Published:Updated:

`உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்!’- அறிமுகம் செய்த ராஜ்நாத் சிங்

புதிய டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலுடன் ராஜ்நாத்சிங்
புதிய டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலுடன் ராஜ்நாத்சிங்

மும்பையில் இயக்குவதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கும் டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.

மும்பையில், தகிசர் கிழக்கு மற்றும் மேற்கிலிருந்து டி.எம்.நகர் மற்றும் அந்தேரி கிழக்குப் பகுதிக்கு இரண்டு மெட்ரோ ரயில் தடம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இது தவிர சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் கொலாபா-பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் மெட்ரோ ரயில் தடத்திலும் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. கொலாபாவிலிருந்து தொடங்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கார் ஷெட் அமைக்கும் இடத்தைத் தேர்வு செய்வதில் பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.

புதிய டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலுடன் ராஜ்நாத் சிங்
புதிய டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலுடன் ராஜ்நாத் சிங்

இப்போது இந்தப் பிரச்னை நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறது. மும்பையில் இயக்குவதற்கான மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பொறுப்பை மத்திய அரசுக்குச் சொந்தமான பி.இ.எம்.எல் நிறுவனத்துக்கு மும்பை மெட்ரோபாலிடன் மேம்பாட்டு ஆணையம் வழங்கியிருந்தது. தற்போது பி.இ.எம்.எல் நிறுவனம் மெட்ரோ ரயில்களைத் தயாரித்திருக்கிறது. அவை அனைத்தும் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள். கட்டுப்பாட்டு அறையில் இருந்துகொண்டு ரயில்களை இயக்க முடியும். முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில், ஆறு பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும். இதில் ஒரே நேரத்தில் 2,280 பேர் பயணம் செய்ய முடியும்.

2024-ம் ஆண்டு வரை பி.இ.எம்.எல் நிறுவனம் மும்பைக்கு 576 மெட்ரோ ரயில் பெட்டிகளை சப்ளை செய்யவிருக்கிறது. இதன் முதல் பெட்டி இந்த மாத இறுதியில் மும்பைக்கு அனுப்பிவைக்கப்படும். அவை மும்பையிலுள்ள சார்க்கோப் மெட்ரோ ரயில் கார் ஷெட்டில் வைத்து சோதனை செய்யப்படும். புதிதாக தயாரிக்கப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூரிலுள்ள பி.இ.எம்.எல் தயாரிப்பு மையத்தில் தொடங்கிவைத்தார்.

அவர் பேசுகையில், பொறியாளர்கள் மற்றும் டெக்னீசஷியன்களை நினைத்து பெருமைப்படுவதாகப் பாராட்டினார். இந்தத் திட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும் ஆத்மநிர்பார் பாரத்தின் உண்மையான போர்வீரர்கள் என்றும் பாராட்டினார். இந்தியா முழுவதுமுள்ள நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. உள்நாட்டில் மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பி.இ.எம்.எல் நிறுவனம் மெட்ரோ ரயில்களைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு