Published:Updated:

`வீடாக மாறிய கார்!’ - கொரோனாவிலிருந்து குடும்பத்தைக் காக்க அரசு மருத்துவரின் அசத்தல் முயற்சி

மருத்துவர் சச்சின் நாயக்
மருத்துவர் சச்சின் நாயக் ( Twitter )

மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கும் அறிகுறி உள்ளவர்களுக்கும் சிகிச்சை அளிப்பதால், பணி நேரம் முடிந்ததும் காரை தனது அறையாக மாற்றி ஓய்வு எடுத்துக்கொள்கிறார், மருத்துவர் ஒருவர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், போற்றப்படவேண்டிய மருத்துவர்கள் ஆங்காங்கே தாக்கப்படும் சம்பவங்களும், புறக்கணிக்கப்படும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றன. வாடகை வீட்டில் வசிக்கும் மருத்துவர்கள் சிலரை வீட்டின் உரிமையாளர்கள் காலி செய்யச் சொல்லும் சம்பவங்களும் டெல்லியில் நடந்தது. மும்பையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிக்கும் மருத்துவப் பணியாளர்கள், தங்களின் தாஜ் ஹோட்டல்களில் தங்கிக் கொள்ளலாம் என டாடா நிறுவனம் தெரிவித்ததிருந்தது.

`மருத்துவர்கள், செவிலியர்கள் தாஜ் ஹோட்டல்களில் தங்கலாம்!’- கொரோனாவுக்கு எதிரான போரில் டாடா தாராளம்
அரசு மருத்துவர்கள்
அரசு மருத்துவர்கள்

இது ஒருபுறம் இருக்க, மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சச்சின் நாயக் என்னும் மருத்துவர், தன் குடும்பத்தினரை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் விதமாகக் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகத் தனது காரிலேயே தங்கியுள்ளார். மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கும், அறிகுறி உள்ளவர்களுக்கும் சிகிச்சை அளித்துவிட்டு, பணி நேரம் முடிந்ததும் காரை தனது அறையாக மாற்றி ஓய்வு எடுத்துக்கொள்கிறார்.

சச்சின், தனது வீட்டில் உள்ளவர்களிடம் போன் மூலமே பேசுகிறார். தேவைப்பட்டால் வீடியோ கால் மூலமும் உரையாடல் நடக்கும். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அணிந்துகொள்ளவேண்டிய பாதுகாப்பு உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல் கிடைத்த நாள் முதலே, அவர் காரில் வசிக்கத் தொடங்கியுள்ளார். இவர் காரில் வசிக்கும் புகைப்படம் செம வைரல்.

இந்த வைரல் புகைப்படம், மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கண்ணிலும் படாமல் இல்லை. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள முதல்வர், ``மத்தியப்பிரதேச மக்களும் நானும், கொரோனாவைரஸுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள உங்களுக்கும் உங்களைப்போன்ற மற்றவர்களுக்கும் பெரிய சல்யூட். இதே மன உறுதியுடன் நாம் முன்னேறிச் செல்வோமேயானால், இந்தப் போரில் நாம் மிக விரைவில் வென்றுவிடலாம். சச்சின், உங்களின் மன உறுதிக்கு மீண்டும் ஒரு சல்யூட்” என்றார்.

`தயவுசெய்து அரசியலாக்காதீர்கள்... பிணப்பைகள்தான் வேண்டுமா?!' - ட்ரம்ப் மிரட்டலுக்கு WHO பதில்

ஒருபுறம் மருத்துவர் சச்சினின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்தாலும், மறுபுறம் அரசாங்கம் மருத்துவர்களுக்கு உரிய தங்கும் வசதியை ஏற்படுத்தி தரவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர். இதுபோன்ற எமர்ஜென்ஸி காலத்தில், காரிலே தூங்குவது ஒரு மருத்துவருக்கு போதுமான ஓய்வை வழங்கிவிடுமா... மருத்துவரின் மன உறுதியைப் பாராட்டிய முதல்வர், இதுபோன்ற மருத்துவர்களும், மற்ற மருத்துவப் பணியாளர்களும் தங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பார் என நம்புவோம்!

அடுத்த கட்டுரைக்கு