Published:Updated:

கியர் போட்ட சிறுவன்... லைசென்ஸை இழந்த பஸ் டிரைவர்!- கேரளாவில் மீண்டும் ஒரு சம்பவம்

பேருந்தில் இருந்தவர்கள் இதை வீடியோவாக எடுத்து பலருக்கும் பகிர்ந்துள்ளனர்.

டிரைவர்
டிரைவர் ( manorama )

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், பெண்களை கியர் மாற்றவிட்டு பேருந்து ஓட்டிய டிரைவர் பற்றிய செய்தி பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது, கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில், டிரைவர் ஒருவர் அருகே அமர்ந்திருந்த சிறுவன் ஒருவனிடம் கியரை போடச்சொல்லி பேருந்தை ஓட்டியுள்ளார். இதனால் அவருடைய டிரைவர் லைசென்ஸைப் பறித்துள்ளது வட்டார போக்குவரத்து அலுவலகம்.

பயணம் முழுவதும் இது தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், பேருந்தில் இருந்தவர்கள் இதை வீடியோவாக எடுத்து பலருக்கும் பகிர்ந்துள்ளனர்

சுற்றுலாப் பேருந்து ஓட்டுநர் சுதேஷ். பயணிகளோடு திருவல்லா மலப்பபாலி சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவருக்கு அருகே ஒரு சிறுவன் அமர்ந்துள்ளான். சிறுவனை கவனித்த சுதேஷ், கியரைப் போடுமாறு அவனிடம் கூறியுள்ளார். சிறுவனும் கியரை மாற்றியிருக்கிறான். இதுவே, பயணம் முழுவதும் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், பேருந்தில் இருந்தவர்கள் இதை வீடியோவாக எடுத்து பலருக்கும் பகிர்ந்துள்ளனர். சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அந்த வீடியோ வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் கிடைத்துள்ளது.

உடனடியாகப் பேருந்தை சிறைபிடித்த வட்டார போக்குவரத்து அலுவலர் ஜி ஜி ஜார்ஜ், சுதேஷின் லைசென்ஸை கேன்சல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் சுதேஷ், 'நான் சாலையில் பேருந்தை இயக்கவில்லை. மைதானத்தில்தான் ஓட்டினேன்" என்று விளக்கமளித்துள்ளார். ஆனால், வட்டார போக்குவரத்து அலுவலகம் தனது பதிவேட்டில், 'சுதேஷ், பத்தனம்திட்டா மாவட்டத்தில், திருவல்லா மலப்பபாலி சாலையில் சென்று கொண்டிருந்தபோது சிறுவன் கியரை மாற்றியதாகப் பதிவுசெய்துள்ளது.