுபமா குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்தார். அதை நிறைவேற்றும் விதமாகக் குழந்தையைக் காண அனுமதி அளிக்கப்பட்டது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பேரூர்கடை சி.பி.எம் ஏரியா கமிட்டி உறுப்பினரான ஜெயச்சந்திரனின் மகள் அனுபமா. எஸ்.எஃப்.ஐ அமைப்பின் பொறுப்பில் இருந்த அனுபமாவுக்கும், டி.ஒய்.எஃப்.ஐ நிர்வாகி அஜித்துக்கும் காதல் மலர்ந்தது. ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்துக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தார் அஜித். ஆனால் அவர் விவகாரத்துப் பெறுவதற்கு முன்னர் அனுபமா கர்ப்பம் ஆனார். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2020-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி அனுபமாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அனுபமாவின் பெற்றோருக்கு இதில் விருப்பமில்லை என்பதால், அனுபமாவின் சகோதரியின் திருமணம் முடிந்தபிறகு அவரிடம் குழந்தையைத் தருவதாகக் கூறி, பிறந்த மூன்றாம் நாளில் அனுபமாவிடமிருந்து குழந்தையை அவரின் பெற்றோர் பெற்றுள்ளனர். ஆனால் சகோதரியின் திருமணம் முடிந்த பிறகும் குழந்தையை அனுபமாவிடம் பெற்றோர் கொடுக்கவில்லை.

அனுபமா - அஜித்
அனுபமா - அஜித்
பச்சிளம் குழந்தை தத்து கொடுக்கப்பட்ட விவகாரம்; இடைக்கால தடை விதித்த கேரள நீதிமன்றம்!

சகோதரியின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு வீட்டைவிட்டு வெளியேறிய அனுபமா, அஜித்துடன் சேர்ந்து வசித்தார். பின்னர் தனது குழந்தையை மீட்க வேண்டும் எனக் கேட்டு சி.பி.எம் நிர்வாகிகள், டி.ஜி.பி, முதல்வர் என அனைவரிடமும் முறையிட்டார். மேலும் பேரூர்கடை காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். ஆனாலும் அவருக்குக் குழந்தை கிடைக்கவில்லை. அதே நேரம், அனுபமாவின் குழந்தை ஆந்திர மாநிலத்தில் ஒரு தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

குழந்தையை மீட்க ஆறு மாதங்களாக மறைமுகமாக நடத்திய போராட்டத்தில் வெற்றி கிடைக்காததால், ஊடகங்கள் மூலம் தனது பிரச்னையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார் அனுபமா. இது பலதரப்பிலும் விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த அக்டோபர் 19-ம் தேதி குழந்தை காணாமல் போனதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன், விசாரணையையும் தொடங்கினர். கேரள அரசு சார்பில், அனுபமாவின் குழந்தை தத்துக்கொடுக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி திருவனந்தபுரம் குடும்பநலக் கோர்ட்டில் மனு சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து குடும்ப நல கோர்ட் அனுபமாவின் குழந்தை தத்துக்கொடுக்கப்பட்டதற்கு இடைக்கால தடைவிதித்தது. மேலும் குழந்தையை மீட்கும் முயற்சியில் கேரள அரசு இறங்கியது. விரைந்து குழந்தையை மீட்க வேண்டும் என குழந்தைகள் பாதுகாப்புக் குழு அலுவலகம் முன் அனுபமா தொடர் போராட்டம் நடத்திவந்தார்.

குழந்தையைத் தேடும் தாய் அனுபமா
குழந்தையைத் தேடும் தாய் அனுபமா

கூடவே, `குழந்தைகள் பாதுகாப்புக் குழு மாநிலத்துக்குள் குழந்தையைத் தத்துக்கொடுக்கலாம். மாநிலத்துக்கு வெளியே குழந்தையைத் தத்துக்கொடுக்க லைசென்ஸ் இருக்கிறதா?' என்ற அனுபமாவின் கேள்வி விவாதத்தைக் கிளப்பியது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, கேரளாவில் இருந்து ஆந்திர தம்பதிக்குத் தத்துக்கொடுக்கப்பட்ட, அனுபமாவின் குழந்தை என சந்தேகிக்கப்பட்ட குழந்தையை திருவனந்தபுரத்துக்கு அழைத்து வந்தனர். பாளையத்தில் உள்ள நிர்மலா சிசு பவனில் குழந்தை பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குழந்தை மற்றும் அனுபமா, அஜித் ஆகியோரது டி.என்.ஏ பரிசோதனைக்கான சாம்பிள் ராஜீவ்காந்தி சென்டர் ஃபார் பயோடெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் நேற்று முன் தினம் எடுக்கப்பட்டது. நேற்று அதற்கான ரிசல்ட் குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டி.என்.ஏ பரிசோதனை முடிவில், அந்தக் குழந்தை அனுபமா மற்றும் அஜித்தின் குழந்தை என்பது உறுதியானது. இதையடுத்து, அனுபமா தன் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்தார். அதை நிறைவேற்றும் விதமாக குழந்தையைக் காண அனுமதி அளிக்கப்பட்டது. நிர்மலா சிசு பவனில் அனுபமா மற்றும் அஜித் அனுமதிக்கப்பட்டனர். செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

போராட்டம் நடத்திய அனுபமா
போராட்டம் நடத்திய அனுபமா
பிறந்த 3-ம் நாளில் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட சிசு; சட்டவிரோதமாக தாத்தாவால் தத்துக்கொடுக்கப்பட்டதா?

குழந்தையைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபிறகு கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பேசினார் அனுபமா. ``குழந்தையைக் காண வாய்ப்புக் கிடைத்ததால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். குழந்தையைப் பார்த்து விட்டு அங்கேயே விட்டுவிட்டு வந்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்னும் இரண்டு நாள்களில் டி.என்.ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைப்பதாகவும், குழந்தையை ஒப்படைப்பது பற்றி கோர்ட் முடிவு செய்யும் எனவும் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். கோர்ட் மூலம் விரைவில் என் குழந்தை என்னிடம் சேரும் என நம்புகிறேன். என் மகன் நன்றாக இருக்கிறான். அவர்கள் அவனை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள். நாங்கள் பார்க்கும் போது குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அதை பார்த்துவிட்டுத்தான் வந்தேன், வேறொரு பிரச்னையும் இல்லை" என்றார்.

பிறந்த மூன்றாம் நாள் தன்னிடமிருந்து தன் பெற்றோர்களால் பொய் சொல்லிப் பிரிக்கப்பட்டு, தனக்குத் தெரியாமலேயே தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தையை தன் தாய்ப்பாசப் போராட்டத்தால் ஓராண்டுக்குப் பின்னர் கண்டுபிடித்துவிட்டார் அனுபமா. இது அவரது நெடிய போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு