Published:Updated:

`பொம்மைக்கும் உனக்கும் சிகிச்சை!' - டெல்லிக் குழந்தையை வழிக்குக் கொண்டுவந்த`வாவ்' யோசனை

ராம் பிரசாத்

டெல்லியில் காலில் காயம் ஏற்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக பொம்மைக்கு சிகிச்சை அளித்து மருத்துவர்கள் குழந்தையை சமாதானம் செய்துள்ளனர்.

child
child ( Ani )

டெல்லியைச் சேர்ந்த 11 மாதக் குழந்தைக்குக் கால் மூட்டில் பிரச்னை ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவப் பரிசோதனையில் குழந்தைக்குக் கால் உடைந்திருந்தது தெரியவந்தது. குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். கால் வலியால் துடித்த குழந்தை சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தர மறுத்தது. ஒரு வயதுகூட நிரம்பாத குழந்தைக்கு சமாதானம் கூற முடியாமல் மருத்துவர்கள் தவித்தனர். குழந்தையும் தொடர்ந்து வலியால் அழுதுகொண்டே இருந்தது. சிகிச்சை அளிப்பது தாமதமானதை உணர்ந்த குழந்தையின் தாய் ஒரு யோசனை கூறியுள்ளார். அவரது யோசனைப்படி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். குழந்தையும் அவர்களுக்கு நன்கு ஒத்துழைப்பு வழங்கியது.

CHILD Under treatment
CHILD Under treatment

குழந்தை பிறந்தது முதல் ஒரு பொம்மையுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது. எனவே, அந்த பொம்மைக்குக் குழந்தையைப் போல சிகிச்சை கொடுக்கலாம். பொம்மைக்குச் செய்வதை கண்டால் தனக்கு சிகிச்சை அளிக்க குழந்தையிடமிருந்து எதிர்ப்பு இருக்காது எனக் கூறியுள்ளார். அதன்படியே முதலில் பொம்மைக்கு சிகிச்சையளித்தனர். பிறகு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது பொம்மையும் குழந்தையும் ஒரே பெட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய குழந்தையின் தாயார், ``எங்களுக்கு குழந்தை பிறந்ததிலிருந்து அவளுக்கு பொம்மையைக் காட்டி விளையாட்டுக் காட்டுவோம். குழந்தை வளர ஆரம்பித்ததும் அந்த பொம்மையுடன் அதற்கு ஒரு நெருக்கம் ஏற்பட்டு விட்டது. அந்த பொம்மையை தனது தோழியாக நினைத்துக்கொண்டது.

வலியால் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால். இதையடுத்து மருத்துவர்களிடம் பொம்மைக்கும் அவளுக்குமான நெருக்கத்தை எடுத்துக்கூறி பொம்மைக்கு சிகிச்சை அளிக்கும்படி கூறினேன். மருத்துவர்களும் அவ்வாறே செய்தனர். எனது மகளும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுத்தாள்” என்றார்.