Published:Updated:

சீன வியூகத்தை எதிர்கொள்ள மீண்டும் `டோக்லாம் குழு’ -லடாக் விவகாரத்தில் முன்னிறுத்தும் மோடி

டோக்லாம் விவகாரத்தின்போது பிபின் ராவத் அப்போது, ராணுவத் தளபதியாவும் ஜெய்சங்கர் இந்திய வெளியுறவுத்துறையின் செயலாளராகவும் இருந்தார்.

சீனாவில் முதல் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தற்போதுதான் லாக் டெளன் என்னும் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளைக் கொண்டுவந்து இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த சூழலிலும் பொருளாதாரம் சார்ந்து இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழலுக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

கொரோனா
கொரோனா

ஆனால், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து கிட்டத்தட்ட முழுமையாக மீண்டு விட்ட சீனா தற்போது அதன் வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டது. இந்த மாதம் முதலே சீனா, இந்திய எல்லைப் பகுதிகளில் அதிக அளவில் படைகளைக் குவித்தது. லடாக் எல்லைப் பகுதியில் சீன ஹெலிகாப்டர்கள் பறந்ததாகவும் தகவல்கள் வெளியாயின. இந்தியாவில் லடாக்கில், சீனா எல்லைப் பகுதிகளில் இந்தியா ஏற்படுத்த இருக்கும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனா எச்சரித்து வருகிறது.

சீன ராணுவம் குவிக்கப்படும் அதே நேரத்தில் எல்லையில் இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டது. இது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. நேற்று எல்லைப்பகுதியில் சீன ராணுவம், இந்திய ராணுவ வீரர்கள் மீது முறையற்ற தாக்குதலில் ஈடுபட்டது. துப்பாக்கி போன்ற போர் ஆயுதங்கள் கொண்டு தாக்காமல், கம்பிகள், கற்கள், முள்கம்பி முதலியன கொண்டு இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா
`அமெரிக்கா.. இந்தியா.. தைவான்.. ஹாங்காங்!’ - போருக்குத் தயாராகச் சொல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்

இதனிடையே சீனா அதிபர் ஜி ஜின்பிங், ``ராணுவப் படைகள் பயிற்சியை வலுப்படுத்த வேண்டும். அசாதாரண சூழ்நிலைகள் நிலவி வருவதால் போருக்குத் தயாராக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும், சீன அதிபராகவும், லட்சக்கணக்கான ராணுவ வீரர்களைக் கொண்ட ராணுவத்தின் தலைவராகவும் விளங்கும் ஜி ஜின்பிங், பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சமீபத்தில் லடாக் எல்லைப் பகுதியில் இருக்கும் ராணுவ விமான தளத்தை சீனா விரிவுபடுத்தியுள்ளது, சாட்டிலைட் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய அரசின் ஒட்டுமொத்த கவனமும் கொரோனா தடுப்பில் இருக்கும் நிலையில் தற்போது எல்லைப் பிரச்னை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படுகிறது. படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பின்னர் பிரதமர் மோடியுடனும் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டார். எல்லையில் சீனாவின் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் பதில் எந்த மாதிரி இருக்க வேண்டும் என மோடி தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிபின் ராவத்
பிபின் ராவத்

இதனிடையே அதிக உயரத்தில் போர் புரியும் ஒரு ராணுவக் குழுவை இந்தியா லடாக் பகுதிக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படை, ஏற்கெனவே சீனாவின் திபெத்திய தன்னாட்சிப் பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டது. சீனாவின் செயல்பாடுகளுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் செயல்படத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்தியா இந்த விவகாரத்தை டோக்லாம் விவகாரம் போன்றே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நினைக்கிறது.

நேற்று பிரதமர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, லடாக் விவகாரத்தை இந்தியா முறைப்படி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க விரும்புகிறது. என்றாலும் அவர்கள் அத்துமீறும்போது, அதை அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. அதன் காரணமாகவே லடாக் பகுதியில் இந்தியாவும் தனது பலத்தை அதிகரித்துள்ளது.

மோடி, அஜித் தோவல்
மோடி, அஜித் தோவல்

இந்தியா, பூடான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கக்கூடிய டோக்லாம் பகுதியில் 2017-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக சீனா படைகளைக் குவித்தது. பதிலுக்கு இந்தியாவும் படைகளைக் குவித்தது. அதே நேரத்தில் பேச்சுவார்த்தையும் நடத்தியது. அதனால் போர் நடவடிக்கைகள் இன்றி அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. எனினும் அந்த விவகாரம் 73 நாள்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை சீனா அதிக உறுதியுடன் செயல்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் செயல்பாடுகளுக்குப் பதில் கொடுக்கும் விதமாக டோக்லாம் அணியை மீண்டும் மோடி களமிறக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர்தான் சீனா விவகாரத்தை தற்போது கையாளவுள்ளனர்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

அஜித் தோவால், டோக்லாம் விவகாரத்தை சிறப்பாக கையாண்டார். மேலும் டோக்லாம் விவகாரத்தின் போது பிபின் ராவத், ராணுவ தளபதியாவும் ஜெய்சங்கர் இந்திய வெளியுறவுத்துறையின் செயலாளராகவும் இருந்தார். என்ன மாதிரியான திட்டத்தை இந்தக் குழு கையாளப்போகிறது என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு