Published:Updated:

`குறைத்து மதிப்பிடக்கூடாது!’ - எல்லைப் பிரச்னையில் இந்தியாவை எச்சரிக்கும் சீனா

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

``இந்திய முன்வரிசை ராணுவ வீரர்கள் ஒப்பந்தங்களை உடைத்து சீன அதிகாரிகளைச் சீண்டும் வகையில் வேண்டுமென்றே எல்லைகளைக் கடந்து வந்துள்ளனர்”

இந்தியா மற்றும் சீனா இடையே உள்ள எல்லைப் பிரச்னைகள் ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதல்களுக்குப் பிறகு கடுமையான விவாதமாக மாறியுள்ளது. இந்த மோதலில் இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல சீனாவிலும் 30-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இறந்தனர். இதனைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது.

இரு நாடுகளும், பேச்சுவார்த்தையின் மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கூறியது. எனினும், பிரதமர் மோடி நேற்று சீனாவுக்கு எச்சரிக்கைவிடுக்கும் வகையில் பேசினார். இதனைத் தொடர்ந்து தற்போது சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இந்தியாவை எச்சரிக்கும்விதமாக ட்வீட் செய்துள்ளார்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூவா சுனிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``இந்திய முன்வரிசை ராணுவ வீரர்கள் ஒப்பந்தங்களை உடைத்து சீன அதிகாரிகளை சீண்டும் வகையில் வேண்டுமென்றே எல்லைகளைக் கடந்துவந்துள்ளனர். சீன அதிகாரிகள் மற்றும் படை வீரர்களின்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். உடல்ரீதியில் நடந்த கடுமையான இந்தத் தாக்குதலால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்தியா தற்போது நிலவும் சூழலைத் தவறாக மதிப்பிடக்கூடாது. தனது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான சீனாவின் உறுதித்தன்மையை இந்தியா குறைத்து மதிப்பிடக்கூடாது” என்று எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.

இந்திய வீரர்கள் எல்லைகளைத் தாண்டியதாக மோதல் நடந்தது முதல் சீனா குறிப்பிட்டு வருகிறது. இந்த மோதல் துப்பாக்கி மோதலாக இல்லாமல் கைகலப்பாக நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

`15,000 அடி உயரத்தில் டென்ட்; விதிமீறிய சீனா!- கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் தொடக்கப்புள்ளி?

எல்லைப் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடி நேற்று பேசுகையில், ``இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால், சீண்டப்படும்போது அதற்கு தக்க பதிலடிகளைக் கொடுக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு. இதில், யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்கக் கூடாது. சீனாவுடன் போராடி இறந்த வீரர்களை நினைத்து நாடு பெருமை கொள்கிறது. இந்த ராணுவ வீரர்களின் தியாகம் வீணாகாது என்பதை நான் இந்த நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். நாங்கள் ஒருபோதும் யாரையும் தூண்டிவிடுவது இல்லை. எங்கள் நாட்டின் இறையாண்மையும் ஒற்றுமையும் எங்களைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானது. அதற்குக் களங்கம் வரும்போதெல்லாம் அதைப் பாதுகாப்பதில் எங்களுடைய திறன்களை நிரூபித்துள்ளோம்” என்று கூறியிருந்தார்.

ராணுவம்
ராணுவம்

இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த கடுமையான மோதலுக்குப் பிறகு எல்லைப் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தியாவின் எச்சரிக்கையும் அதனைத் தொடர்ந்து வரும் சீனாவின் எச்சரிக்கையும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தும்விதமாக உள்ளது எனலாம்.

இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வரும் 19 -ம் தேதி நடைபெற இருக்கிறது.

`பின் நகர்ந்த சீனப் படை; குறையும் பதற்றம்’ - முன்னேற்றம் காணுமா எல்லை விவகாரம்?
அடுத்த கட்டுரைக்கு