Published:Updated:

மருத்துவக் கலந்தாய்வு பிரச்னை: டெல்லியில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்திற்கு அரசின் பதில் என்ன?

Doctors Protest
News
Doctors Protest ( Manish Swarup | AP Photo )

டெல்லியில் மருத்துவ முதுகலை படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கையை உடனே தொடங்கவேண்டும் என்று கோரி பயிற்சி டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் பயிற்சி டாக்டர்கள், முதுகலைப்படிப்புக்கான கலந்தாய்வை உடனே தொடங்கவேண்டும் என்று கோரி கடந்த 12 நாள்களாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சி டாக்டர்கள் திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்துக்கு ஊர்வலமாகச் செல்ல முயன்ற போது டெல்லி போலீஸார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதோடு, நூற்றுக்கணக்கானோரை கைது செய்தனர். செவ்வாய்க் கிழமை டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனை பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தின்போது போலீஸாருடன் கைகலப்பில் ஈடுபட்டனர். போலீஸார் மருத்துவமனையின் அனைத்து வாசல்களையும் அடைத்துவிட்டு டாக்டர்கள் மீது தடியடி நடத்தினர். டெல்லி மவுலானா ஆஷாத் மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாகப் பணியாற்றுவார்கள் முதுகலை மருத்துவ மாணவர்கள். முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு என 3 பேட்ச் மருத்துவர்களும் பணியாற்றும் இடத்தில், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக 2 பேட்ச் மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றும் நிலை.

Doctor (Representational Image)
Doctor (Representational Image)
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொரோனா, நீட் கவுன்சலிங்கில் முன்னேறிய பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு (EWS) விவகாரம் நீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் உள்ளது என இவைதான் மாணவர் சேர்க்கை நடைபெறாததற்குக் காரணம். ஆக, இந்த ஆண்டுக்கான நீட் கவுன்சலிங் நடைபெறாததால், புதிய மாணவர்களும் வராமல்போல, தற்போது பணியிலிருக்கும் மாணவர்களுக்கு அது கூடுதல் பணிச்சுமையானது.

இந்நிலையில், தற்போது மூன்றாமாண்டு மாணவர்களும் தேர்வுகள் காரணமாக பணியிலிருந்து விலக, 3 பேட்சின் வேலையை ஒரு பேட்ச் பயிற்சி மருத்துவர்கள் மட்டுமே செய்ய வேண்டிய கட்டாயம். இதனால், ஒவ்வொருவரும் சுமார் 36 மணி நேரத்திற்கும் மேல் பணி செய்வது, மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுமுறையே இல்லாமல் பணியாற்றுவது எனத் தங்கள் பணி அழுத்தங்களை சொல்லிப் போராடுகிறார்கள் மருத்துவர்கள். இதனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து பயிற்சி டாக்டர்கள் சங்கத்துடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் போலீஸார் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு எழுத்துபூர்வமாக மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும், மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு கவுன்சலிங் நடத்தும் தேதியை முடிவு செய்து அறிவிக்கவேண்டும் என்றும் பயிற்சி டாக்டர்கள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக அரசு நியமித்துள்ள கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாணவர்களிடம் தெரிவித்தார்.

Doctors Protest
Doctors Protest
Manish Swarup | AP Photo

அதோடு போராட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையவில்லை என்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பயிற்சி டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட மறுத்த டாக்டர்கள் சப்தர்ஜங் மருத்துமனையில் தொடர்ந்து புதன் கிழமையும் போராட்டம் நடத்தினர். இதனால் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

இதற்கிடையே பயிற்சி டாக்டர்களின் போராட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதால் ஏற்கெனவே இருக்கும் டாக்டர்களுக்கு மருத்துவமனையில் கடுமையான பணிச் சுமை ஏற்பட்டுள்ளது.