Published:Updated:

`2 வருட வலி; விடை கிடைக்காத புதிர்!' -மருத்துவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்

அதிகமாக வீட்டு வேலைகள் செய்வதால் இந்த வலி இருப்பதாக நினைத்துள்ளார். ஆனால், கடந்த சில நாள்களாக அந்த வலி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்துள்ளது.

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை ( மாதிரிப் புகைப்படம் )

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு அருகில் உள்ள புன்ஜகுட்டா பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதுப் பெண்ணான ஆஸ்மா பேகம். ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தற்போது வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக ஆஸ்மாவுக்கு முதுகு வலி இருந்துள்ளது.

முதுகு வலி
முதுகு வலி
மாதிரிப் புகைப்படம்

அதிகமாக வீட்டு வேலைகள் செய்வதால் இந்த வலி இருப்பதாக நினைத்துள்ளார். ஆனால், கடந்த சில நாள்களாக அந்த வலி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்துள்ளது. அதனால், தன் பகுதியில் உள்ள நிம்ஸ் (NIMS) மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் முதுகில் கட்டி போன்று உள்ளது. அதனால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

கழுத்தை துளைத்த கம்பி... 4 மணி நேரம் ஆபரேஷன்..!- வாலிபருக்கு உயிர் கொடுத்த மதுரை அரசு மருத்துவர்கள்

மருத்துவர்களின் ஆலோசனைப்படி கடந்த சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு ஆஸ்மாவுக்கு அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது. ஆனால், அவரது முதுகில் கட்டிக்குப் பதிலாகத் துப்பாக்கிக் குண்டு இருந்துள்ளதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அதை அகற்றிவிட்டு அவருக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்கியுள்ளனர். இதையடுத்து ஆஸ்மா சீரான உடல்நிலைக்குத் திரும்பியுள்ளார்.

துப்பாக்கிக் குண்டு
துப்பாக்கிக் குண்டு
மாதிரிப் புகைப்படம்

பின்னர் ஆஸ்மாவின் உடலில் எப்படிக் குண்டு வந்துள்ளது என மருத்துவர்கள் அவரது பெற்றோரிடம் கேட்டுள்ளனர். ஆஸ்மாவிடமும் அந்தக் கேள்விக்குப் பதில் இல்லாததால் உடனடியாக மருத்துவமனை தரப்பிலிருந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரம் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த காவலர்கள் ஆஸ்மாவிடமும் அவரது பெற்றோரிடமும் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அனைவரும், `குண்டு எப்படி ஆஸ்மாவின் உடலில் வந்தது எனத் தெரியவில்லை' என்ற ஒற்றை பதிலை மட்டுமே அளித்துள்ளனர்.

இதையடுத்து ஆஸ்மாவின் உடலிலிருந்து அகற்றப்பட்ட குண்டை சோதனை செய்ததில் அது நாட்டுத் துப்பாக்கியின் குண்டு என்பது தெரியவந்துள்ளது. அதைத் தடயவியல் துறைக்கு அனுப்பி பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருந்தும் ஆஸ்மாவின் உடலில் எப்படி துப்பாக்கிக் குண்டு இருந்தது என்ற கேள்விக்கு மட்டும் விடை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.