Published:Updated:

`30 ஆண்டுகளாகப் பெண்; 9 ஆண்டு திருமண வாழ்க்கை!’ - மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆண் - பெண் மரபணு
ஆண் - பெண் மரபணு

``வயிற்றுவலி தொடர்பாக அவர் சிகிச்சைக்கு வந்திருந்தார். நாங்கள் அதற்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டோம். அவரது உடலுக்குள் விந்தணுக்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்.”

கொல்கத்தாவில், கடந்த 30 ஆண்டுகளாக எந்தவித சிக்கலும் இல்லாமல் பெண் ஒருவர் வாழ்ந்துவந்துள்ளார். சமீபத்தில், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்தப் பெண் சென்றுள்ளார். அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், `அவர் பெண் அல்ல ஆண்’ எனக் கண்டறிந்துள்ளனர்.

22,000 பேரில் ஒருவருக்கு வரக்கூடிய அரியவகை நோயால் அவர் பாதிப்படைந்துள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து அவருடைய 28 வயது சகோதரியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரும் ஆண் என்பது தெரியவந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரபணு ரீதியில் ஆணாக இருந்தாலும், பெண்ணின் உடல் பண்புகளைக் காட்டும் `ஆண்ட்ரோஜன் இன்சென்சிடிவிட்டி சின்ட்ரோம்’ என்ற நோயால்தான் அவர்கள் பாதிப்படைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மரபணு
மரபணு

மேற்கு வங்கத்தின் பிர்பூம் பகுதியைச் சேர்ந்தவர், இந்த 30 வயது பெண். இவருக்குத் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. தனக்கு ஏற்பட்ட கடுமையான வயிற்று வலியின் காரணமாக கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அம்மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் அனுபம் தத்தா மற்றும் சவுமென் தாஸ் ஆகியோர் இவருக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிகிச்சையின்போது, அவரின் உண்மையான அடையாளத்தைக் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக மருத்துவர் தத்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தோற்றத்தின் அடிப்படையில் அவர் பெண்ணாகவே இருக்கிறார். குரல், மார்பகங்கள், பிறப்புறுப்பு ஆகியவை பெண்களுக்கு இருப்பதைப் போலவே இருக்கும். ஆனால், அவருக்கு பிறந்ததில் இருந்தே கர்ப்பப்பை இல்லை. அவருக்கு மாதவிடாயும் ஏற்படுவது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Vikatan

தொடர்ந்து மருத்துவர் தத்தா பேசும்போது, ``வயிற்றுவலி தொடர்பாக அவர் சிகிச்சைக்கு வந்திருந்தார். நாங்கள் அதற்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டோம். அவரது உடலுக்குள் விந்தணுக்கள் இருப்பதைக் கண்டறிந்தோம். உடலில் விந்தணுக்கள் சீராக வளர்ச்சியடைவில்லை. டெஸ்டோஸ்டிரோனும் சுரக்கவில்லை. இதனால், அவரது ஹார்மோன்கள் பெண் தோற்றத்தைக் கொடுத்துள்ளன. மேலும், அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் புற்றுநோய் இருப்பதையும் கண்டறிந்துள்ளோம். தற்போது, அவருக்கு கீமோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரது உடல்நிலையும் சீராக உள்ளது” என்று கூறியுள்ளார்.

மரபணு
மரபணு

சிகிச்சைக்கு வந்த நபர் இதனை அறிந்தபோது, அவரது எதிர்வினை குறித்தும் மருத்துவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். அதற்குப் பதிலளித்த மருத்துவர்கள், ``ஒரு பெண்ணாகவே அவர் வளர்ந்துவந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக ஆண் ஒருவருடன் திருமணம் செய்து வசித்துவந்துள்ளார். அவர்களது வாழ்க்கையைத் தொடர்வது தொடர்பான மனநல ஆலோசனைகளை அவருக்கும் அவரது கணவருக்கும் அளித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.

கடந்தகாலத்தில் இவர்கள் பலமுறை கருத்தரிக்க முயன்றபோது தோல்வி அடைந்ததாகவும், நோயாளியின் உறவினர்கள் இரண்டு பேருக்கு இத்தகைய உடல் பிரச்னை இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு