Published:Updated:

Unlock 3: `மாநிலங்களுக்கு இடையே, மாநிலத்துக்குள் பயணத்துக்குக் கட்டுப்பாடு கூடாது!' - மத்திய அரசு

`மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்துக்குள்ளேயும் பயணிக்க எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது' என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் தொழில்துறை முடங்கியிருக்கும் நிலையில், பொருளாதாரரீதியாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இதையடுத்து, கடந்த ஜூன் 1-ம் தேதி `Unlock 1’, `Unlock 2’, `Unlock 3’ ஆகிய பெயர்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

ஊரடங்கு - காவல்துறை தீவிர கண்காணிப்பு!
ஊரடங்கு - காவல்துறை தீவிர கண்காணிப்பு!
தே.அசோக்குமார்

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் `Unlock 3’ தளர்வுகள் அமலாகியிருக்கின்றன. இதையடுத்து, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் போன்றவை நாடு முழுவதும் படிப்படியாகத் திறக்கப்பட்டன. அதேநேரம், கல்விக்கூடங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் போன்றவை திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. பெரும்பாலான மாநிலங்கள் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளைத் திறக்க ஆயத்தமாகிவருகின்றன.

இ-பாஸ்: `காரணங்களும் பார்க்காது... ஆவணங்களும் சரிபார்க்காது!’ - எதற்காக இந்த ஆல் பாஸ்?

இந்தநிலையில், `மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்துக்கு உள்ளேயும் பொதுமக்கள் மற்றும் பொருள்களைக் கொண்டு செல்ல எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது’ என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியிருக்கிறார். `இதுபோல், பொதுமக்கள் மற்றும் பொருள்களைக் கொண்டு செல்லக் கட்டுப்பாடுகள் விதிப்பதால், பொருளாதாரரீதியிலும் வேலைவாய்ப்புரீதியிலும் பாதிப்புகள் ஏற்படும்’ என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஊரடங்கு
ஊரடங்கு

அதனால், `மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்துக்குள்ளே மக்கள் பயணம் மேற்கொள்ள அல்லது பொருள்களைக் கொண்டு செல்லத் தனியாக எந்தவித அனுமதியோ, இ-பாஸ் போன்றவையோ வாங்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலையை உறுதி செய்ய வேண்டும்’ எனவும் மத்திய உள்துறை செயலாளர் அறிவுறுத்தியிருக்கிறார்.

`அப்படி விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் மத்திய அரசு அறிவித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறுவதாகும்’ எனவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு